8 நாடுகளுக்கான புதிய தூதுவர்களுக்கு சிறிலங்கா ஜனாதிபதியின் கட்டளை
வெளிநாட்டு முதலீடுகளை ஈர்ப்பதும், உள்ளூர் தொழில்முனைவோருக்கு புதிய சந்தைகளைக் கண்டறிவதும், முக்கிய இராஜதந்திர கடமைகள் என்று சிறிலங்கா ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்க தெரிவித்துள்ளார்.
இந்தியா, ஐ.நா, பாகிஸ்தான் உள்ளிட்ட 8 நாடுகளில் சிறிலங்காவின் புதிய தூதுவர்களாக நியமிக்கப்பட்டுள்ளவர்களைச் சந்தித்த போதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
வெளிநாட்டு நேரடி முதலீட்டை ஈர்ப்பதற்கான வாய்ப்புகளை விரிவுபடுத்துவதும், சிறிலங்காவில் செயற்படும் தொழில்முனைவோருக்கு புதிய சந்தை வாய்ப்புகளை அடையாளம் காண்பதும், இராஜதந்திர சேவையின் முக்கிய பொறுப்புகளாகும்.
வெளிநாட்டு முதலீட்டாளர்கள் மற்றும் சுற்றுலாப் பயணிகளை சிறிலங்காவுக்கு அழைப்பது, பொருளாதாரத்தை மீட்டெடுக்கும் தேசிய முயற்சியில் இராஜதந்திரிகளுக்கு ஒதுக்கப்பட்டுள்ள முக்கிய கடமை என்றும் சிறிலங்கா ஜனாதிபதி மேலும் தெரிவித்துள்ளார்.
இந்தச் சந்திப்பில், இந்தியாவுக்கான தூதுவர், மகேஷினி கொலன்னே, பாகிஸ்தானுக்கான தூதுவர் றியர் அட்மிரல் பிரெட் செனவிரத்ன, பிரித்தானியாவுக்கான தூதுவர், எஸ்.டி.என்.யூ.சேனாதீர, நியூயோயார்க்கில் உள்ள ஐக்கிய நாடுகள் சபைக்கான நிரந்தர பிரதிநிதி, ஜயந்த ஜயசூரிய, கியூபாவுக்கான தூதுவர், ஆர்.எம். மஹிந்த ரத்நாயக்க, ஜப்பானுக்கான தூதுவர், பேராசிரியர் ஜனக் குமார, ஐக்கிய அரபு இராச்சியத்துக்கான தூதுவர், பேராசிரியர் அருஷா குரே ஆகியோர் கலந்து கொண்டனர்.