அனுரவின் ஆட்சியில் 12 பேர் மீது பாய்ந்தது பயங்கரவாதத் தடைச்சட்டம்
சிறிலங்கா அதிபராக அனுரகுமார திசாநாயக்க 2024 செப்ரெம்பர் மாதம், பதவியேற்ற பின்னர், பயங்கரவாதத் தடுப்புச் சட்டத்தின் கீழ் குறைந்தது 12 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக, தெரிவிக்கப்பட்டுள்ளது.
கைது செய்யப்பட்டவர்களில் 10 பேர், 2024 ஒக்டோபர் – டிசம்பர் மாதங்களுக்கு இடைப்பட்ட காலத்திலும், 2 பேர் 2025 மார்ச் – ஏப்ரல் மாதங்களுக்கு இடைப்பட்ட காலத்திலும் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இந்த எண்ணிக்கை, ஊடக அறிக்கைகளை அடிப்படையாகக் கொண்டவை என்றும், உண்மையான எண்ணிக்கை அதிகமாக இருக்கலாம் என்றும் சட்டத்தரணி நிலுக்ஷி தேவபுர, மனித உரிமை செயற்பாட்டாளர் ருக்கி பெர்னான்டோ ஆகியோர் தெரிவித்துள்ளனர்.
மாவீரர் நாள் நினைவு கூரல் குறித்த தகவல்களைப் பகிர்ந்ததற்காக நான்கு பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
பலஸ்தீனத்திற்கு எதிரான இஸ்ரேலின் அட்டூழியங்கள் குறித்த உள்ளூர் செயற்பாடுகள் தொடர்பாக ஏழு பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கிழக்கு பல்கலைக்கழகத்தின் முன்னாள் துணைவேந்தர் ரவீந்திரநாத் கடத்தப்பட்டது தொடர்பாக ஒருவர் கைது செய்யப்பட்டதாகக் கூறப்பட்டுள்ளது.
கைது செய்யப்பட்டவர்கள், கொழும்பு, காலி, யாழ்ப்பாணம், மட்டக்களப்பு மாவட்டங்களைச் சேர்ந்தவர்களாவர்.
அவர்களில் குறைந்தது மூன்று சிங்களவர்கள், குறைந்தது இரண்டு முஸ்லிம்கள் மற்றும் குறைந்தது இரண்டு தமிழர்கள் அடங்குவர்.
ஒருவர் இரட்டைக் குடியுரிமை பெற்றவர். சிலரின் பெயர்கள், மாவட்டம் மற்றும் இனம் தெளிவாகத் தெரியவில்லை. குறைந்தது நான்கு பேர் பிணையில் விடுவிக்கப்பட்டதாகக் கூறப்படுகிறது.
மற்றவர்கள் இன்னும் தடுத்து வைக்கப்பட்டுள்ளார்களா, விடுவிக்கப்பட்டுள்ளார்களா அல்லது பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார்களா என்பதை ஊடக அறிக்கைகள் குறிப்பிடவில்லை.
சமூக ஊடகங்களில் பதிவு செய்தல், அரசியல் சுவரொட்டிகளை ஒட்டுதல் மற்றும் பலஸ்தீனத்தை ஆதரித்தல் போன்ற பல்வேறு செயல்களுக்காக, இந்த கைதுகள் நடந்துள்ளன.
சில கைதுகள், தமிழர் வரலாற்று நினைவுகள் மற்றும் அதிகாரத்தில் உள்ள அரசாங்கத்தை விமர்சித்தல் உள்ளிட்ட டிஜிட்டல் மற்றும் அரசியல் வெளிப்பாட்டை குற்றமாக்கும் வகையில் இடம்பெற்றுள்ளன.
பயங்கரவாதத்தைத் தடுப்பது அல்லது எதிர்ப்பது என்ற போர்வையில், கருத்து வேறுபாட்டை அடக்குவது மற்றும் சட்ட விதிகளைப் பயன்படுத்துவது குறித்த பரந்துபட்ட கவலைகளை இந்தக் கைதுகள் பிரதிபலிக்கின்றன என்றும், சட்டத்தரணி நிலுக்ஷி தேவபுர, மனித உரிமை செயற்பாட்டாளர் ருக்கி பெர்னான்டோ ஆகியோர் தெரிவித்துள்ளனர்.