மேலும்

சோமரத்ன ராஜபக்சவின் பாதுகாப்பை உறுதி செய்ய சகோதரி கோரிக்கை

சோமரத்ன ராஜபக்சவின் பாதுகாப்பைப் பலப்படுத்துவதற்கு சிறைச்சாலை அதிகாரிகள் உடன் நடவடிக்கை எடுக்க வேண்டும் என அவரது சகோதரி ரோஹினி ராஜபக்ச வலியுறுத்தியுள்ளார்.

செம்மணிப் புதைகுழி தொடர்பாக, சர்வதேச விசாரணை முன்னெடுக்கப்பட்டால், அதில் சாட்சியமளிப்பதற்குத் தயாராக இருப்பதாக, மனைவி ஊடாக தனது சகோதரன் சோமரத்ன ராஜபக்ச கூறியிருப்பதன் விளைவாக, அவரது பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் ஏற்படக்கூடும் என்றும் அவர் அச்சம் வெளியிட்டுள்ளார்.

கிருஷாந்தி குமாரசாமி படுகொலை வழக்கில் பிரதான குற்றவாளியாக நீதிமன்றத்தினால் தீர்ப்பளிக்கப்பட்ட லான்ஸ் கோப்ரல் சோமரத்ன ராஜபக்ச, செம்மணி புதைகுழிகள் தொடர்பாக சாட்சியமளிக்கவும், அதற்குக் காரணமான உயர் அதிகாரிகள் குறித்து வெளிப்படுத்தவும் தயாராக இருப்பதாக-  சிறிலங்கா அதிபருக்கு அனுப்பிய கடிதத்தில் அவரது மனைவி குறிப்பிட்டிருந்தார்.

இந்த நிலையில், வெலிக்கடை சிறைச்சாலையில் இருக்கும் தனது சகோதரரின் உயிருக்கு அச்சுறுத்தல் ஏற்படக்கூடும் என தெரிவித்துள்ள அவரது சகோதரி, இதுகுறித்து அரசாங்கம் கவனம் செலுத்த வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்துள்ளார்.

மரணதண்டனை விதிக்கப்பட்டு 29 ஆண்டுகளாக  சிறைவாசம் அனுபவித்துவரும் தனது சகோதரர் சோமரத்ன ராஜபக்சவுக்கு கடந்த காலங்களில் சிறைக்கு உள்ளிருந்தும், வெளியே இருந்தும் பல்வேறு அழுத்தங்கள் பிரயோகிக்கப்பட்டதாகவும்,  அவர் கூறியுள்ளார்.

சில சந்தர்ப்பங்களில் அவரது உயிருக்கு அச்சுறுத்தலை ஏற்படுத்தக் கூடிய சம்பவங்கள் இடம்பெற்றதாகவும் சோமரத்ன ராஜபக்சவின் சகோதரி சுட்டிக்காட்டியுள்ளார்.

இவ்வாறான பின்னணியில் தற்போது சோமரத்ன ராஜபக்சவின் பாதுகாப்பைப் பலப்படுத்துவதற்கு உடனடியாக நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்றும் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *