ஈஸ்டர் ஞாயிறு தாக்குதல் தனிப்பட்ட சம்பவம் அல்ல – 2017இல் தொடங்கிய சதியின் விளைவு
2019 ஆம் ஆண்டு ஈஸ்டர் ஞாயிறு தாக்குதல் ஒரு தனிப்பட்ட சம்பவம் அல்ல என்றும், 2017 ஆம் ஆண்டில் தொடங்கிய ஒரு சதியின் விளைவு என்றும் விசாரணைகள் வெளிப்படுத்தியுள்ளதாக பொதுப் பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜேபால தெரிவித்துள்ளார்.
நேற்று நாடாளுமன்றத்தில் இடம்பெற்ற விவாதத்தில் உரையாற்றிய போதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
ஈஸ்டர் தாக்குதல்கள் ஒரே குழுவினரால் பல ஆண்டுகளாக ஒருங்கிணைக்கப்பட்ட மற்றும் திட்டமிட்டு செயல்படுத்தப்பட்ட தொடர் நிகழ்வுகளின் விளைவாகும்.
தாக்குதல்களுக்கு வழிவகுத்த பல சம்பவங்களை விசாரணைகளில் இருந்து தெளிவாகியுள்ளது. அவற்றுள்,
2017 டிசம்பர் 22 மற்றும் 23 ஆகிய நாள்களில் மாவனெல்லவில் புத்தர் சிலைகள் சேதப்படுத்தப்பட்டது.
2018 நவம்பர் 30 ஆம் நாள் , வவுணதீவில் காவல்துறை அதிகாரிகள் கொல்லப்பட்டது.
2019 ஜனவரி 16 ஆம் நாள், வனாத்தவில்லுவவில் உள்ள ஒரு முகாமில் வெடிபொருட்கள் மற்றும் வெடிக்கச் செய்யும் கருவிகளுடன் நான்கு சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டது.
2019 மார்ச் 10 ஆம் நாள் மாவனெல்ல பகுதியில் ‘தஸ்லீம்’ என்ற நபர் சுடப்பட்டது.
2019 ஏப்ரல் 16 ஆம் நாள் மட்டக்களப்பு, காத்தான்குடி, பாலமுனைப் பகுதியில் உந்துருளி வெடித்தது.
2019 ஏப்ரல் 21 ஆம் நாள், ஒருங்கிணைக்கப்பட்ட ஈஸ்டர் ஞாயிறு தாக்குதல்கள்.
இந்தச் சம்பவங்கள் ஒன்றோடொன்று தொடர்புடைய நிகழ்வுகளின் சங்கிலியை உருவாக்குவதுடன், நீண்டகால ஒழுங்கமைக்கப்பட்ட சதியைத் தெளிவாகக் காட்டுகிறது என்றும் விசாரணைகள் வெளிப்படுத்தியுள்ளன.
அரச புலனாய்வுச் சேவையின் முன்னாள் தலைவரான, மேஜர் ஜெனரல் சுரேஷ் சாலே, சதித்திட்டத்தில் ஈடுபட்டதாகவும், ஈஸ்டர் ஞாயிறு தாக்குதல்களுக்கு உதவியதாகவும் சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டுள்ளார்.
ஈஸ்டர் ஞாயிறு தாக்குதல் தொடர்பான நீதிமன்ற நடவடிக்கைகளில் சுரேஷ் சாலே ஏற்கனவே முதல் சாட்சியாகப் பெயரிடப்பட்டிருந்த நிலையில், 2024ஒக்டோபர் 11ஆம் நாள் அளிக்கப்பட்ட முறைப்பாட்டைத் தொடர்ந்து குற்றப் புலனாய்வுத் துறையால் அவர் காவலில் எடுக்கப்பட்டார்.
இந்த விவகாரம் தொடர்பாக, இரண்டு வழக்குகள் ஏற்கனவே மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ளன.
தாக்குதல்களுக்கு முன்னரே, அரச புலனாய்வுச் சேவையின் முன்னாள் தலைவரான, மேஜர் ஜெனரல் சுரேஷ் சாலேவுக்கு, இஸ்லாமிய தீவிரவாதிகளுடன் தொடர்புடைய தீவிரவாத நடவடிக்கைகள் குறித்து முன்னறிவு இருந்தது விசாரணையில் தெரியவந்துள்ளது.
அவர் அத்தகைய நடவடிக்கைகளைத் தடுக்கவோ அல்லது வெளிப்படுத்தவோ தேவையான நடவடிக்கைகளை எடுக்கத் தவறியதால், தாக்குதல்கள் நடைபெற அனுமதித்தார்.
தாக்குதல்கள் நடந்த பின்னர், அவற்றை அரங்கேற்றிய தனிநபர்களையும் குழுக்களையும் அம்பலப்படுத்துவதைத் தடுக்க அவர் நேரடியாகவோ அல்லது மறைமுகமாகவோ செயற்பட்டிருக்கலாம் என்று சந்தேகிக்கப்படுகிறது.
இந்தக் கண்டுபிடிப்புகளின் அடிப்படையில், ஈஸ்டர் ஞாயிறு தாக்குதல்களுக்குப் பின்னணியில் இருந்த சதி மற்றும் ஆதரவு தொடர்பான சட்டவிரோத நடவடிக்கைகளில் அவரது ஈடுபாட்டை நியாயமாகச் சந்தேகிக்கப் போதுமான முகாந்திரம் உள்ளது. அதுவே அவரது கைதுக்கு வழிவகுத்தது.
முன்னாள் இராஜாங்க அமைச்சர் சிவனேசதுரை சந்திரகாந்தன், என்றழைக்கப்படும் ‘பிள்ளையானுக்கு’ இந்தத் தாக்குதல்கள் குறித்து முன்னரே தெரிந்திருந்தது என்பதை கண்டுபிடிப்புகள் சுட்டிக்காட்டுகின்றன.
சஹ்ரான் காசிமுக்கு மேலாகச் செயல்பட்டு, அவரது நடவடிக்கைகளை இயக்கியதாகக் கூறப்படும் ஒரு தனிநபரும் ஒரு குழுவும் இருந்ததற்கான ஆதாரங்கள் கண்டறியப்பட்டுள்ளன.
வவுணதீவு காவல்துறை அதிகாரிகளின் கொலைகள் குறித்து முறையான விசாரணைகள் நடத்தப்பட்டிருந்தால், ஈஸ்டர் ஞாயிறு தாக்குதல்களைத் தடுத்திருக்க முடியும் என்றும் அமைச்சர் ஆனந்த விஜேபால குறிப்பிட்டார்.
