செம்மணியில் சான்றுப் பொருட்களை அடையாளம் காணத் திரண்ட மக்கள்
யாழ்ப்பாணம்- செம்மணி, சித்துப்பாத்தி மனிதப் புதைகுழிகளில் இருந்து மீட்கப்பட்ட சான்றுப் பொருட்கள் அடையாளம் காணுவதற்காக இன்று பார்வைக்கு வைக்கப்பட்டன.
யாழ்ப்பாணம், நீதிவான் நீதிமன்றத்தின் கட்டளைப்படி, செம்மணி சித்துப்பாத்தி மயானத்தில், உடைகள், பாடசாலைப் பை, பொம்மை, குழந்தைகளுக்கு பாலூட்டும் போத்தல் உள்ளிட்ட 43 சான்றுப் பொருட்கள், மக்களின் பார்வைக்காக வைக்கப்பட்டன.
இன்று பிற்பகல் 1.30 மணி தொடக்கம், 5 மணி வரை இவை அடையாளம் காண்பதற்காக வைக்கப்பட்டிருந்தன.
நீதிமன்ற ஒழங்கமைப்பின் கீழ், பார்வைக்காக வைக்கப்பட்டிருந்த இந்தப் பொருட்களை அடையாளம் காண்பதற்காக, காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள், பொதுமக்கள் என 200இற்கும் அதிகமானோர் திரண்டிருந்தனர்.
எனினும் எந்த சான்றுப் பொருட்களும் அடையாளம் காணப்படவில்லை என சட்டத்தரணி ரனித்தா ஞானராஜா தெரிவித்துள்ளார்.
இந்தச் செயற்பாட்டிற்கு யாழ்ப்பாணம் மருத்துவபீட மாணவர்கள், சட்ட மருத்துவ அதிகாரிகள், மற்றும் உளநல மருத்துவர்களும் உதவி வழங்கியிருந்தனர்.
இந்த நிகழ்வை படம் பிடிக்க ஊடகங்களுக்கு நீதிமன்றம் ஏற்கனவே தடைவிதித்திருந்தது.