செம்மணி மனிதப் புதைகுழி அகழ்வில் நீதி அமைச்சின் அரசியல் தலையீடு
செம்மணி மனிதப் புதைகுழி அகழ்வில் நீதி அமைச்சு கடுமையான முறையில் தலையீடு செய்வதாக, தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் தலைவரும்,நாடாளுமன்ற உறுப்பினருமான கஜேந்திரகுமார் பொன்னம்பலம் குற்றம்சாட்டியுள்ளார்.
நாடாளுமன்றத்தில் நேற்று தேசபந்து தென்னக்கோனை காவல்துறை மா அதிபர் பதவியில் இருந்து நீக்குவது தொடர்பான விவாதத்தில் உரையாற்றிய போதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
தேசபந்து தென்னக்கோன் ஒரு அரசியல் முகவர், அவருடைய காலம் முழுவதும் அரசியல்வாதிகளுக்கு முகவராக செயற்பட்ட வரலாறு கொண்ட ஒருவர்.
அந்த வகையில் அவர் மீது முன்வைக்கப்பட்டுள்ள குற்றச்சாட்டுக்கள் அனைத்துமே ஒரு அரசியல் பின்னோக்கத்தோடு அணுகப்பட வேண்டும்.
அதேவேளை தேசபந்து தென்னக்கோன் என்ற நபர் மட்டும்தான் அவ்வகையான அரசியல் மயப்படுத்தப்பட்ட கலாசாரத்தில் சிக்கிக் கொண்டவர் எனக் கூற முடியாது.
ஒட்டுமொத்த அரச இயந்திரமே அரசியல் மயப்படுத்தப்பட்ட நிலையில் இருப்பதாக இந்த அரசாங்கம் ஒவ்வொரு தடவையும் குற்றம்சாட்டுகின்றது. அது உண்மை.
இந்த அரசாங்கம் இன்று தேசபந்து தென்னகோனுக்கு எதிராக எடுக்கின்ற நிலைப்பாட்டுக்கு காரணம் , அவர்களும் பாதிக்கப்பட்டிருப்பார்கள்.
அல்லது தேசபந்து தென்னகோனினால் எந்த வித நன்மையும் பெறமுடியாது போயிருக்கும்.
தேசபந்து தென்னகோன் தெற்கு அரசியலில் இருப்பதால் -இன்று உங்களுக்கு சந்தர்ப்பம் கிடைப்பதால் நீங்கள் அவரை குறி வைக்கிறீர்கள்.
ஆனால் அவரை மட்டும் குறிவைப்பதால்- நீங்கள் இந்த நாட்டின் அடிப்படை புற்றுநோயாக இருக்கும் அனைத்து விடயங்களிலும் தலையீடு செய்கின்ற அரசியல் புற்றுநோயை நீங்கள் நீக்கப் போவதில்லை.
அப்படி நீங்கள் நீக்குவதற்கு முயற்சித்தாலும் கூட தமிழ் மக்களுக்கு இருக்கும் பிரச்சினைகள், தமிழ் மக்கள் இன்று சந்திக்கின்ற அநீதிகளுக்கு நீங்கள் ஒருபோதும் நீதியை வழங்கப் போவதில்லை.
ஏனெனில், நீங்களும் தமிழ் மக்களுக்கு எதிராக திட்டமிட்டு செயற்படுகின்ற ஒரு தரப்பாகவே இருக்கிறீர்கள்.
செம்மணி மனிதப் புதைகுழி அகழ்வுகள் இடம்பெற்றுக் கொண்டிருக்கின்றன. 130 எலும்புக்கூடுகளுக்கு மேலாக கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.
அங்கு கண்டுபிடிக்கப்பட்ட தடயப் பொருட்களை பொதுமக்களுக்கு முன்பாக வைத்து அவர்கள் அதனை அடையாளப்படுத்துவதற்கு நீதிவான் சந்தர்ப்பத்தை வழங்கியுள்ளார்.
இந்த விவாதம் நடக்கின்ற நிலையில் செம்மணியில் பொது மக்களை அழைத்து தடயப்பொருட்களை அடையாளம் காண நடவடிக்கை மேற்கொள்ளப்படுகின்றது.
இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுக் கொண்டிருக்கின்ற இந்த நிமிடத்தில் நீதி அமைச்சின் செயலாளர் அங்கு வேலை செய்து கொண்டிருக்கின்ற, அகழ்வு செயற்பாடுகளில் ஈடுபட்டுக் கொண்டிருக்கின்றவர்களுடன் நேரடியாக தொடர்பு கொண்டு பேசிக்கொண்டிருக்கின்றார். இதனை நான் பொறுப்புடன் கூறுகின்றேன்.
இது அரசியல் மயப்படுத்தும் வேலைத்திட்டம் அல்லவா? இது அரசியல் தலையீடு இல்லையா?
இது ஒரு அழுத்தத்தை கொடுக்கும் விடயம் அல்லவா?
நீதிமன்றம் நடத்துகின்ற ஒரு செயற்பாட்டில் உங்களுக்கு தகவல் வேண்டும் என்றால், நீங்கள் நீதிமன்றத்திற்குத்தான் போக வேண்டும்.
நீதி அமைச்சு அங்கு வேலை செய்து கொண்டிருப்பவர்களுடன் நேரடியாக தொடர்பு கொள்வது அரசியல் தலையீடு. அதை நீங்கள் செய்யலாமா?
நீதி அமைச்சு செயலாளர்தான் இவ்வாறு செயற்படுகிறார். நான் மிகவும் மதிக்கும் அவர், இப்படி செயற்படுவார் என ஒரு போதும் நினைக்கவில்லை. ஆனால் அது நடக்கின்றது.
இன்று யாழ்ப்பாணத்தில் செம்மணி தடயப்பொருட்களை அடையாளம் காண வைக்கப்பட்டுள்ள இடத்தின் வாசலில் குற்றப் புலனாய்வுத்துறையினர் இருக்கின்றார்கள். இது மக்களை மிரட்டும் விளையாட்டல்லவா?
மக்கள் ஏற்கனவே பீதியில் இருக்கின்ற நிலையில் அம்மக்கள் அந்த இடத்திற்கு போகின்றபோது அவர்களை மிரட்டுகின்ற திட்டமிட்ட செயற்பாடல்லவா இது?
ஆனால் இதனை நீங்கள் செய்யலாம். ஏனெனில் இது தமிழனுக்கு நடக்கின்றது. இது என்ன நியாயம் ?
அரசியல் தலையீடு என்ற புற்றுநோயை நீக்க அரசாங்கம் எடுக்கின்ற நடவடிக்கைக்கு எமது ஆதரவுண்டு .
ஆனால் இந்த அரசு தமிழ்மக்களுக்கு செய்கின்ற அநியாயத்தை, இன்றைக்கும் தமிழ் மக்கள் பொறுப்புக்கூறலுக்கான எதிர்பார்ப்புடன் இருக்கின்ற நிலையில், நீங்கள் இன்றும் எமது மக்களுக்கு செய்கின்ற அநியாயத்தை மன்னிக்கவே முடியாது.
உங்களுக்கும் மற்றவர்களுக்குமிடையில் இனம் சார்ந்த விடயங்களில் ஒரு வித்தியாசமும் கிடையாது.
சிறிலங்கா மனித உரிமைகள் ஆணைக்குழு யாழ்ப்பாணம் சென்று, அகழ்வு இடங்களை கண்காணித்தது. தங்களின் கருத்துக்களை தெரிவித்தது.
இவர்கள் உண்மையில் ஒரு சுயாதீனமான அமைப்பாக இருந்தால், செம்மணியில் நடந்துள்ள அநியாயம் ரோம் சாசனத்தில் இருக்கக் கூடிய குற்றங்கள்.
இந்த நாட்டில் இவை குற்றங்களைக் அறிவிக்கப்படாத நிலையில் சர்வதேச குற்றவியல் விசாரணை மட்டும்தான் ஒரு இந்த அநியாயங்களுக்கு நீதியைக்கொடுக்கும் என்ற அறிக்கையைத்தான் முன்வைக்க வேண்டும்.
ஆனால் அவர்கள் அதனை சொல்லாமல் ஊடகங்களுக்கு தயவு செய்து உணர்வு பூர்வமாக இந்த விடயங்களை வெளிக்கொண்டு வராதீர்கள் என புத்திமதி கூறுகிறார்கள்.
அதனால்தான், ஒரு அரசே ஒரு இனத்துக்கு எதிராக இருக்கின்றபோது அந்த இனத்துக்கு நீதி இந்த அரசு கட்டுமானங்கள் ஊடாக கிடைக்காது என்பதை நான் கூறுகின்றேன்.
130 க்கும் மேற்பட்ட எலும்புக்கூடுகள் மீட்கப்பட்ட நிலையிலாவது இதனை ஏற்றுக் கொள்ள வேண்டும் என்றும் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தெரிவித்துள்ளார்.