மேலும்

இந்தியாவுடனான உடன்பாடுகள் இறைமை, சுதந்திரத்திற்கு அச்சுறுத்தல்

இந்தியாவுடன் அண்மையில் கையெழுத்திடப்பட்ட உடன்பாடுகள், நாட்டின் இறையாண்மை மற்றும் பொருளாதார சுதந்திரத்துக்கு அச்சுறுத்தலாக இருப்பதாக முன்னிலை சோசலிசக் கட்சி எச்சரித்துள்ளது.

கொழும்பில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் இதுகுறித்து கருத்து வெளியிட்டுள்ள முன்னிலை சோசலிச கட்சியின், பரப்புரைச் செயலாளர் துமிந்த நாகமுவ,

“முன்னர் போர்த்துக்கேயர் கரைக்கு வர அனுமதி கோரினர், பின்னர் தங்கள் அதிகாரத்தை கொஞ்சம் கொஞ்சமாக விரிவுபடுத்தினர்.

இப்போது, ​​இந்தியா மீண்டும் எங்கள் வீட்டு வாசலில் காலடி எடுத்து வைக்கத் தயாராகி வருகிறது. நாம் இரண்டாவது முறையாக ஏமாற்றப்படப் போகிறோமா?.

இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியின் அண்மைய பயணத்தின் போது, எரிசக்தி, டிஜிட்டல் ஒத்துழைப்பு, மருந்துகள், பாதுகாப்பு உள்ளிட்ட பல விடயங்களை உள்ளடக்கியதாக, சிறிலங்காவுக்கும் இந்தியாவிற்கும் இடையே, ஏழு உடன்பாடுகள் நாடாளுமன்றத்தின் அனுமதியின்றி இரகசியமாக கையெழுத்திடப்பட்டுள்ளன.

எரிசக்தி உடன்பாடு, குறிப்பாக, இந்திய கோடீஸ்வரர் கௌதம் அதானியின் நலன்களுக்கு ஏற்றவகையில் செய்யப்பட்டுள்ளது.

அதானி எங்கள் நிலத்தைப் பயன்படுத்தி மின்சாரம் தயாரித்து இந்தியாவிற்கு விற்று, அனைத்து இலாபங்களையும் எடுத்துக் கொள்வார். எங்களுக்கு எந்த இலாபமும் இல்லை. வரிகள் கூட தள்ளுபடி செய்யப்பட்டுள்ளன.

போர்க்காலத்தில் போர்க்கப்பல்களைப் பழுதுபார்க்கவும் உள்ளூர் மருத்துவமனைகளை அணுகவும், சிறிலங்கா தனது நிலத்தைப் பயன்படுத்த இந்தியாவுக்கு அனுமதித்துள்ளது.

ஆண்டுதோறும் மில்லியன் கணக்கான மதிப்புள்ள எங்கள் கடல்சார் பிராந்தியங்களை வரைபடமாக்கும் உரிமையை நாங்கள் அவர்களுக்கு வழங்குகிறோம்.

பிற நாடுகளுடன் பாதுகாப்பு உடன்பாடுகளில் கூட நுழைய முடியாது. எதிர்காலத்தில் எந்தவொரு போரிலும் இந்தியாவின் பக்கம் நிற்க வேண்டிய கட்டாயம் ஏற்படும்.

சர்வதேச தரநிலை சோதனை இல்லாமல் இந்திய மருந்துகளை இறக்குமதி செய்ய அனுமதிக்கும் சுகாதாரத் துறை உடன்பாடும் செய்து கொள்ளப்பட்டுள்ளது.

நாங்கள் பிரித்தானிய தரநிலைகளைப் பின்பற்றினோம். இப்போது பல நாடுகள் மறுக்கின்ற இந்திய தரநிலைகளை ஏற்க வேண்டிய கட்டாயத்தில் உள்ளோம்.

வெளிப்படைத்தன்மை மற்றும் புதிய அரசியல் கலாசாரம் குறித்த வாக்குறுதிகளை கொடுத்து அரசாங்கம் ஏமாற்றி விட்டது.

இந்த உடன்பாடுகளில் என்ன இருக்கிறது என்று ஆளும் கட்சி உறுப்பினர்களுக்குக் கூடத் தெரியாது.இது ஜனநாயகம் அல்ல. இது ஏமாற்று வேலை.

அனைத்து உடன்பாடுகளையும் உடனடியாகப் பகிரங்கப்படுத்த வேண்டும், அவற்றை ரத்து செய்ய வேண்டும்.

இந்தப் பாதையில் நாம் தொடர்ந்தால், எண்ணெய் தாங்கிகளை மட்டுமல்ல, முழு நாட்டையும் இழப்போம். என்றும் துமிந்த நாகமுவ மேலும் தெரிவித்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *