இந்திய துணை குடியரசுத் தலைவர் சிறிலங்கா பயணத்தை முடித்து நாடு திரும்பினார்
இந்திய துணை குடியரசுத் தலைவர் சி. பி. ராதாகிருஷ்ணன் இரண்டு நாள் சிறிலங்கா பயணத்தை இன்று பிற்பகல் நிறைவு செய்து கொண்டு நாடு திரும்பியுள்ளார்.
நேற்று முற்பகல் கட்டுநாயக்க விமான நிலையத்தில் வந்திறங்கிய அவர், சிறிலங்கா அதிபர் அனுரகுமார திசாநாயக்க, பிரதமர் ஹரினி அமரசூரிய, எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச ஆகியோரையும், வடக்கு, கிழக்கை மையப்படுத்திய தமிழ் தேசிய கட்சிகளின் பிரதிநிதிகளையும், மலையக தமிழ் கட்சிகளின் பிரதிநிதிகளையும் தனித்தனியாகச் சந்தித்துப் பேச்சு நடத்தினார்.
இந்திய அரசின் உதவியுடன் டிட்வா புயல் புனர்வாழ்வு மற்றும் அபிவிருத்தி ஒத்துழைப்பு தொடர்பான திட்டங்கள் உட்பட, ஒத்துழைப்பை மேம்படுத்துவதை மையமாகக் கொண்டு, இரு நாடுகளுக்கும் இடையே பல புரிந்துணர்வு உடன்பாடுகளும் இந்தப் பயணத்தின் போது கையொப்பமிடப்பட்டன.
இந்திய வம்சாவளி தமிழ் சமூகத்தினருக்கான இந்திய வீட்டுவசதித் திட்டத்தின் இடங்களைப் பார்வையிட இந்திய குடியரசுத் தலைவர் இன்று நுவரெலியாவிற்கும் சென்றிருந்தார்.
முன்னதாக இந்திய குடியரசுத் தலைவர் திருகோணமலை, முல்லைத்தீவு ஆகிய இடங்களுக்கும் பயணம் செய்வார் எனக் கூறப்பட்ட போதும், அந்தப் பயணங்கள் நிகழ்ச்சி நிரலில் உள்ளடக்கப்படவில்லை.

