மேலும்

சிறிலங்காவின் எரிசக்தி அமைச்சர் குமார ஜயகொடி பதவி விலகினார்

சிறிலங்காவின் எரிசக்தி அமைச்சர் குமார ஜயகொடி,  அமைச்சர் பதவியில் இருந்து விலகுவதாக,  சிறிலங்கா அதிபர் அனுரகுமார திசாநாயக்கவுக்கு  அறிவித்துள்ளார்.

இன்று பிற்பகல் அவர் பதவி விலகல் கடிதத்தை, சிறிலங்கா அதிபரிடம் கையளித்துள்ளார்.

நிலக்கரி கொள்முதல் தொடர்பாக, அதிபர்  விசாரணை ஆணைக்குழுவை நியமிக்கவும், 2009 முதல் இறக்குமதிகளை ஆய்வு செய்வதில் குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தை ஈடுபடுத்தவும் எடுக்கப்பட்ட அண்மைய  நடவடிக்கைகளின் பின்னணியில்  இந்த முடிவை எடுத்துள்ளதாக குமார ஜயகொடி குறிப்பிட்டுள்ளார்.

அரசாங்கத்தின் ஊழல் ஒழிப்பு முயற்சிகளையும், வெளிப்படையான ஆட்சிமுறைக்கான முன்னெடுப்புகளையும் தாம் ஆதரிப்பதாகவும், தொடர் விசாரணைகள் மூலம் உண்மை வெளிப்படும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

அதிபர் ஆணைக்குழுவின் விசாரணை சுதந்திரமாகவும், எந்தவொரு செல்வாக்குமின்றியும் தொடர்வதை உறுதி செய்வதற்காகவே தாம் பதவி விலகுவதாகவும், விசாரணையிலிருந்து வெளிவரும் எந்தவொரு முடிவுகளையும் ஏற்கத் தயாராக இருப்பதாகவும் குமார ஜயகொடி தெரிவித்துள்ளார்.

அண்மையில் நாடாளுமன்றத்தில் கொண்டு வரப்பட்ட நம்பிக்கையில்லாப் பிரேரணையின் போது தமக்கு அளிக்கப்பட்ட ஆதரவுக்கு நன்றி தெரிவித்த அவர், தூய்மையான அரசியல் கலாசாரம் மற்றும் அரசாங்கத்தின் பரந்த சீர்திருத்த செயல்திட்டத்திற்கான  உறுதிப்பாட்டை மீண்டும் வலியுறுத்தியுள்ளார்.

அதேவேளை, எரிசக்தி அமைச்சின் செயலர் பேராசிரியர் உதயங்க ஹேமபாலவும்,  விசாரணைகளுக்கு இடையூறு ஏற்படுவதைத் தவிர்ப்பதற்கும் அவற்றின் நம்பகத்தன்மையை உறுதி செய்வதற்கும்  பதவி விலகுவதாக அறிவித்துள்ளார்.

இவர்களின் பதவி விலகலை அடுத்து கொழும்பில் இன்று முக்கிய அமைச்சர்கள் நடத்திய ஊடகச் சந்திப்பில் நிலக்கரி கொள்வனவில் ஊழல் இடம்பெறவில்லை என்றும், ஆனால் தரம்குறைந்த நிலக்கரி இறக்குமதி செய்யப்பட்டமை உறுதி செய்யப்பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *