சிறிலங்காவுக்கான தென்னாபிரிக்கத் தூதுவருடன் கஜேந்திரகுமார் சந்திப்பு
வடக்கில் காணி அபகரிப்பு நோக்கத்தில் சிறிலங்கா அரசு வெளியிட்ட அரசிதழை உடனடியாக ரத்துச் செய்ய தென்னாபிரிக்க அரசு அழுத்தம் கொடுக்க வேண்டும் என, நாடாளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம், சிறிலங்காவுக்கான தென்னாபிரிக்க தூதுவரிடம் வலியுறுத்தியுள்ளார்.
தென்னாபிரிக்க தூதுவர் சான்டில் எட்வின் ஷால்க் (Sandile Edwin Schalk) இற்கும், தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் நாடாளுமன்ற உறுப்பினருமான கஜேந்திரகுமார் பொன்னம்பலத்துக்கும் இடையிலான சந்திப்பு இன்று காலை கொழும்பிலுள்ள தென்னாபிரிக்க தூதரகத்தில் நடைபெற்றது.
இந்தச் சந்திப்பு தொடர்பாக ஊடகங்களுக்கு விளக்கமளித்த கஜேந்திரகுமார் பொன்னம்பலம்,
இன்று காலை தென்னாபிரிக்க தூதுவருடனான சந்திப்பில் மூன்று விடயங்கள் தொடர்பில் பேசியிருந்தேன்.
வடமாகாணத்தின் சுமார் 6000 ஏக்கர் காணிகளை அரச காணியாக சுவீகரித்து திட்டமிட்ட சிங்கள பௌத்த மயமாக்கலை மேற்கொள்ளும் கபட முயற்சிக்கு எதிராக நாம் எமது ஆட்சேபனைகளை வெளியிட்டோம்.
மூன்று மாத காலத்தில் மக்கள் தமது காணிகளை உறுதிப்படுத்த வேண்டும் என்ற அந்த அடிப்படையில் அரசு வெளியிட்ட அரசிதழை மீளப் பெறவேண்டும் எனவும் அதற்கான அழுத்தங்களை பிரயோகிக்க வேண்டுமெனவும் வலியுறுத்தினோம்.
குருந்தூர்மலையில் விவசாய நடவடிக்கையில் ஈடுபட்டிருந்த விவசாயிகள் மூன்று பேர் நீதிக்குப் புறம்பாக கைது செய்பட்டு இரண்டு பேர் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.
சிறிலங்கா அதிபர் மட்டத்தில் தீர்வு எட்டப்பட்ட ஓரு தீர்மானத்தினை அமுல்படுத்தாமல், விவசாய நடவடிக்கைகள் தடுக்கப்பட்டுள்ளதுடன் அந்த வயல்களுக்கு நீர் விநியோகம் செய்ய வேண்டிய குளத்தில் தமிழ் மக்கள் மீன்பிடியில் ஈடுபடவும் விவசாயத்திற்கு நீரை பயன்படுத்தவும் தடை விதித்துள்ளனர்.
இதன் மூலம் விவசாயிகளுக்கு பெரும் அநீதி இழைக்கப்பட்டுள்ளது.
குறித்த பகுதியில் மக்கள் சுதந்திரமாக தொழில் செய்வதனை உறுதிப்படுத்தவும், அநீதியான முறையில் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள இரண்டு விவசாயிகளையும் விடுவிக்கவும் உரிய நடவடிக்கை எடுக்கப்பட வேண்டுமெனவும் வலியுறுத்தப்பட்டது.
தையிட்டியில், சட்டவிரோதமான விகாரை என்று தெரிந்தும் இன்னமும் அந்த காணிகளின் உரிமையாளர்களிடம் காணிகளை வழங்காது சிறிலங்கா அரசின் செயற்பாடுகள் தொடர்கின்றது.
தையிட்டி விகாரை சட்டவிரோதமானது தொல்பொருளுடன் தொடர்பற்றது சட்டவிரோதமாக கட்டப்பட்டது. அது அகற்றபட்டே ஆகவேண்டும்.
காணிகள் உரிமையாளர்களிடம் கையளிக்கப்படல் வேண்டுமெனவும் அதற்கான நடவடிக்கைகளை முன்னுடுக்க வேண்டுமெனவும் கோரியிருந்தேன்“ என்றும் குறிப்பிட்டுள்ளார்.