பாரிய வர்த்தக குழுவுடன் கொழும்பு வருகிறார் சீன அமைச்சர்
சீனாவின் வர்த்தக அமைச்சர் வாங் வென்டாவோ,( Wang Wentao ) மிகப் பெரிய வர்த்தக குழுவுடன், இம்மாத இறுதியில் சிறிலங்காவுக்குப் பயணம் மேற்கொள்ளவுள்ளார்.
77 நிறுவனங்களைச் சேர்ந்த 115 வணிக பிரதிநிதிகள் குழுவுக்கு தலைமையேற்று அவர் கொழும்பு வரவுள்ளார்.
கொழும்பில் வரும் 30 ஆம் திகதி, உயர்மட்ட சிறிலங்கா – சீன வர்த்தக மற்றும் முதலீட்டு மன்றத்தின் கூட்டத்தில் சீன அமைச்சர் கலந்து கொள்வார்.
இந்த கூட்டத்துக்கு, சிறிலங்கா வர்த்தக சபை மற்றும் சிறிலங்கா வர்த்தகத் துறை, சிறிலங்கா – சீன வர்த்தக சபை மற்றும் இயந்திரங்கள் மற்றும் மின்னணு பொருட்களின் இறக்குமதி மற்றும் ஏற்றுமதிக்கான சீன வர்த்தக சபை ஆகியன இணைந்து ஏற்பாடு செய்துள்ளன.
சிறிலங்காவில் இருந்து பொருட்களை இறக்குமதி செய்வதில் சீன பிரதிநிதிகள் குழு ஆர்வம் தெரிவித்துள்ளது.
இதில் தேயிலை, ஜாதிக்காய் மற்றும் கிராம்பு போன்ற மசாலாப் பொருட்கள், நண்டு உள்ளிட்ட கடல் உணவுகள், பப்பாளி, அன்னாசி, கொய்யா மற்றும் மாம்பழம் போன்ற பழங்கள் மற்றும், பிற உணவு மற்றும் விவசாய பொருட்கள் அடங்கும்.
அதேவேளை, பூண்டு, சீரகம், பெருஞ்சீரகம், பல்வேறு விவசாய பொருட்கள், விதைகள், உருளைக்கிழங்கு, காய்கறி பொருட்கள், துணிகள் மற்றும் வீட்டு பொருட்கள் ஆகியவற்றை சிறிலங்கா சந்தையில் அறிமுகப்படுத்தவும் சீன நிறுவனங்கள் விரும்புகின்றன.