மேலும்

போர்நிறுத்தத்தைப் பயன்படுத்தி ஈரானிய படையினரை திருப்பி அனுப்பினோம்

அமெரிக்காவுக்கும் ஈரானுக்கும் இடையிலான  போர்நிறுத்தம், சிறிலங்கா தனது நடுநிலையைக் கைவிடாமல், போரிடும் தரப்பினருடனான நட்புறவைப் பாதிக்காமல் அனைத்துலக சட்டத்தின் கீழ்  கடமைகளை நிறைவேற்ற அனுமதித்துள்ளதாக சிறிலங்கா வெளிவிவகார  அமைச்சர் விஜித ஹேரத் தெரிவித்துள்ளார்.

சிறிலங்காவில் காவலில் வைக்கப்பட்டிருந்த ஈரானிய கடற்படையினர் திருப்பி அனுப்பப்பட்டது குறித்து , ‘தி நியூயோர்க் ரைம்ஸ்’ எழுப்பிய கேள்விக்குப் பதிலளித்த போதே இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

“அவர்களின் விடுதலை, ஈரானுடனான சிறிலங்காவின்  இராஜதந்திர முட்டுக்கட்டையைத் தீர்ப்பதோடு, விருப்பமின்றி இழுத்துச் செல்லப்பட்ட ஒரு போரிலிருந்து நாட்டை மெதுவாக வெளியேற்றியுள்ளது.என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

ஈரானுடனான அமெரிக்க-இஸ்ரேல் போரில் தனது நடுநிலைமையைப் பாதிக்கும் என்று அஞ்சி, அவர்களைத் திருப்பி அனுப்புமாறு ஈரான் விடுத்த கோரிக்கைகளை சிறிலங்கா அரசாங்கம் நிராகரித்ததால், ஈரானியக் கடற்படையினர், மார்ச் மாதத் தொடக்கத்திலிருந்து காவலில் வைக்கப்பட்டிருந்தனர்.

அனைத்துலக சட்டங்களில் ஒன்றான மூன்றாம் ஜெனீவா உடன்படிக்கை, “செயலில் உள்ள போர் நடவடிக்கைகள் நிறுத்தப்படும்” போது போர்க் கைதிகள் உடனடியாக விடுவிக்கப்பட வேண்டும் என்று கூறுகிறது.

போர்நிறுத்த காலத்தில் மாலுமிகளைத் திருப்பி அனுப்புவது, போர் குறித்த “எங்களின் நடுநிலை நிலைப்பாட்டை” பாதிக்காது என்றும் விஜித ஹேரத் கூறியுள்ளார்.

அதேவேளை, பாதுகாப்பு நெறிமுறைகளை நிர்வகிப்பதற்காக, ஐஆர்ஐஎஸ் புஷேர் கப்பல் 15 மாலுமிகளுடன் திருகோணமலை துறைமுகத்தில் நிறுத்தப்பட்டுள்ளது.

அந்தக் கப்பலை விடுவிப்பது குறித்து, அனைத்துலக சட்டத்திற்கு இணங்க சிறிலங்காவின் வெளியுறவு அமைச்சினால் தீர்மானிக்கப்படும் என்று சிறிலங்கா அரசாங்க அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

ஈரானிய , மாலுமிகளின் நிலை குறித்து சிறிலங்கா அரசாங்க அதிகாரிகளுடன் ஈரானிய இராஜதந்திரிகள்  தினசரி பேச்சுவார்த்தை நடத்தியிருந்தனர்.

ஈரானுடனான அமெரிக்க-இஸ்ரேலியப் போருக்கும் இதற்கும் எந்தத் தொடர்பும் இல்லை என்றும், இது இரு நட்பு நாடுகளுக்கு இடையேயான இருதரப்புப் பிரச்சினை என்றும் கருதி,அவர்களை விடுவிக்குமாறு வலியுறுத்தியதாக, சிறிலங்காவுக்கான ஈரானிய தூதுவர் அலிரெஸா டெல்கோஷ் தெரிவித்திருந்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *