மேலும்

ஆசிய-பசுபிக்கில் மிகவும் பாதிக்கப்படக் கூடிய நாடுகளின் பட்டியலில் சிறிலங்கா

மேற்காசிய போர் நெருக்கடியின்  விளைவுகளால், ஆசிய-பசுபிக் பிராந்தியத்தில் பொருளாதார ரீதியாக மிகவும் பாதிக்கப்படக் கூடிய நாடுகளில் ஒன்றாக சிறிலங்கா உருவெடுத்து வருவதாக ஐ.நா அறிக்கை ஒன்றில் கூறப்பட்டுள்ளது.

வளைகுடா நாடுகளில்,  வேலைவாய்ப்பு மற்றும் ஏற்றுமதிகளை பெரிதும் நம்பியிருக்கும் நாடுகள், புவிசார் அரசியல் உறுதியற்ற தன்மையின்மையால் அதிக அபாயங்களை எதிர்கொள்கின்றன என்றும், சிறிலங்கா அதன் கட்டமைப்பு ரீதியான பொருளாதாரத் தொடர்புகளின் காரணமாக, எளிதில் பாதிக்கப்படக் கூடிய நாடாக அடையாளம் காணப்பட்டுள்ளது என்றும், அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

‘மத்திய கிழக்கு இராணுவப் பதற்றம் : ஆசியா மற்றும் பசுபிக் முழுவதற்குமா மனித அபிவிருத்தித் தாக்கங்கள்’ என்ற தலைப்பிலான இந்த அறிக்கை, தொழிலாளர் இடம்பெயர்விற்காக சிறிலங்கா மேற்காசியாவை பெரிதும் சார்ந்திருப்பதை எடுத்துக் காட்டுகிறது.

2025-ஆம் ஆண்டில் சிறிலங்காவில் இருந்து வெளியேறும் புலம்பெயர் தொழிலாளர்களில் 80.2 சதவீதம் பேர், வளைகுடா நாடுகளை நோக்கியே சென்றுள்ளனர்.

இதனால் வேலைவாய்ப்புகளில் ஏற்படும் எந்தவொரு மந்தநிலை, வெளிநாட்டிலிருந்து வரும் பணப் பரிமாற்ற வரவு, அல்லது மோதல் தொடர்பான பிராந்திய நடமாட்டக் கட்டுப்பாடுகள் ஆகியவற்றால் சிறிலங்கா குறிப்பாகப் பாதிக்கப்படக் கூடியதாக உள்ளது.

சுற்றுலாப் பயணிகளின் வருகையில் குறிப்பிடத்தக்க சரிவு ஏற்பட்டுள்ளதாக ஐக்கிய நாடுகள் அபிவிருத்தி திட்டம் மேலும் சுட்டிக்காட்டுகிறது.

2026 பெப்ரவரியில் சுமார் 9,976 ஆக இருந்த சராசரி தினசரிப் பயணிகளின் எண்ணிக்கை, 2026 மார்ச் 1 முதல் 8-ஆம் நாளுக்குள் 5,956 ஆகக் குறைந்துள்ளது. இது மதிப்பிடப்பட்ட 40 சதவீத வீழ்ச்சியைக் குறிக்கிறது.

சுற்றுலா நடவடிக்கைகளில் ஏற்பட்டுள்ள இந்தச் சுருக்கம், சிறிலங்காவின் அந்நியச் செலாவணி வருவாய், வேலைவாய்ப்பு நிலைகள் மற்றும் சேவைத் துறை மீட்சி ஆகியவற்றிற்கு ஒரு பெரும் கவலையாகக் கருதப்படுகிறது.

கூடுதலாக, வர்த்தகப் பரிமாற்றங்கள் மற்றும் தேவை நிலைகளில் நிலவும் தொடர்ச்சியான இடையூறுகளால், சிறிலங்காவின் தேயிலை ஏற்றுமதித் துறை மட்டும் வாரத்திற்கு 10 மில்லியன் முதல் 15 மில்லியன் அமெரிக்க டொலர் வரை இழப்பைச் சந்திக்கக்கூடும்.

நாட்டின் பொருளாதாரத்திற்கு தேயிலை ஏற்றுமதியின் முக்கியத்துவத்தைக் கருத்தில் கொண்டு, இத்தகைய இழப்புகள் கிராமப்புற வருமானம் மற்றும் அந்நியச் செலாவணி நிலைத்தன்மையில் நேரடித் தாக்கத்தை ஏற்படுத்தக் கூடும்.

ஒரு பரந்த பிராந்திய அளவில், ஆசிய-பசுபிக் பொருளாதாரங்கள் 97 பில்லியன் அமெரிக்க டொலர் முதல் 299 பில்லியன் அமெரிக்க டொலர் வரையிலான மொத்த உற்பத்தி மற்றும் வர்த்தக இழப்புகளைச் சந்திக்கக்கூடும் என்று ஐக்கிய நாடுகள் அபிவிருத்தித்  திட்டம் கணித்துள்ளது.

இது பிராந்திய மொத்த உள்நாட்டு உற்பத்தியில் சுமார் 0.3 முதல் 0.8 சதவீதத்திற்குச் சமமாகும்.

இந்த ஆய்வில் சேர்க்கப்பட்டுள்ள 14 நாடுகளில், நெருக்கடியின் பொருளாதாரப் பரவல் விளைவுகளின் காரணமாக ஏறத்தாழ 8.8 மில்லியன் மக்கள் வறுமையில் தள்ளப்படக் கூடும் .

ஒட்டுமொத்தமாக, தொழிலாளர் இடம்பெயர்வு, சுற்றுலா மற்றும் மேற்கு ஆசியாவிற்கான ஏற்றுமதிகளைப் பெரிதும் சார்ந்திருக்கும் சிறிலங்காவின் பொருளாதாரக் கட்டமைப்பு, தற்போது நிலவும் புவிசார் அரசியல் மற்றும் பொருளாதார உறுதியற்றதன்மையால் ஆசிய-பசுபிக் பிராந்தியத்தில் மிகவும் பாதிக்கப்படக்கூடிய நாடுகளில் ஒன்றாக அதனை வைத்திருக்கிறது என்றும், இந்த மதிப்பீடு சுட்டிக்காட்டுகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *