உகந்தை முருகன் ஆலய சூழலில் புத்தர் சிலை – வள்ளியம்மன் மலை ஆக்கிரமிப்பு
வரலாற்றுப் பிரசித்தி பெற்ற அம்பாறை- உகந்தைமலை முருகன் ஆலய சூழலில் உள்ள வள்ளியம்மன் மலையில், அடாத்தான முறையில் புத்தர்சிலை ஒன்று நிறுவப்பட்டுள்ளது.
முருகப் பெருமான் தீர்த்தமாடுகின்ற கடற்கரைச் சூழலில் உள்ள சிறிலங்கா கடற்படை முகாமுக்கு அருகில் உள்ள வள்ளியம்மன் மலையில் மர்ம நபர்களால் திடீரென புத்தர் சிலை அமைக்கப்பட்டுள்ளதுடன், பௌத்த கொடியும் பறக்க விடப்பட்டுள்ளது.
வள்ளியம்மன் மலையில், முருகன் சிலை ஒன்றை நிறுவ முற்பட்ட போது, அதற்கு வனஜீவராசிகள் திணைக்களம் அனுமதி மறுத்திருந்தது.
தற்போது அங்கு புத்தர் சிலை அமைக்கப்பட்டுள்ளதால், கதிர்காமம் போல உகந்தையையும் மாற்ற திட்டமிட்ட சதி நடக்கிறதா? என்று அங்குள்ள மக்கள் கேள்வி எழுப்பியுள்ளனர்.
இதுதொடர்பாக, பக்தர்கள் அம்பாறை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் கவீந்திரன் கோடீஸ்வரனின் கவனத்திற்கு கொண்டு வந்துள்ளனர்.