20 பிரித்தானிய உயர்மட்ட பாதுகாப்பு அதிகாரிகள் சிறிலங்காவில் ஆய்வுப் பயணம்
பிரித்தானியாவின் பாதுகாப்பு கற்கைகளுக்கான றோயல் கல்லூரியின் உயர்மட்ட அதிகாரிகள் குழுவொன்று சிறிலங்காவுக்கு ஆய்வுப் பயணம் ஒன்றை மேற்கொண்டுள்ளது.
20 அதிகாரிகளைக் கொண்ட இந்தக் குழுவுக்கு பேர்மிங்காமின் ஸ்டீவன்ஸ் பிரபு சைமன் ஸ்டீவன்ஸ் பிரபு, மற்றும் பிரித்தானிய கடல்சார் மற்றும் கடலோர காவல்படை நிறுவனத்தின் மூத்த பணிப்பாளர் எயர் கொமடோர் போல் ஓ’ நீல் (ஓய்வு) ஆகியோர் தலைமை தாங்குகின்றனர்.
இவர்கள் நேற்று சிறிலங்கா பாதுகாப்பு பிரதி அமைச்சர் மேஜர் ஜெனரல் அருண ஜயசேகர தலைமையிலான சிறிலங்கா பாதுகாப்பு அதிகாரிகளை கோட்டே, சிறி ஜெயவர்தனபுரவில் உள்ள பாதுகாப்பு அமைச்சில் சந்தித்து கலந்துரையாடினர்.
இந்த உயர்மட்ட மூலோபாய கலந்துரையாடலில், தேசிய புலனாய்வுப் பிரிவின் தலைவர், சிறிலங்கா கடற்படைத் தளபதி, சிறிலங்கா இராணுவத்தின் பிரதி தலைமை அதிகாரிதி மற்றும் சிறிலங்கா விமானப்படையின் நடவடிக்கை பணிப்பாளர் நாயகம் ஆகியோரும் கலந்து கொண்டனர்.