பலாலி காணிகள் இராணுவத்திற்கே- விடுவிக்க மறுக்கிறது சிறிலங்கா அரசாங்கம்
பலாலியில் சிறிலங்கா படையினர் வசமுள்ள உயர்பாதுகாப்பு வலயக் காணிகளை பொதுமக்களிடம் ஒப்படைக்க முடியாது என, சிறிலங்கா பாதுகாப்பு பிரதி அமைச்சர் மேஜர் ஜெனரல் அருண ஜயசேகர தெரிவித்துள்ளார்.
சிறிலங்கா நாடாளுமன்றத்தில் நேற்று இராமநாதன் அர்ச்சுனா எழுப்பிய கேள்விகளுக்கு பதிலளித்த போதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
வடக்கு, கிழக்கு மாகாணங்களில் உள்ள தமிழ் மக்களின் நிலங்களை சிறிலங்கா இராணுவம் கைப்பற்றவில்லை.
அந்த நிலங்கள் அத்தியாவசியத் தேவைகள் மற்றும் பாதுகாப்பு காரணங்களுக்காகப் பயன்படுத்தப்பட்டு வருகின்றன.
வடக்கு மற்றும் கிழக்கில் முப்படைகளால் பயன்படுத்தப்படும் தேசிய முக்கியத்துவம் வாய்ந்த நிலங்களை விடுவிப்பதற்கு தற்போது எந்த வாய்ப்பும் இல்லை.
பலாலி இராணுவ மருத்துவமனை அமைந்துள்ள நிலத்தை இராணுவப் பாதுகாப்பிலிருந்து விடுவிக்க முடியாது.
இந்த மருத்துவமனை 27.9 ஏக்கர் நிலத்தில் கட்டப்பட்டுள்ளது. பலாலி இராணுவ மருத்துவமனை கட்டிடத்தை புனரமைக்க வேண்டிய அவசியம் உள்ளது.
இதற்காக 99.3 மில்லியன் ரூபா மதிப்பிடப்பட்டு 55 மில்லியன் ரூபா இதுவரையில் செலவிடப்பட்டுள்ளது. இந்த ஆண்டு 42.11 மில்லியன் ரூபா நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.
பலாலி பகுதி உயர் பாதுகாப்பு வலயமாக அடையாளம் காணப்பட்டு, இந்த வலயத்தில் உள்ள 1,661 ஏக்கர் காணிகளை சட்டப்படி சிறிலங்கா இராணுவத்திற்கு கையகப்படுத்தவும், காணி அமைச்சு மூலம் நில உரிமையாளர்களுக்கு இழப்பீடு வழங்கவும் நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளதால், அடையாளம் காணப்பட்ட இந்த காணிகளை விடுவிக்க முடியாது.
பொதுப் பாதுகாப்பு மற்றும் தேசியப் பாதுகாப்புக்கு அத்தியாவசியமற்ற நிலங்கள் கட்டம் கட்டமாக விடுவிக்கப்பட்டு வருகின்றன.
2009 மற்றும் 2024ஆண்டுகளுக்கு இடையில், வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் சிறிலங்கா இராணுவக் கட்டுப்பாட்டில் இருந்த 64,663 ஏக்கர் காணிகள் விடுவிக்கப்பட்டுள்ளன.
நாங்கள் ஆட்சிக்கு வந்த பின்னர், 692 ஏக்கர் நிலத்தை விடுவித்தோம். அடுத்த சில மாதங்களில் 243 ஏக்கர் நிலங்களை விடுவிக்க நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன.
பலாலி விமான நிலையம் 774.98 ஏக்கர் பரப்பளவில் அமைக்கப்பட்டுள்ளது. எதிர்காலத்தில் விமான நிலையத்தின் மேம்பாட்டிற்கு கூடுதல் நிலங்கள் தேவைப்படும் என்று சிவில் விமானப் போக்குவரத்து அதிகாரசபை, சிறிலங்கா விமானப்படை மூலம் பாதுகாப்பு அமைச்சுக்கு அறிவுறுத்தியுள்ளது.
பொதுவான கொள்கையின் அடிப்படையில், முரண்பாடற்ற முறையில் இந்தக் கோரிக்கையின் மீது கூட்டாக நடவடிக்கை எடுக்குமாறு, காணி அமைச்சு, நில அளவைத் திணைக்களம், முப்படைகள் மற்றும் பிரதேச செயலகங்களுக்கு நாங்கள் அறிவுறுத்தியுள்ளோம்.
இந்தப் பகுதிகளில் சிறிலங்கா இராணுவம் விவசாய நடவடிக்கைகளில் ஈடுபடுவதில்லை. அவர்கள் தங்களின் சொந்தத் தேவைகளுக்காகவே விவசாய நடவடிக்கைகளில் ஈடுபடுகிறார்கள். இது வணிக நோக்கங்களை அடிப்படையாகக் கொண்டதல்ல.
நான் அண்மையில் வடக்கு மாகாணத்திற்குச் சென்றிருந்தேன். அங்கு பொதுமக்களுடன் கலந்துரையாடினேன்.
நாடாளுமன்ற உறுப்பினர் அர்ச்சுனா மக்களிடம் செல்லாமலேயே எதையும் கூறலாம். அதில் எங்களுக்கு எந்தப் பிரச்சினையும் இல்லை.
மக்களின் பாதுகாப்பை உறுதி செய்து கொண்டு, முடிந்தவரை நிலங்களை நாங்கள் விடுவிப்போம்.
விடுவிக்க முடியாத நிலங்களுக்கு மாற்று நிலங்களோ அல்லது இழப்பீடோ வழங்கப்படும். அதற்கான நடவடிக்கைகளை நாங்கள் தற்போது எடுத்துள்ளோம்,” என்றும் சிறிலங்கா பாதுகாப்பு பிரதி அமைச்சர் தெரிவித்தார்.
