மேலும்

வெடிக்கப் போகும் குண்டின் திரியைப் பற்ற வைத்துள்ள சஜித்

“அவரால் தேர்தலில் வெற்றிபெற முடியாது… ஆனால் அவர் ஒரு திருடன் அல்ல.” 2013-ல் ரணில் பிரதமரானபோது, ​​அவருடன் இணைக்கப்பட்டிருந்த அடைமொழி இதுதான்.

“ரணிலை துரோகி என்று அழைத்தார்கள். அவரை புலிகளின் அனுதாபி என்று அழைத்தார்கள். ஆனால் அவரை யாரும் திருடன் என்று அழைத்ததில்லை. அவருடைய மிக மோசமான எதிரிகள் கூட அதை ஒப்புக்கொண்டனர்.”

2015-ல் ரணில் பிரதமரானபோது அனைத்துலக அரசியல் ஆய்வாளர்கள் கூறியது இதுதான்.“திருவாளர் தூய்மை.” ( Mr. Clean). 

இந்தப் பட்டம் அவருடைய மாமாவின்  ‘சண்டே ரைம்ஸ்’ செய்தித்தாள் மூலம் பிரபலப்படுத்தப்பட்டிருந்தாலும், யாரும் அதைத் தீவிரமாக எதிர்க்கவில்லை.

2015ஆம் ஆண்டில், தோற்கடிக்க முடியாதவர்களாகத் தோன்றிய ராஜபக்ச குடும்பத்தைத் திருடர்கள் என்று முத்திரை குத்தி, தன்னை ஒரு தூய்மையான மாற்றாக நிலைநிறுத்திக் கொண்டு ரணில் அவர்களைத் தோற்கடித்தார்.

“ராஜபக்சக்கள் திருடர்கள். ரணில் திருவாளர் தூய்மை.” 2015ஆம் ஆண்டில் மக்கள் இப்படித்தான் வாக்களித்தார்கள்.

“திருடன்” என்ற முத்திரை ஒருமுறை ஒட்டிக்கொண்டால், அதை உதறித் தள்ளுவது எளிதல்ல,  ராஜபக்சக்கள் இதை நன்கு புரிந்துகொண்டிருந்தனர்.

மைத்திரிபால அல்லது ரணில்  ஆகிய இருவரில் ஒருவரை ஊழல்வாதி என்று முத்திரை குத்துவதே அவர்களின் சிறந்த உத்தியாக இருந்தது.

மைத்திரிபாலவுக்கும் ரணிலுக்கும் இடையே ஏற்கனவே பதற்றம் உருவாகத் தொடங்கியிருந்தது.

ரணிலின் நற்பெயரைக் கெடுத்து விட்டால், மைத்திரிபாலவைத் தங்கள் பக்கம் ஈர்த்து, தங்கள் மீதான குற்றச்சாட்டுகளையும் முறியடித்து விடலாம் என்று ராஜபக்சக்கள் கணக்கிட்டனர்.

“ரணில் போன்ற ஒரு ‘தூய்மையானவரை’ எப்படித் திருடனாக மாற்றுவது?” என்று ராஜபக்சக்கள் சிந்தித்தனர்.

அவர்கள் நீண்ட நேரம் காத்திருக்க வேண்டியிருக்கவில்லை. அவர்களுக்கு ஒரு நல்வாய்ப்பு கிடைத்தது—மத்திய வங்கிப் பிணை முறி ஊழல் தான் அது.

அதிபர் மைத்திரிபால, ரணிலின் சொந்த அரசாங்கத்திற்குள் இருந்த சிறிலங்கா சுதந்திரக் கட்சி அமைச்சர்கள் மற்றும் நாடாளுமன்றத்தின் கோப் ( COPE ) குழுவைப் பயன்படுத்தி, ராஜபக்சக்கள் ரணிலை “மத்திய வங்கித் திருடன்” என்று வெற்றிகரமாகச் சித்திரித்தனர்.

2015ஆம் ஆண்டில் மைத்திரி-ரணில் அரசாங்கத்தை ஆட்சிக்குக் கொண்டுவர உதவிய சிவில் அமைப்புகளும், கலைஞர்களும், திருடர்களைப் பிடிப்பதாக வாக்குறுதியளித்த அதே நபர், மத்திய வங்கியைக் கொள்ளையடித்ததாகக் குற்றம்சாட்டப்பட்டபோது, தர்மசங்கடத்திற்கு உள்ளானார்கள்.

இந்தக் குற்றச்சாட்டுகள் வெளிவந்தபோது, ​​மைத்திரிபால சிறிசேன,  ரணிலை அழைத்தார். அவர் மலிக் சமரவிக்ரமவுடன் வந்தார்.

“எமது மக்கள் ஆணையையும் இந்த அரசாங்கத்தையும் நாம் பாதுகாக்க வேண்டுமானால், உங்கள் நண்பர் அர்ஜுன மகேந்திரனைப் பதவி விலகுமாறு நீங்கள் கூற வேண்டும்,” என்று மைத்திரிபால அவரிடம் கூறினார்.

“நான் இதைத் தீர்த்து வைக்கிறேன்,” என்று ரணில் பதிலளித்தார்.

அர்ஜுன மகேந்திரன் ரணிலின் மிக நெருங்கிய கூட்டாளிகளில் ஒருவராக இருந்தார். அந்த நட்பின் காரணமாகவே அவர் மகேந்திரனை மத்திய வங்கி ஆளுநராக நியமித்திருந்தார்,  அவரைக் கைவிடவும் அவர் விரும்பவில்லை.

ரணில் தன்னைப் பாதுகாக்க ஒரு சட்டக் குழுவை அமைத்து, கடந்தகாலப் பிணைமுறிப் பிரச்சினைகள் மீது கவனத்தைத் திருப்ப முயன்றார்.

ஆனால் மைத்திரிபால, ரணிலின் வழியைப் பின்பற்றவில்லை—அவர் ராஜபக்சக்களின் திட்டத்தையே பின்பற்றினார்.

அவர் பிணைமுறி ஊழலை விசாரிக்க ஒரு ஆணைக்குழுவை நியமித்தார், மேலும் குற்றவாளிகளைப் பாதுகாக்க வேண்டாம் என்று ரணிலுக்குப் பகிரங்கமாக எச்சரிக்கை விடுத்தார்.

கோப் அறிக்கை அதை ஒரு மாபெரும் மோசடி என உறுதிப்படுத்தியது. சிறிலங்கா சுதந்திரக் கட்சி அமைச்சர்கள் ரணிலை பிரதமர் பதவியிலிருந்து நீக்கக் கோரினர்.

திருடர்களைப் பிடிப்பதற்காக ரணிலின் அரசாங்கம் 2015 ஜனவரியில் ஆட்சிக்கு வந்தது. 2015 ஜூன்-ஜூலை மாதங்களுக்குள், பொதுமக்களின் பார்வையில் ரணிலே மிகப்பெரிய “திருடன்” ஆகிவிட்டார்.

அதுதான், ராஜபக்சவின் வியூகம். அதிபர் மைத்திரிபால, சுதந்திரக் கட்சி அமைச்சர்கள் மற்றும் கோப் அறிக்கையின் ஆதரவு இல்லாமல், அது வெற்றி பெற்றிருக்காது.

பிணைமுறி  மோசடி குறித்த கணக்காய்வாளர் நாயகத்தின் அறிக்கை இந்தக் கருத்தை மேலும் வலுப்படுத்தியது. 2018 உள்ளூராட்சித் தேர்தல்களின்போது, ​​ரணிலின் அரசாங்கம் அவமானகரமான தோல்வியைச் சந்தித்தது.

இப்போது, ​​பல ஆண்டுகளுக்குப் பின்னர்,  அரசாங்கத்தாலும் எதிர்க்கட்சியாலும் பலவீனமான எதிர்க்கட்சித் தலைவர் என்று கேலி செய்யப்பட்ட சஜித் பிரேமதாச, ஒரு துணிச்சலான நடவடிக்கையை எடுத்துள்ளார்; அது ராஜபக்சக்களுக்கு அரசியல் வியூகத்தில் ஒரு பாடம் கற்பிப்பது போலவும் அமைந்துள்ளது.

திருடர்களைப் பிடிப்பதாக வாக்குறுதியளித்து, ஆட்சிக்கு வந்த ஜேவிபி தலைமையிலான அரசாங்கத்தை, நிலக்கரி கொள்வனவு ஊழல் விவகாரத்தை அம்பலப்படுத்துவதன் மூலம், அவர் குறிவைத்துள்ளார்.

ரணிலுக்கு எதிரான ராஜபக்சக்களின் பரப்புரையைப் போலல்லாமல், சஜித்தின் பணி கடினமானது. ஜேவிபி அரசாங்கம் மிகவும் வலுவான மக்கள் ஆணையைப் பெற்றுள்ளது.

2015-ல், மஹிந்த சிங்கள-பௌத்த வாக்குகளில் பெரும்பான்மையைப் பெற்றிருந்தார். ஆனால் 2024-ல், ஜேவிபி நாடு தழுவிய ஆதரவைப் பெற்றது.

மேலும், ராஜபக்சக்கள் ரணிலைத் தாக்கியபோது, ​​அவர்களுக்கு அதிபர் மைத்ரிபாலவின் ஆதரவு இருந்தது.

இன்று, குற்றம்சாட்டப்பட்ட அமைச்சர் குமார ஜெயகொடியைப் பாதுகாப்பதில் ஒன்றுபட்டிருக்கும் அதிபர், பிரதமர், அமைச்சரவை மற்றும் ஒரு கோப் குழுவைக்கூட சஜித் எதிர்கொள்கிறார்.

இருப்பினும், சஜித் பின்வாங்கவில்லை. நிலக்கரி ஊழலை அம்பலப்படுத்தியதன் மூலம், அமைச்சருக்கு எதிராக நம்பிக்கையில்லாத் தீர்மானம் கொண்டுவர அவர் முடிவு செய்தார்.

“நம்பிக்கையில்லாத் தீர்மானங்களைக் கொண்டு வந்து, நீங்கள் அரசாங்கத்தைத்தான் வலுப்படுத்துகிறீர்கள்,” என்று ஐக்கிய தேசியக் கட்சியும் அதன் கூட்டணி எதிர்க்கட்சிகளும் அவரைக் கேலி செய்தன.

2023ஆம் ஆண்டில் கெஹெலிய ரம்புக்வெலவுக்கு எதிராக சஜித் ஒரு நம்பிக்கையில்லாத் தீர்மானத்தைக் கொண்டு வந்தபோதும், இதே விமர்சனம் முன்வைக்கப்பட்டது.

அப்போது எதிர்க்கட்சியாக இருந்த ஜேவிபி கூட “சஜித்துக்குப் பைத்தியம் பிடித்து விட்டது. நாடாளுமன்றத்தில் ரணில் அதிகாரத்தை வலுப்படுத்த அவர் உதவுகிறார்” என அவரைக் கேலி செய்தது.

ஆனால், அந்தத் தீர்மானம், ரணில் ஊழல்வாதிகளைப் பாதுகாக்கிறார் என்ற ஒரு வலுவான கருத்தை விதைத்தது. அந்தக் கருத்து மிகவும் வலுப்பெற்றதால், கெஹெலிய இறுதியில் பதவியிலிருந்து நீக்கப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.

அப்போது சஜித் தனது விமர்சகர்களின் பேச்சைக் கேட்டிருந்தால், அந்த விளைவு ஒருவேளை நடந்திருக்காது.

இப்போது, ​​மீண்டும் ஒருமுறை, கேலிக்கு மத்தியிலும் அவர் முன்னேறிச் செல்கிறார்.

முதலில் அனுரவால் முன்மொழியப்பட்ட சமுத்ரிகா ஜயரத்னவின்  கணக்காய்வாளர்  நாயகம் நியமனத்தை சஜித் ஆதரித்தபோது, ​​அது ஒரு பேரம் என்று விமர்சகர்கள் கூறினர்.

ஆனால், அவரது தொழில்முறை நேர்மையை அறிந்தே சஜித் அவருக்கு ஆதரவளித்தார். அவரது கணிப்பு சரியானது என நிரூபணமானது: அவர் நிலக்கரி ஊழலை மூடிமறைக்கவில்லை; அதை அம்பலப்படுத்தினார்.

ஒரு காலத்தில் ரணில், மகேந்திரனைப் பாதுகாத்தார்; இன்றோ, ஜேவிபி அரசு குமார ஜயகொடியைப் பாதுகாப்பதாகத் தெரிகிறது.

அப்போது ரணில், கடந்த கால பிணைமுறி மோசடி நிகழ்வுகளை விசாரிப்பதன் மூலம் பழியைத் திசைதிருப்பினார்.

இப்போது, ​​அனுர கடந்தகால நிலக்கரி கொள்வனவு ஒப்பந்தங்களை விசாரிப்பதன் மூலம் அதையே செய்கிறார்.

2015  நல்லாட்சி அரசாங்கத்தை ஆதரித்த சிவில் செயற்பாட்டாளர்களும் கலைஞர்களும் தர்மசங்கடத்திற்கு உள்ளானதைப் போலவே, இன்றைய அரகலய செயற்பாட்டாளர்களும் விரைவில் தங்களை அதேபோன்ற ஒரு நிலையில் காணலாம்.

அரசியல் ஆர்வலர்களின் கேலிக்கு மத்தியில், 2029 அதிபர் பதவிக்குக் கனவு காணும், சஜித்தின் வியூகம் குறித்து கருத்து தெரிவித்த முன்னாள் ஜேவிபி உறுப்பினர் ஒருவர், “சஜித் பிரேமதாச சில மாதங்களில் வெடிக்கவிருக்கும் ஒரு குண்டின் திரியைப் பற்றவைத்துள்ளார்” என்கிறார்.

ஆங்கிலமூலம்- உபுல் ஜோசப் பெர்னான்டோ
வழிமூலம்        – மவ்ரட்ட நியூஸ்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *