மேலும்

கொழும்பு பாதுகாப்பு மாநாட்டிற்கு விரைவில் அனைத்துலக அங்கீகாரம்

கொழும்பு பாதுகாப்பு மாநாட்டிற்கு (Colombo Security Conclave) விரைவில் அனைத்துலக அமைப்பு என்ற அங்கீகாரம் வழங்கப்படும் என்றும்,  இந்தியர் ஒருவர் அதன் முதலாவது பொதுச்செயலராகப் பணியாற்றுவார் என்றும், இந்திய வெளியுறவுச் செயலர் விக்ரம் மிஸ்ரி  தெரிவித்துள்ளார்.

இந்திய குடியரசுத் தலைவர் சி.பி.ராதாகிருஷ்ணன் தலைமையில் சிறிலங்காவுக்குப் பயணம் மேற்கொண்டிருந்த இந்தியாவின் உயர் மட்டக் குழுவில் இடம்பெற்றிருந்த இந்திய வெளியுறவுச் செயலர் விக்ரம் மிஸ்ரி, கொழும்பில் ஊடகங்களுக்கு கருத்து வெளியிட்ட போதே இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

இந்தியப் பெருங்கடலில் உள்ள பாதுகாப்பு கவலைகள் மற்றும் இந்தப் பயணத்தின் போது நடைபெற்ற கலந்துரையாடல்கள் குறித்து, விளக்கமளித்த அவர்,

இந்தப் பகுதியில் உள்ள சவால்கள் பகிரப்பட்ட சவால்கள் என்றும், நாம் இருவரும் அவற்றால் பாதிக்கப்படுகிறோம் என்றும் நாம் ஒப்புக்கொள்ள வேண்டும் என நான் நினைக்கிறேன்.

இந்த சவால்கள் ஒரு களத்திற்கு மட்டும் உரியவை அல்ல. அவை பல களங்களிலுள்ள சவால்கள்.

வெளிப்படையாகவே பயங்கரவாத சவால் உள்ளது, கடற்கொள்ளை சவால் உள்ளது, போதைப்பொருள் கடத்தல், மனிதக் கடத்தல், ஆயுதக் கடத்தல் என பல சவால்கள் உள்ளன.

நாம் வாழும் இந்தப் பொதுவான பகுதியும், நம்மைச் சுற்றியுள்ள கடலும் இந்த சவால்களால் சூழப்பட்டுள்ளன.

ஆகவே, கடந்த பல ஆண்டுகளாக இந்தியாவும் சிறிலங்காவும் ஈடுபட்டு வரும் புதுமையான கட்டமைப்புகளில் ஒன்று, கொழும்பு பாதுகாப்பு மாநாடு என்ற தலைப்பின் கீழ் முறைப்படுத்தப்பட முயன்று வருகிறது.

இதில் ஒத்துழைப்பு ஏற்கனவே பல்வேறு மட்டங்களில் சிறப்பாக நடைபெற்று வருகிறது. தற்போது, ​​இதற்காக கொழும்பில் ஒரு இடைக்கால செயலகம் ஏற்கனவே இயங்கி வருகிறது.

கொழும்பு பாதுகாப்பு மாநாட்டின் தலைமையகம் கொழும்பில்தான் அமைந்துள்ளது. மேலும், நிகழ்ச்சி நிரலை உருவாக்குவதற்கும், அதை முன்னெடுத்துச் செல்வதற்கும், இந்த உரையாடல் மன்றத்திற்கு ஒரு அனைத்துலக அமைப்பின் அந்தஸ்தை வழங்குவதற்கும், பல்வேறு நாடுகளின் தேசிய பாதுகாப்பு ஆலோசகர்கள் மற்றும் அவர்களது பிரதிநிதிகளுக்கு இடையேயான சந்திப்புகளில் சீரான முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது.

ஆகவே, உடன்பாடுகள் தொடர்பான பணிகள் அனைத்தும்  முடிவுக்கு வந்துவிட்டன. தலைமையக உடன்பாட்டின் இறுதி முடிவிற்காக நாங்கள் இப்போது காத்திருக்கிறோம்.

கொழும்பு பாதுகாப்பு மாநாட்டின் முதல் பொதுச் செயலாளர், ஒருமித்த கருத்தின்படி, ஒரு இந்தியக் குடிமகனாக இருப்பார். அவர் அந்தப் பொறுப்பை ஏற்பதற்குத் தேவையான ஒப்புதல்கள் போன்றவற்றிற்காக நாங்கள் காத்திருக்கிறோம்.

சிறிலங்காவில் இது தொடர்பாக நிறைவேற்றப்பட வேண்டிய சில நடைமுறைத் தேவைகள் இருப்பதாக நான் நம்புகிறேன்.

மேலும், இவ்வகையான பாதுகாப்புச் சவால்களை எதிர்கொள்வதில் கொழும்புப் பாதுகாப்பு மாநாட்டின் முக்கியத்துவம் குறித்தும், அந்த அமைப்பு முழுவீச்சில் செயற்படத் தொடங்குவதற்குத் தேவையான இறுதி நடைமுறைத் தேவைகளை நிறைவு செய்ய வேண்டியதன் அவசியம் குறித்தும் இந்திய துணை குடியரசுத் தலைவர் மற்றும் சிறிலங்கா அதிபர் இடையே விவாதிக்கப்பட்டது.

இந்த தேவைகள் மிக மிக விரைவாக நிறைவேற்றப்படும் என நாங்கள் நம்புகிறோம்.

ஏனெனில், அது கொழும்புப் பாதுகாப்பு மாநாட்டின் அங்கத்துவம் பெற்று, இந்தியப் பெருங்கடலின் கரையோரங்களில் உள்ள அனைத்து நாடுகளுக்கும் பரஸ்பர நன்மை பயக்கும். என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *