அவசரமாக போகம்பறையிலும் மற்றொரு சிறைச்சாலை திறப்பு
கண்டி, பழைய போகம்பறை சிறைச்சாலையை சிறிலங்கா அரசாங்கம் அதிகாரப்பூர்வமாக மீண்டும் நிறுவியுள்ளது.
நீதி மற்றும் தேசிய ஒருமைப்பாட்டு அமைச்சர் ஹர்ஷன நாணயக்காரவினால், 2026, ஜூலை 8 நாள் வெளியிடப்பட்ட ஒரு சிறப்பு அரசிதழ் மூலம் இந்த முடிவு அறிவிக்கப்பட்டுள்ளது.
பழைய போகம்பறை சிறைச்சாலை, சிறிலங்கா முழுவதையும் உள்ளடக்கிய அதிகார வரம்புடன், ஒரு சிறைச்சாலையாக நிறுவப்படுவதாக அந்த அரசிதழில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
நாடு முழுவதும் உள்ள சிறைச்சாலைகளில் நிலவும் கடுமையான நெரிசலைக் குறைக்கவும், நீர்கொழும்பு சிறைச்சாலையில் ஏற்பட்ட உயிரிழப்புகளை அடுத்தும் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
138 ஆண்டுகளாகச் செயற்பட்ட கண்டியில் உள்ள போகம்பறை சிறைச்சாலை, 2014ஆம் ஆண்டு மூடப்பட்டது.
அங்கிருந்த கைதிகள் பல்லேகலயில் உள்ள தும்பற சிறைச்சாலைக்கு மாற்றப்பட்டனர்.
காலி- மகாமோதரவில் புதிய சிறைச்சாலையை நிறுவும் அரசிதழ் நேற்று முன்தினம் வெளியிடப்பட்ட நிலையில் நேற்று போகம்பறை சிறைச்சாலையை மீண்டும் ஆரம்பிக்கும் அரசிதழ் வெளியிடப்பட்டுள்ளது.
