தேசிய போர்வீரர் நினைவு நிகழ்வில் சிறிலங்கா ஜனாதிபதி பங்கேற்கமாட்டார்
விடுதலைப் புலிகளுக்கு எதிரான போரை முடிவுக்குக் கொண்டு வந்ததை முன்னிட்டு, நடத்தப்படவுள்ள, சிறிலங்காவின் 16வது தேசிய போர்வீரர் நினைவு நிகழ்வில், சிறிலங்கா ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்க பங்கேற்கமாட்டார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
போர் முடிவுக்கு கொண்டு வரப்பட்டதை கொண்டாடும் வகையில், சிறிலங்கா அரசாங்கத்தினால் போர் வெற்றி விழா மே 19ஆம் திகதி நடத்தப்பட்டு வந்தது.
நல்லாட்சி அரசின் காலத்தில் இருந்து, மே 19ஆம் திகதி தேசிய போர்வீரர் நினைவு நாளாக நடத்தப்பட்டு வருகிறது.
இந்த ஆண்டு நடத்தப்படவுள்ள 16வது தேசிய போர்வீரர் நினைவு நிகழ்வு ஏற்பாடுகள் தொடர்பாக சிறிலங்கா பாதுகாப்புச் செயலர் எயர் வைஸ் மார்ஷல் சம்பத் துயகொந்த, இன்று கொழும்பில் நடத்திய ஊடகச் சந்திப்பில் விளக்கமளித்தார்.
கோட்டே சிறி ஜெயவர்தனபுரவில் உள்ள தேசிய போர்வீரர் நினைவுச்சின்னத்தில் மே 19ஆம் திகதி மாலை 4:00 மணி முதல் மாலை 6:00 மணி வரை தேசிய போர்வீரர் நினைவு நிகழ்வு நடைபெறும்.
இந்த நிகழ்வில், சிறிலங்கா ஜனாதிபதியைப் பிரதிநிதித்துவப்படுத்தி, பாதுகாப்பு பிரதி அமைச்சர் மேஜர் ஜெனரல் அருண ஜயசேகர கலந்து கொள்வார்.
பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா, அட்மிரல் ஒவ் தி பிளீட் வசந்த கரன்னகொட, மற்றும் மார்ஷல் ஒவ் எயர்போர்ஸ் ரொஷான் குணதிலக உள்ளிட்ட முன்னாள் படை அதிகாரிகள் இந்த விழாவில் கலந்து கொள்ள உள்ளனர் என்றும், சிறிலங்கா பாதுகாப்புச் செயலர் எயர் வைஸ் மார்ஷல் சம்பத் துயகொந்த தெரிவித்துள்ளார்.
வழக்கத்தில் இந்த நிகழ்வுகளில் சிறிலங்கா ஜனாதிபதிகளே பிரதம விருந்தினராக பங்கேற்று வந்துள்ளனர்.
எனினும் கடந்த ஆண்டு சிறிலங்கா பிரதமர் தினேஷ் குணவர்த்தன இந்த நிகழ்வில் பிரதம விருந்தினராகப் பங்கேற்றிருந்தார்.
இம்முறை சிறிலங்கா ஜனாதிபதியோ, பிரதமரோ இந்த நிகழ்வில் பங்கேற்பதாக அறிவிக்கப்படவில்லை.
சிறிலங்கா ஜனாதிபதிக்குப் பதிலாக, பாதுகாப்பு பிரதி அமைச்சர் மேஜர் ஜெனரல் அருண ஜயசேகர பங்கேற்பார் என அறிவிக்கப்பட்டுள்ளது.