தங்கமுலாம் பூசிய துப்பாக்கி – முன்னாள் அமைச்சர் துமிந்த திசநாயக்க கைது
தங்கமுலாம் பூசப்பட்ட ரி-56 ரக துப்பாக்கி கைப்பற்றப்பட்டது தொடர்பாக, சிறிலங்காவின் முன்னாள் அமைச்சர் துமிந்த திசநாயக்க கைது செய்யப்பட்டுள்ளார்.
கொழும்பு வெள்ளவத்தையில் உள்ள சொகுசு அடுக்குமாடிக் குடியிருப்பில் கடந்த செவ்வாய்க்கிழமை தங்க முலாம் பூசப்பட்ட ரி- 56 துப்பாக்கி கைப்பற்றப்பட்டது.
இது தொடர்பாக 68 மற்றும் 40 வயதுடைய இரண்டு பெண்கள் கைது செய்யப்பட்டனர். அவர்களிடம் நடத்தப்பட்ட விசாரணைகளை அடுத்து சமையல் காரர் ஒருவர் கைது செய்யப்பட்டார்.
அவரிடம் நடத்தப்பட்ட விசாரணையின் போது, சிறிலங்கா சுதந்திரக் கட்சியின் முன்னாள் பொதுச்செயலாளரும் முன்னாள் அமைச்சருமான துமிந்த திசநாயக்கவுக்கு இதில் தொடர்பு இருப்பது கண்டறியப்பட்டது.
இதையடுத்து அவர் இன்று காலை, திம்பிரிகஸ்யாயவில் உள்ள சொகுசு அடுக்குமாடிக் குடியிருப்பில் சிறிலங்கா காவல்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
இந்த நிலையில் இந்த வழக்கை விசாரிக்கும் பொறுப்பு, சிறிலங்கா காவல்துறையின் தீவிரவாத விசாரணைப் பிரிவிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.