அவசரமாக 38,000 மெட்ரிக் தொன் எரிபொருளை அனுப்பி வைத்தது இந்தியா
எரிபொருள் விநியோக நெருடிக்கடியை தீர்க்கும் நோக்கில், 38,000 மெட்ரிக் தொன் எரிபொருள் அடங்கிய ஒரு கப்பல், இந்தியாவில் இருந்து நாளை கொழும்புக்கு வந்து சேரவுள்ளது.
இந்தக் கப்பலில் 20,000 மெட்ரிக் தொன் டீசலும், 18,000 மெட்ரிக் தொன் பெட்ரோலும் கொண்டு வரப்படுவதாக இந்தியத் தூதரகம் தகவல் வெளியிட்டுள்ளது.
இந்தியப் பிரதமர் நரேந்திர மோடிக்கும் சிறிலங்கா அதிபர் அனுரகுமார திசாநாயக்கவுக்கும் இடையே மார்ச் 24 ஆம் நாள் நடைபெற்ற தொலைபேசி உரையாடலைத் தொடர்ந்து இந்தக் கப்பல் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.
முன்னதாக, இந்திய வெளியுறவு அமைச்சர் எஸ். ஜெய்சங்கருடன், சிறிலங்கா வெளிவிவகார அமைச்சர் விஜித ஹேரத், மார்ச் 23 ஆம் நாள், எரிபொருள் நெருக்கடி நிலைகுறித்து தொலைபேசி மூலம் பேச்சுநடத்தியிருந்தார்.
லங்கா ஐஓசி நிறுவனம் மத்திய கிழக்கு மற்றும் சிங்கப்பூரில் உள்ள வழங்குநர்களிடம் இருந்து மார்ச் மாதத்திற்கான எரிபொருள் விநியோகத்தைப் பெற்றிருந்த போதும், மத்திய கிழக்கில் நடந்து வரும் மோதல் தொடர்பான விநியோகத் தடைகள் மற்றும் கப்பல்கள் கிடைக்காததைக் காரணம் காட்டி, அந்த வழங்குநர்கள் உரிய நேரத்தில் எரிபொருளை விநியோகிக்கவில்லை.
இதையடுத்து ஏற்பட்டுள்ள நெருக்கடியை தணிக்கும் வகையிலேயே, இந்தியாவின் ஐஓசி நிறுவனத்திடம் இருந்து அவசர எரிபொருள் விநியோகத்தை சிறிலங்கா கோரியிருந்தது.
இந்திய- சிறிலங்கா உயர்மட்டப் பேச்சுக்களின் விளைவாகவே கப்பல் மூலம் எரிபொருள் விநியோகிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
