மேலும்

செம்மணியில் மேலும் 5 மனித எலும்புக்கூடுகள் அடையாளம்

யாழ்ப்பாணம்- செம்மணி சித்துப்பாத்தி மனிதப் புதைகுழியில் இருந்து இன்று பதிதாக 5 மனித எலும்புக் கூட்டுத் தொகுதிகள் அடையாளம் காணப்பட்டுள்ளன.

செம்மணி புதைகுழியின் இரண்டாம் கட்ட அகழ்வின் 30ஆம் நாள் அகழ்வுப் பணி இன்று முன்னெடுக்கப்பட்ட போதே புதிதாக 5 மனித எலும்புக்கூட்டுத் தொகுதிகள் அடையாளம் காணப்பட்டன.

இதையடுத்து இதுவரை இனங்காணப்பட்டுள்ள மனித எலும்புக்கூட்டுத் தொகுதிகளின் எண்ணிக்கை 135 ஆக அதிகரித்துள்ளது.

அதேவேளை, ஏற்கனவே இனங்காணப்பட்ட 6 மனித எலும்புக்கூட்டுத் தொகுதிகள் இன்று முழுமையாக அகழ்ந்தெடுக்கப்பட்டுள்ளதை அடுத்து, இதுவரை அகழ்ந்தெடுக்கப்பட்ட மனித எலும்புக்கூட்டுத் தொகுதிகளின் எண்ணிக்கை 126 ஆக உயர்ந்துள்ளது.

செம்மணி புதைகுழியை சுற்றி ஸ்கான் பரிசோதனை

செம்மணி புதைகுழியைச் சுற்றியுள்ள பகுதியில் மேலும் எலும்புக்கூடுகள் புதைந்துள்ளனவா என்பதைக் கண்டறிவதற்கான ஸ்கான் பரிசோதனை இன்று மேற்கொள்ளப்பட்டது.

சிறிஜயவர்த்தனபுர பல்கலைக்கழகத்தில் இருந்து ஸ்கானர் இயந்திரம் கொண்டு வரப்பட்டு, யாழ்ப்பாண நீதிவான் ஆனந்தராஜா முன்னிலையில், துறைசார் நிபுணர்களால் இந்த பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

இந்த ஸ்கான் பரிசோதனை பற்றிய அறிக்கை நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்ட பின்னர், ஏனைய பகுதிகளிலும் அகழ்வு மேற்கொள்வதாக என்று தீர்மானிக்கப்படும்.

செம்மணி  புதைகுழியை பார்வையிட்ட சிறிலங்கா மனித உரிமைகள் ஆணைக்குழு

செம்மணி மனிதப் புதைகுழிப் பகுதிக்கு சிறிலங்கா மனித உரிமைகள் ஆணைக்குழுவின் ஆணையாளர்கள் இன்று பயணம் மேற்கொண்டிருந்தனர்.

சிறிலங்கா மனித உரிமைகள் ஆணைக்குழுவின் ஆணையாளர்கள் கலாநிதி கெஹான் தினுக் குணதிலக, பேராசிரியர் தையமுத்து  தனராஜ், பேராசிரியர் பாத்திமா பர்சானா ஹனிபா அனங்குய  மற்றும் மனித உரிமைகள் ஆணைக்குழுவின் பணிப்பாளர்கள் இருவர், ஆணைக்குழுவின் யாழ்ப்பாண பிராந்திய அதிகாரிகள் உள்ளிட்ட எட்டுப் பேர் கொண்ட குழு  செம்மணி மனிதப் புதைகுழியை இன்று பார்வையிட்டது.

அகழ்வுப் பணிகளைப் பார்வையிட்ட அவர்கள், அகழ்வாய்வில் ஈடுபட்டுள்ள நிபுணர்களிடமும் விபரங்களைக் கேட்டறிந்து கொண்டனர்.

படங்கள்- முகநூல்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *