இந்தியாவில் பயிற்சி பெறவுள்ள சிறிலங்கா நாடாளுமன்ற உறுப்பினர்கள்
சிறிலங்கா நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு இந்தியாவில் ஒரு வாரகால திறன் மேம்பாட்டுப் பயிற்சி அளிக்கப்படவுள்ளது.
மே 26ஆம் திகதி முதல் 30ஆம் திகதி வரை புதுடெல்லியில் உள்ள இந்திய நாடாளுமன்ற ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனத்தில் (PRIDE) திறன் மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ் பயிற்சிகள் அளிக்கப்படவுள்ளன.
பிரதி சபாநாயகர் ரிஸ்வி சாலி தலைமையில், பல்வேறு அரசியல் கட்சிகளைப் பிரதிநிதித்துவப்படுத்தும் 20 நாடாளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் நாடாளுமன்ற செயலாளர் நாயகம் உள்ளிட்ட, சிறிலங்கா நாடாளுமன்ற அதிகாரிகள் நால்வர் என, 24 பேர் பங்கேற்கவுள்ளனர்.
இவர்கள் நேற்று கொழும்பில் உள்ள இந்தியா ஹவுசில், இந்திய தூதுவர், சந்தோஷ் ஜாவைச் சந்தித்துக் கலந்துரையாடினர்.
நாடாளுமன்ற மற்றும் வரவுசெலவுத் திட்ட செயல்முறைகளில் சிறந்த நடைமுறைகளைப் பகிர்ந்து கொள்வது, நாடாளுமன்றக் குழுக்களின் அமைப்பு மற்றும் இரு ஜனநாயக நாடுகளுக்கும் இடையிலான பிற தொடர்புடைய விடயங்கள் ஆகியவற்றை உள்ளடக்கியதாக இந்த பயிற்சித் திட்டம் இடம்பெறவுள்ளது.