மேலும்

சிறிலங்கா- ஜப்பான் இடையே பாதுகாப்பு ஒத்துழைப்பை வலுப்படுத்த இணக்கம்

சிறிலங்கா பாதுகாப்பு பிரதி அமைச்சர் மேஜர் ஜெனரல் அருண ஜயசேகர தலைமையிலான சிறிலங்கா பாதுகாப்பு அதிகாரிகள் குழு, ஜப்பானுக்கு இரண்டு நாள் பயணத்தை மேற்கொண்டு, உயர்மட்ட சந்திப்புகளை நடத்தியுள்ளது.

இந்தப் பயணத்தின் போது,  2வது ஜப்பான்-சிறிலங்கா பாதுகாப்பு உரையாடலில் பங்கேற்ற சிறிலங்கா  குழுவினர்,  ஜப்பானிய வெளியுறவு மற்றும் பாதுகாப்பு அமைச்சு அதிகாரிகளையும் சந்தித்து கலந்துரையாடியுள்ளனர்.

பாதுகாப்பு ஒத்துழைப்பை வலுப்படுத்துதல், கடல்சார் பாதுகாப்பு மற்றும் சிறிலங்காவின் பாதுகாப்புத் துறைக்கான திறன் மேம்பாடு ஆகியன குறித்து இந்தக் கலந்துரையாடல்களில் கவனம் செலுத்தப்பட்டுள்ளது.

நாடுகடந்த கடல்சார் குற்றங்களைத் தடுப்பது மற்றும் கடலோரக் காவல்படையின் திறன்களை வலுப்படுத்துவது ஆகியவற்றில் ஒத்துழைப்பது குறித்தும் இரு தரப்பினரும் கலந்துரையாடியுள்ளனர்.

ஜப்பானின் வெளி விவகார இராஜாங்க அமைச்சர் குனிமிட்சு அயானோ,  பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் மியாசாகி மசஹிசா, அனைத்துலக விவகாரங்களுக்கான பாதுகாப்பு பிரதி அமைச்சர்  கானோ கோஜி மற்றும் ஜப்பான் கடற்படைத் தலைமைத் தளபதி ஆகியோரையும் சிறிலங்கா குழுவினர் சந்தித்துப் பேச்சு நடத்தியுள்ளனர்.

சிறிலங்கா பாதுகாப்பு பிரதி அமைச்சருடன், சிறிலங்கா கடற்படைத் தளபதி மற்றும் மூத்த அதிகாரிகளும் இந்த சந்திப்புகளில் கலந்து கொண்டனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *