சிறிலங்காவுக்கு அழுத்தம் கொடுக்க வேண்டும் – பின்லாந்து எம்.பி வலியுறுத்தல்
தமிழர்களுக்கு எதிராக இழைக்கப்பட்ட போர்க்குற்றங்களுக்கு சிறிலங்கா பொறுப்பேற்க வேண்டும் என அழுத்தம் கொடுப்பதற்காக, சிறிலங்காவுடன் கையெழுத்திடப்பட்டுள்ள புரிந்துணர்வு உடன்பாட்டை ஹெல்சிங்கி பயன்படுத்த வேண்டும் என்று பின்லாந்து நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவர் வலியுறுத்தியுள்ளார்.
பின்லாந்தும் சிறிலங்காவும் இருதரப்பு உறவுகளை வலுப்படுத்தும் நோக்கில் அரசியல் கலந்தாய்வு வழிமுறையை நிறுவும் புரிந்துணர்வு உடன்பாடு ஒன்றில், 2026 பெப்ரவரி 25 ஆம் நாள் ஹெல்சிங்கியில் கையெழுத்திட்டன.
இந்த நிலையில் பின்லாந்தின் பசுமைக் கட்சி நாடாளுமன்ற உறுப்பினர் பெல்லா போர்ஸ்கிரென் (Bella Forsgrén), பின்லாந்தின் மனித உரிமைகள் அடிப்படையிலான வெளியுறவுக் கொள்கையை முன்னெடுத்துச் செல்வதற்கு இந்த உடன்பாடு பயன்படுத்தப்படுவதை, அரசாங்கம் உறுதி செய்ய வேண்டும் என்று கோரி, புதன்கிழமை பின்லாந்து நாடாளுமன்ற சபாநாயகரிடம் எழுத்துப்பூர்வ கோரிக்கையை சமர்ப்பித்துள்ளார்.
1948 ஆம் ஆண்டு முதல் சிறிலங்கா அரசு ஈழத் தமிழர்களின் சுயநிர்ணய உரிமையை திட்டமிட்டு மறுத்து வருவதாகவும், அனைத்துலக பொறுப்புக்கூறல் வழிமுறைகளுடன் ஒத்துழைக்க மீண்டும் மீண்டும் தவறிவிட்டதாகவும் பெல்லா போர்ஸ்கிரென் குறிப்பிட்டுள்ளார்.
பின்லாந்தும் ஐரோப்பிய ஒன்றியமும் ஐ.நா. மனித உரிமைகள் பேரவையில் ஆதரித்த தீர்மானம் 51/1-ஐ செயற்படுத்த சிறிலங்கா தொடர்ந்து மறுத்து வருவதையும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
ஆயுத மோதலின் போது சிறிலங்கா அரசபடைகளால் இழைக்கப்பட்ட போர்க்குற்றங்கள், பொதுமக்கள் மீதான தாக்குதல்கள், கட்டாய இடப்பெயர்வு, படுகொலைகள் மற்றும் பாலியல் வன்முறைகள் ஆகியவற்றை விவரிக்கும் சர்வதேச அமைப்புகள் மற்றும் மனித உரிமை அமைப்புகளின் விரிவான ஆவணங்களையும் போர்ஸ்கிரென் சமர்ப்பித்துள்ளார்.
பல்லாயிரக்கணக்கான தமிழர்கள் இன்னும் காணாமல் போயுள்ளனர் என்றும், இந்தக் குற்றங்கள் இனப்படுகொலைக்கான வரம்பை எட்டுகின்றன என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
தற்போதைய தேசிய மக்கள் சக்தி அரசாங்கம், அனைத்துலக பொறுப்புக்கூறலை நிராகரிக்கும் சிறிலங்காவின் நீண்டகால நிலைப்பாட்டைத் தக்கவைத்துக் கொள்வதாகவும், ஐக்கிய நாடுகள் சபையுடனான அர்த்தமுள்ள ஒத்துழைப்பைத் தொடர்ந்து எதிர்ப்பதாகவும், பாதிக்கப்பட்ட தமிழ் மக்களுக்கு நீதி கிடைப்பதைத் தடுப்பதாகவும் போர்ஸ்கிரென் தெரிவித்துள்ளார்.
அதேவேளை “சிறிலங்கா உள்நாட்டுப் போரின் போது தமிழர்களுக்கு எதிரான மனித உரிமை மீறல்கள் மற்றும் போர்க்குற்றங்கள் குறித்த விசாரணையில் முன்னேற்றத்தை உறுதி செய்வதற்காக, பின்லாந்துக்கும் சிறிலங்காவுக்கும் இடையிலான அரசியல் கலந்தாய்வு வழிமுறையை பின்லாந்து எவ்வாறு பயன்படுத்த உத்தேசித்துள்ளது?” என்று பின்லாந்து வெளியுறவு அமைச்சர் எலினா வால்டோனனிடம் (Elina Valtonen) போர்ஸ்கிரென் கேள்வி எழுப்பியுள்ளார்.
பின்லாந்து நாடாளுமன்ற நடைமுறையின்படி, வெளியுறவு அமைச்சர் வால்டோனன் 21 நாட்களுக்குள் இந்த கேள்விக்கு முறையான பதிலை அளிக்க வேண்டும்.
