செம்மணி புதைகுழி- சர்வதேச பொறிமுறையை கோருகிறார் விக்னேஸ்வரன்
செம்மணிப் புதைகுழியில் சுமார் 100க்கும் அதிகமான எலும்புக்கூடுகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ள நிலையில், சர்வதேச மேற்பார்வை பொறிமுறையை நாடுமாறு சிறிலங்கா அரசாங்கத்திடம், தமிழ் மக்கள் கூட்டணியின் செயலாளர் நாயகம் சி.வி.விக்னேஸ்வரன் வலியுறுத்தியுள்ளார்.
படுகொலை இடம்பெற்றதில் இருந்து, அனைத்து அரசாங்கங்களும் சம்பவத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கு நீதி வழங்கத் தவறிவிட்டன.
எனவே, சிறிலங்கா அரசாங்கத்துடன் தொடர்புடைய அதிகாரிகள் மீதான பொதுமக்களின் நம்பிக்கை பல ஆண்டுகளாக குறைந்து வருகிறது.
இந்த வழக்கில் சில நிறுவனங்கள் மற்றும் அதிகாரிகள் நீதிக்கு இடையூறு விளைவிப்பார்கள்.
இது சந்திரிகா குமாரதுங்க அரசாங்கத்தின் போது நடந்தது. அதன் பின்னர் ஆட்சிக்கு வந்த ஒவ்வொரு அரசாங்கமும் இந்த விடயத்தில், எதையும் செய்யவில்லை.
செம்மணி மட்டுமல்ல, நூற்றுக்கணக்கான மக்கள் கொல்லப்பட்ட சத்துருகொண்டான் போன்ற பல இடங்களிலும் கூட, இதுவரை யாரும் அதைப் பற்றிப் பேசவில்லை.
மக்கள் கூறியவற்றில் நாங்கள் மிகவும் அலட்சியமாக இருந்துள்ளோம். மக்களால் செய்யப்பட்ட பல்வேறு முறைப்பாடுகள் குறித்து அலட்சியமாக இருந்துள்ளோம்.
நிறைவேற்று அதிகாரம் கொண்ட அதிபர் உயர்ந்த கொள்கைகளைக் கொண்ட ஒரு ஒழுக்கமான நபராக இருந்திருந்தால், உடனடி நடவடிக்கைகள் எடுக்கப்பட்டிருக்கும்.
இனம் அல்லது மதம் போன்ற சார்புடைய காரணிகளில் கவனம் செலுத்தும் உள்நாட்டு அதிகாரிகளை விட, சர்வதேச மேற்பார்வை இதுபோன்ற விடயங்களை மிகவும் பாரபட்சமின்றியும் யதார்த்தமாகவும் கையாளும்.
இது குறித்து விசாரிக்கும் சர்வதேச மன்றம், குழு அல்லது ஆணைக்குழு இல்லையென்றால், குறைந்தபட்சம் விசாரணைக் குழு, சர்வதேச பங்கேற்பாளர்களைக் கொண்டிருக்க வேண்டும்.
சிறிலங்காவில் உள்ள மக்களை பாரபட்சமற்ற முறையில் சிந்திக்க வைக்க முடியாவிட்டால், எப்படி முறையான விசாரணையை நடத்தப் முடியும்?” என்றும் சி.வி.விக்னேஸ்வரன் கேள்வி எழுப்பியுள்ளார்.