மேலும்

அனுர மீது குற்றம்சாட்டியவரை இலக்கு வைத்து துப்பாக்கிச் சூடு

சிறிலங்கா அதிபர் அனுரகுமார திசாநாயக்க கிரேக்க நாட்டில் பெருமளவு பணத்தை முதலீடு செய்துள்ளார் என குற்றம்சாட்டிய, தேசிய லொத்தர் சபையின், முன்னாள் நிர்வாக பணிப்பாளர் துசித ஹல்லொலுவவை இலக்கு வைத்து துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டுள்ளது.

நேற்றிரவு அடையாளம் தெரியாத இரண்டு துப்பாக்கிதாரிகள் கொழும்பு நாரஹேன்பிட்டியவில் இந்த தாக்குதலை நடத்தியதாக சிறிலங்கா காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

இந்தச் சம்பவத்தில் ஹல்லொலுவவின் வாகனம், சேதமடைந்ததாகவும், அவர் வாகனத்திற்குள் இருந்த போதும், காயம் ஏற்படவில்லை என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஹல்லொலுவவின் வாகனம் மீது தாக்குதல் நடத்திய நபர்கள், முக்கிய ஆவணங்கள் அடங்கிய கோப்பை எடுத்துச் சென்றுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

இந்த சம்பவத்தில் தானும் துசித ஹல்லொலுவாவும் தாக்கப்பட்டதாக சட்டத்தரணி தினேஷ் தொடங்கொட தெரிவித்தார்.

அவர்கள் தற்போது மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இதற்கிடையில், நாரஹேன்பிட்டியவில் ஹல்லொலுவவின் வாகனத்தை குறிவைத்து நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூடு தொடர்பான விசாரணைகள், பதில் காவல்துறை கண்காணிப்பாளரின் உத்தரவின் பேரில் கொழும்பு குற்றப்பிரிவிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளன.

சிறிலங்கா அதிபர் அனுரகுமார திசாநாயக்க கிரேக்க நாட்டில் பெருமளவு பணத்தை முதலீடு செய்திருப்பதாக அண்மையில் குற்றம்சாட்டியிருந்த துசித ஹல்லொலுவவிற்கு எதிராக, ஆளும்கட்சியின் இரண்டு சட்டத்தரணிகள் அண்மையில் குற்றப் புலனாய்வுப் பிரிவில் முறைப்பாடு செய்திருந்தனர்.

அவருக்கு எதிராக விசாரணைகள் நடத்தப்பட்டு வரும் நிலையில்,  இந்த தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *