மேலும்

சஷீந்திர ராஜபக்சவுக்கு எதிராக குற்றப்பத்திரம் தாக்கல்

ஊழல் குற்றச்சாட்டு தொடர்பாக சிறிலங்காவின்  முன்னாள் இராஜாங்க அமைச்சர் சஷீந்திர ராஜபக்ச உள்ளிட்ட மூன்று பேருக்கு எதிராக கொழும்பு மேல்நீதிமன்றத்தில் நேற்று குற்றப்பத்திரங்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன.

குற்றப்பத்திரம் தாக்கல் செய்யப்பட்டதைத் தொடர்ந்து, சந்தேக நபர்களை  தலா ரூ.1 மில்லியன் மதிப்புள்ள இரண்டு பேரின் பிணையில் விடுவிக்க  கொழும்பு மேல்நீதிமன்றம் உத்தரவிட்டது.

இந்த வழக்கு நேற்று  கொழும்பு மேல்நீதிமன்றம்  நீதிபதி ரவீந்திர பிரேமரத்னவின் முன்னிலையில் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்ட போது, இலஞ்சம் அல்லது ஊழல் குற்றச்சாட்டுகளை விசாரிக்கும்  ஆணைக்குழு, ஊழல் குற்றச்சாட்டு தொடர்பாக முன்னாள் இராஜாங்க அமைச்சர் சஷீந்திர ராஜபக்ச,  செபாலிகா சமன் குமாரி மற்றும் கீர்த்தி பண்டார கொட்டகம ஆகியோருக்கு எதிராக குற்றப்பத்திரங்களை  தாக்கல் செய்தது.

சந்தேக நபர்களுக்கு எதிராக 10 குற்றச்சாட்டுகளின் கீழ் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்திருந்ததுடன், 30 அரசுத் தரப்பு சாட்சிகளும் 38 ஆவணங்களும் இந்த வழக்கின் சான்றுகளாக இணைக்கப்பட்டுள்ளன.

2022 மே 9 ஆம் நாள் நடைபெற்ற “அரகலய” போராட்டத்தின் போது, மகாவலி அதிகார சபைக்குச் சொந்தமான, செவனகல கிரிப்பன்வெவ பகுதியில் அமைந்திருந்த கட்டடம் மற்றும் சொத்துக்கள் சேதமடைந்ததற்கு இழப்பீடாக ரூபா 8,850,000 பெறுவதற்காக, சேத மதிப்பீட்டுச் சபை அலுவலகத்தில் பணியாற்றும் சில அரசாங்க அதிகாரிகளுக்குத் தமது அதிகாரபூர்வ அதிகாரத்தைப் பயன்படுத்தி செல்வாக்கு செலுத்தியதாகவும், அதன்மூலம் “ஊழல்” குற்றத்தைச் செய்ததாகவும், அந்தக் குற்றத்திற்கு உடந்தையாக இருந்ததாகவும்  குற்றப்பத்திரங்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன.

இந்த வழக்கு, விசாரணைக்கு முந்தைய கலந்தாய்விற்காக ஓகஸ்ட் 5 ஆம் நாள் மீண்டும் எடுத்துக்கொள்ளப்படும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *