சிறிலங்காவிடம் உள்ள எரிபொருள் கையிருப்பு- வெளியிட்டார் குமார ஜயக்கொடி
சிறிலங்காவில் எரிபொருள் கையிருப்பு தொடர்பாக, எரிசக்தி அமைச்சர் குமார ஜயக்கொடி நாடாளுமன்றத்தில் இன்று அறிக்கை வெளியிட்டுள்ளார். இன்று காலை அவர் நாடாளுமன்றத்தில் ஒரு சிறப்பு அறிக்கையை வெளியிட்டார்.
அதன்படி,
ஒக்டேன் 92 பெட்ரோல் – ஏப்ரல் 23 வரையும்
ஒக்டேன் 95 பெட்ரோல் – மே 10 வரையும்
டீசல் – ஏப்ரல் 12 வரையும்
சுப்பர் டீசல் – மே 10 வரையும் போதுமானதாக உள்ளது.
தற்போது சேமிப்பில் உள்ள எரிபொருள் மற்றும் ஏற்கனவே துறைமுகத்தில் உள்ள மூன்று கப்பல்களிலிருந்து வரும் விநியோகங்கள் ஆகியவை இந்த மதிப்பீடுகளில் அடங்கும் என்றும் அமைச்சர் குமார ஜயக்கொடி மேலும் குறிப்பிட்டுள்ளார்.
சரியான நேரத்தில் விநியோகத்தைப் பெறுவதற்காக, வழங்குநர்களுடன் பேச்சுவார்த்தைகள் நடைபெற்று வருவதாகவும், அதே நேரத்தில் புதிய வழங்குநர்களிடம் இருந்து எரிபொருளைப் பெறுவதற்கான முயற்சிகளும் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் அவர் மேலும் கூறினார்.
தடையற்ற வழங்கலை உறுதி செய்வதற்காக, பல்வேறு வழங்குநர்களிடமிருந்து வரும் முன்மொழிவுகள் பரிசீலிக்கப்பட்டு வருவதாகவும் அவர் குறிப்பிட்டார்.
போரின் விளைவாக நிலவும் தற்போதைய சூழ்நிலைகளைக் கையாள்வதற்குத் தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் அரசாங்கம் எடுத்து வருவதாகவும் அமைச்சர் குமார ஜயக்கொடி தெரிவித்துள்ளார்.
