மாகாண சபை தேர்தல்களை நடத்துவதில் தொடரும் தாமதம் – வாக்காளருக்கு பெரும் அநீதி
மாகாண சபை தேர்தல்களை நடத்துவதில் தொடரும் தாமதம் வாக்காளர்களுக்கும் வருங்கால பிரதிநிதிகளுக்கும் இழைக்கப்படும் பெரும் அநீதி என்று தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.
தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் ஆர்.எம்.ஏ.எல். ரத்நாயக்க, ஊடகம் ஒன்றுக்கு கருத்து வெளியிட்ட போது இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
மாகாண சபை தேர்தல்களை நடத்துவது குறித்து எந்தவொரு முடிவும் எடுப்பதற்கு முன்னதாக, தெரிவுக் குழுவின் செயல்முறையின் முடிவுகளுக்காக ஆணைக்குழு காத்திருக்கிறது.
தேர்தல் ஆணைக்குழுவின் அதிகாரிகள் ஏற்கனவே தெரிவுக் குழுவின் முன்பாக, இந்த விடயம் குறித்த தங்களது நிலைப்பாட்டை முன்வைத்துள்ளனர்.
தெரிவுக் குழுவின் முடிவின் அடிப்படையிலேயே, தேர்தல்களை நடத்துவது குறித்து எங்களால் தீர்மானிக்க முடியும்.
எல்லை நிர்ணய ஆணைக்குழுவும், தெரிவுக்குழுவின் முன் வரவழைக்கப்பட்டுள்ளதாக நான் நினைக்கிறேன். அது தனது நடவடிக்கைகளை முடித்து, பரிந்துரைகளைச் சமர்ப்பிக்கும் என்று நாங்கள் எதிர்பார்க்கிறோம்.
அதுவரை என்ன நடக்கும் என்று எங்களுக்குத் தெரியாது. தற்போதைக்கு, எங்களால் எதுவும் செய்ய முடியாது.
மாகாண சபைத் தேர்தல்கள் கடைசியாக 2014இல் நடத்தப்பட்டன , ஒரு பத்தாண்டுக்கும் மேலாக தேர்தல்கள் தொடர்ந்து ஒத்திவைக்கப்படுவது வாக்காளர்களுக்கும், அவர்களைப் பிரதிநிதித்துவப்படுத்த விரும்புபவர்களுக்கும் இழைக்கப்படும் பெரும் அநீதியாகும்.
இதுகுறித்து தெளிவு கோரி, தேர்தல் ஆணைக்குழு அதிபரின் செயலாளருக்கு மீண்டும் மீண்டும் கடிதம் எழுதி வருகிறோம். இதுகுறித்து தெரிவுக்குழுவினால் ஆராயப்பட்டு வருவதாக அவர் அண்மையில் எங்களுக்குத் தெரிவித்தார் என்றும், தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் ஆர்.எம்.ஏ.எல். ரத்நாயக்க, தெரிவித்துள்ளார்.
