இந்திய மருந்துகளுக்கு அனுமதி இழுத்தடிப்பு – சிறிலங்காவில் தட்டுப்பாடு ஏற்படும் அபாயம்
ஆயிரத்திற்கும் மேற்பட்ட மருந்துப் பொருட்களின் இறக்குமதி அனுமதிகளை வழங்குவதில், சிறிலங்கா அதிகாரிகள் காட்டும் அளவுக்கதிகமான தாமதம் குறித்து, இந்தியா கடும் கவலை தெரிவித்துள்ளது.
சுகாதார அமைச்சு உள்ளிட்ட சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு இந்திய அரசாங்கம் தனது ஏமாற்றத்தை எழுத்துப்பூர்வமாகத் தெரிவித்துள்ளதாக அறியப்படுகிறது.
இந்தியாவில் நிலவும் அதிகபட்ச சில்லறை விலை அல்லது சிறிலங்காவில் உள்நாட்டில் தயாரிக்கப்படும் மருந்துகளின் விலைகளைக் குறிப்பிட்டு, தங்கள் தயாரிப்புகளின் அதிகபட்ச சில்லறை விலையைக் குறைக்குமாறு, தங்களுக்கு தேவையற்ற அழுத்தம் கொடுக்கப்படுவதாக இந்திய நிறுவனங்கள் குற்றம்சாட்டியுள்ளன.
இணக்கச் செலவுகள், களஞ்சிய மற்றும் கப்பல் போக்குவரத்துச் செலவுகள், சிறிலங்கா ரூபாயின் மதிப்பு வீழ்ச்சியால் ஏற்படும் அழுத்தம் ஆகியவற்றைக் கருத்தில் கொள்ளாமல், இந்த ஒப்பீடுகள் தற்காலிகமான முறையில் செய்யப்படுகின்றன என்றும் அந்த வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
சிறிலங்கா அரசாங்கத்தின் கட்டுப்பாட்டுப் பட்டியலில் இல்லாத மருந்துகளுக்குக்கூட முறைசாரா விலைக் கட்டுப்பாடு விதிக்கப்படுவது மற்றொரு சர்ச்சைக்குரிய விடயமாக உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்திய மருந்துப் பொருட்கள் மீது விதிக்கப்படும் வரியல்லாத தடையானது, சிறிலங்காவில் மருந்துகளின் இருப்பைப் பாதிக்கும் என்றும், எதிர்காலத்தில் பற்றாக்குறை ஏற்படக்கூடும் என்றும் இந்திய மருந்து கூட்டமைப்பின் வட்டாரங்கள் குற்றம் சாட்டியுள்ளன.
இத்தகைய நீடித்த சவால்கள், உயர் நற்பெயர் கொண்ட இந்திய நிறுவனங்கள் சிறிலங்கா மருந்து சந்தையில் தொடர்ந்து நீடிப்பதையும், மிகவும் நவீன மருந்து வடிவங்களைக் கொண்டு வருவதற்காகத் தங்கள் விநியோகத்தை விரிவுபடுத்துவதையும் தடுக்கின்றன என்றும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
நிறுவனங்கள் பொதுவாக மூன்று மாதங்களுக்குத் தேவையான கையிருப்பை வைத்திருக்கும் என்றும், இருப்பினும், சில நிறுவனங்களின் குறைந்தது 5- 6 தயாரிப்புகள் ஏற்கனவே கையிருப்பில் இல்லை என்றும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
