செம்மணியில் இன்றும் தொடர்ந்த ஸ்கான் பரிசோதனை – 3 வாரங்களில் அறிக்கை
யாழ்ப்பாணம்- செம்மணி சித்துப்பாத்தி, மனிதப் புதைகுழிகளுக்கு அருகே இன்று இரண்டாவது நாளாகவும், ஸ்கானர் இயந்திரம் மூலம் நிலத்தை ஆய்வு செய்யும் பணிகள் முன்னெடுக்கப்பட்டன.
சித்துப்பாத்தி மயானத்தில் ஏற்கனவே இரண்டு மனிதப் புதைகுழிகள் கண்டுபிடிக்கப்பட்டு அகழ்வுப் பணிகள் முன்னெடுக்கப்படுகின்றன.
இந்த இரண்டு தடயவியல் அகழ்வாய்வுத் தளங்களைச் சுற்றியுள்ள பகுதிகள் துப்புரவு செய்யப்பட்டு, ராடர் மூலம் நிலத்தை ஊடுருவிச் சோதனை செய்வதற்கு திட்டமிடப்பட்டது.
எனினும், இதற்கு சிறிலங்கா பாதுகாப்பு அமைச்சு அனுமதி வழங்காத நிலையில், சிறி ஜயவர்த்தனபுர பல்கலைக்கழகத்தின் ஸ்கானர் இயந்திரத்தைப் பயன்படுத்தி நேற்று பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது.
இதன்போது அந்தப் பகுதிகளிலும் சடலங்களின் எச்சங்கள் காணப்படுவதாக கண்டறியப்பட்டது என சட்டத்தரணி நிரஞ்சன் தெரிவித்திருந்தார்.
இன்று காலை 8 மணி தொடக்கம், பிற்பகல் 2 மணி வரை ஸ்கானர் மூலம் நிலத்தைப் பரிசோதனை செய்யும் நடவடிக்கைகள் இடம்பெற்றுள்ளன.
இந்த ஸ்கான் பரிசோதனைகள் தொடர்பான அறிக்கை 3 வாரங்களிற்குள், சிறி ஜயவர்த்தனபுர பல்கலைக்கழக தொழில்நுட்ப பீட நிபுணர்களால், யாழ்ப்பாண நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கப்படும் என, சட்டத்தரணி ரனித்தா ஞானராஜா தெரிவித்துள்ளார்.