யாழ்ப்பாணத்தில் தேர்தல் விதிமீறல் – சிறிலங்கா பிரதமர் மீது முறைப்பாடு
யாழ்ப்பாண மாவட்டத்தில், சிறிலங்கா பிரதமர் ஹரிணி அமரசூரிய தேர்தல் சட்டங்களை மீறியுள்ளார் என தேர்தல் ஆணைக்குழுவிடம் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.
யாழ்ப்பாணத்தில் ஏப்ரல் 11 ஆம் திகதி, இரண்டு சைவ ஆலயங்களில், நடந்த தேசிய மக்கள் சக்தியின் பிரசாரக் கூட்டங்களில் பிரதமர் ஹரிணி அமரசூரிய கலந்து கொண்டதாக தேர்தல் வன்முறைகளைக் கண்காணிக்கும் மையம் அந்த முறைப்பாட்டில் கூறியுள்ளது.
வழிபாட்டுத் தலங்களில் பிரசாரக் கூட்டங்களை நடத்துவதைத் தடைசெய்யும் தேர்தல் சட்டங்களை அவர் மீறியுள்ளதாக முறையிடப்பட்டுள்ளது.
யாழ்ப்பாண மாவட்ட முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.கே. சிவாஜிலிங்கம் இந்தக் கூட்டங்கள் நடக்கவிருப்பது குறித்து, தேர்தல்கள் ஆணைக்குழுவின், யாழ்ப்பாண அலுவலகத்திற்குத் தெரியப்படுத்தியிருந்தார்.
அதையடுத்து, தேர்தல்கள் ஆணைக்குழு அதிகாரிகள், இந்த இரண்டு ஆலயங்களுக்கும் சென்று, இதுபோன்ற கூட்டங்களை நடத்துவது சட்டவிரோதமானது என்று நிர்வாகத்தினரிடம் அறிவித்திருந்தனர்.
முன்கூட்டியே எச்சரிக்கை விடுக்கப்பட்ட போதிலும், பிரதமர் ஹரிணி அமரசூரிய, மக்கள் சந்திப்பு என்ற பெயரில், அரசியல் கூட்டங்களை நடத்தியுள்ளார் என்றும், தேர்தல் வன்முறைகளை கண்காணிக்கும் அமைப்பு அந்த முறைப்பாட்டில் தெரிவித்துள்ளது.