காஷ்மீர் அதிர்வலைகள் – பகுதி 3
இந்தியாவின் அரசியல் மாற்றங்கள், மிகவும் முக்கியமான வரலாற்று மாற்றங்களாக, அதனை சூழ உள்ள நாடுகளில் அதிர்வலைகளை ஏற்படுத்தி விடுவது பொதுவான போக்காக உள்ளது. புவியியல் ரீதியாகவும் வரலாற்று ரீதியாகவும், சமூக, கலாசார ,மொழி, மத ரீதியாகவும், அனைத்து நாடுகளும் ஒன்றுடன் ஒன்று பிணைந்திருப்பது இதற்கு முக்கிய காரணமாகும்.
தெற்காசிய நாடுகளில் இந்தியா பெரிய நாடாக இருப்பதால், இந்திய உள்நாட்டு விவகாரங்கள் இதர தெற்காசிய நாடுகளில் தாக்கத்தை விளைவிப்பது தவிர்க்க முடியாததாக அமைந்து விடுகிறது .
இந்தியா முன்னேற்ற கரமான பொருளாதார அபிவிருத்தியை நோக்கி நகர்வதாக இருந்தாலும் சரி . மாநிலங்களில் புதிய அடாவடி சட்டங்களை கொண்டு வருவதாக இருந்தாலும் சரி, அவை பிராந்திய நாடுகளில் தாக்கத்தை உட்படுத்த வல்லவையாகவே இருக்கின்றன.
இந்த பார்வையின் அடிப்படையில், இலங்கைத் தீவின் தற்போதைய அரசியல் நிலைமைகளை கருத்தில் கொண்டு பார்க்குமிடத்து, தமிழ் மக்களின் இருப்பிற்கு பேரிடர் ஏற்படும் காலம் வெகு தூரத்தில் இல்லை என்றே எண்ணத் தோன்றுகிறது.
இன்று முன்னாள் அதிபர் மகிந்த ராஜபக்சவிலிருந்து மிதவாத தமிழ் அரசியல்வாதிகள் ஈறாக, போராட்ட அழிவிற்கு காரணமான அனைத்து சக்திகளும் தமிழ் தேசியத்தை வாக்கு அரசியலில் வார்த்தைகளால் புகழ்ந்து உரைத்து வருகின்றன.
போராட்டம் இடம் பெற்றுக் கொண்டிருந்த போது, சதி வலைகளுக்கு உடந்தைகளாக இருந்த பல சக்திகளும் போராட்ட தலைமைத்துவங்களை தமது வாக்கு அரசியலுக்காக, உபயோகிக்க தலைப்பட்டு விட்டன. மாற்று தலைமை தாமே என கூறிக் கொண்டவர்களும் கூட, மிதவாத மேலைத்தேய செல்வாக்கின் தேவையினால் தமக்குள்ளே முரண்பட்டு கொள்கின்றனர்.
தமிழ் மக்களது அரசியலை நிர்ணயிக்ககூடிய தமிழர் நலம் சார்ந்து ஆளுமை செலுத்தக் கூடிய அரசியல் சார்பற்ற ஒரு தனித்துவமான நபரோ அல்லது கட்டமைப்போ இல்லாத நிலை உள்ளது.
சிறிலங்கா அரசின் பொறிமுறைக்குள் சிக்கிக்கொண்டவர்களாகவே எல்லோரும் இருக்கின்றனர். அரசின் போக்கை திசை திருப்ப கூடிய வகையிலான செயற்பாடுகள் எதுவும் இதுவரை இடம் பெறவில்லை.
அல்லது சரியான சிந்தனை தெளிவை ஊட்டக் கூடிய எவரும் பெயர் பதிக்க முடியாத நிலை உள்ளது. இதனால் தமிழ்த் தேசியத்தின் பால் சிந்திக்க முடியாத தன்மைக்கு, ஈழத்தமிழ் மக்கள் விட்டிருக்கிறார்கள். சிங்கள தேசியத்தை தீர்மானிக்கும் சக்தி பௌத்த பிக்குகளின் கட்டமைப்புகளுக்கு இருப்பது போல, சமூக நீதித்தெளிவும் தமிழ் தேசியத்தையும் தாங்கி நிற்க கூடிய, தமிழ் தலைமை இல்லாததும் பெரும் பிற்போக்கானது.
லடாக் பிரதேசம் தனித்துவமான பெளத்த மாநிலமாக மாற்றப்பட்டதை இட்டு இந்திய மத்திய அரசுக்கு நன்றி செலுத்தும் பெளத்த சமய தலைவர்கள், மிக விரைவில் சிறிலங்காவில் நிலைமையை சாதகமாக்கி கொள்ளும் வகையில் தமிழ்த் தேசியத்தை பிரிப்பதற்கு திட்டமிடப் போகிறார்கள் .
சிங்கள தேசத்தில் வாக்கு வெற்றிகளை குவிக்க வேண்டுமாயின் தமிழர்களுக்கு எதிரான நடவடிக்கைகள் முக்கியமானது என்பது பொதுவான சிந்தனை திட்டமாக உள்ளது.
அதேவேளை பௌத்த சிங்களம் தனது இருப்பை இலங்கைத் தீவு முழுவதும் நிலை நிறுத்துவதற்கு பெரும் முனைப்புடன் செயற்படுகிறது
இதற்கான வியாக்கியானங்களும் சிந்தனைகளும் காலாகாலம் சந்தர்ப்பங்களுக்கு ஏற்றவாறு திரிபுபடுத்தப்படுகிறது. சிங்களவர்களின் இருப்பை கேள்விக்கு உள்ளாக்குவதல்ல தமிழ் பேசும் மக்களின் நோக்கம், ஒருங்கிணைந்த தமிழ் பேசும் மக்களின் தாயகமும் அதன் இருப்பை வலியுறுத்துவதும், சிங்கள தாயகத்தை பாதிக்காது என்பது கிராம மட்டங்களில் சென்றடைய வில்லை.
தேவையை அறிந்து தமது சந்தர்ப்பவாத போக்கை மறைக்கும் முகமாக வெறும் வாய்ப்பேச்சுக்காக மட்டும் செயலாற்றும் தமிழ் மிதவாதம் ஆழமான எந்த நகர்வும் செய்யாது. சிங்கள தேசத்துக்கு நொந்து விடும், கடினமாக கிள்ள கூடாது என்பது போல நடந்து கொள்கிறது.
ஜம்மு -காஷ்மீர் பிராந்திய அரசியல் நிலை சந்தர்பம் இலங்கைத் தீவில் வடக்கு -கிழக்கு என்று தொடர்ச்சியான தமிழ் பேசும் நிலப்பரப்பாக இருக்கும் தமிழ் பேசும் தாயகத்தை பிரித்து விடுவதற்கு, சிங்களவர்களை பெரும்பான்மையாக கொண்ட புதிய மாவட்டம் ஒன்று உருவாக்கப்படக் கூடும். அவ்வாறான சிங்கள பெரும்பான்மை மாவட்டம் நிரந்தரமாக வடக்கையும் கிழக்கையும் நிலத்தொடர்ச்சியை உடைத்து விடுவதற்கு வாய்ப்புகள் உள்ளது
இந்த புதிய மாவட்ட உருவாக்கத்தில் வட மத்திய மாகாணத்தில் ஒரு பெரும் பகுதியும் முல்லைத்தீவு மாவட்டத்தின் ஒரு பகுதியும் இணைக்கப்படும் பொழுது, சிங்களவர்களை பெரும்பான்மையாக கொண்ட புதிய மாவட்டம் வங்க கடலின் கிழக்கு கரையை ஒட்டியதாகவும் அமையும். தமிழ் ஈழம் என்ற பெயரை உடைத்தெறிவதாகவும் அது அமையும். தமிழருக்கு இருந்த வங்க கடல் உரிமையும் இழக்கப்படும்.
சிறிலங்கா அரசினை கையாளும் எந்த அரசாங்கமும் தமிழ் தேசியத்தை பிரிப்பதன் மூலமே, தமது பௌத்த சிங்கள இயந்திர அரசை காப்பாற்ற முடியும் என்பதை தார்மீக கொள்கையாக கொண்டிருக்கின்றன.
ஆக தேர்தலுக்கு முன்பாக பதவியில் உள்ள அரசாங்கம் அரசு செய்யாவிட்டாலும், அடுத்து வரக்கூடிய சாத்தியப்பாடுள்ள, மாக்கியவல்லி சித்தாந்தத்தை முழுமையாக செயல்வடிவில் நடத்த இருக்கும் கோத்தாபய அரசாங்கம், சட்டம் -ஒழுங்கு என்பது, பயத்தின் பால் பட்டது என்ற சிந்தனையை கொண்டதாகவே இருக்க முடியும்.
மிகஅதிகமான பயமுறுத்தும் அடக்குமுறை மூலம், ஆட்சி செய்யக் கூடும் என எதிர்பார்க்கக் கூடிய கோத்தாபய அரசாங்கம், அதீத ஆயுத பிரசன்னத்தின் மத்தியில் காஷ்மீர் பிரிவினையை மையமாக வைத்து நிச்சயமாக நிறைவேற்றும் என்பதில் ஐயமில்லை.
பஞ்சாப்பில் காலிஸ்தான் கேட்டவர்கள் இன்று கனடாவில் ஒரு சிறு குழுவாக உள்ளனர், அதேபோல் காஷ்மீர் கேட்டவர்களும் எங்கோ ஒரு அரபு நாட்டில் குடிபுகுந்து விடுவார்கள் என்பதே இந்தியாவின் கனவு ஆகும். சிறிலங்காவின் எதிர்பார்ப்பும் இது வாகவே இருக்கிறது. எங்கோ மேலை நாடுகளில் வாழ்பவர்கள் மே மாதத்தில் ஒருமுறையும் நவம்பரில் ஒருமுறையும் சலசலத்து விட்டு சென்று விடுவார்கள் என்பதுவே.
மேலைத்தேய அரசியல் சித்தாந்தத்தின் அடிப்படையில் அரசுகளும் தேசியங்களும் ஒன்றில் ஒன்று நம்பிக்கையற்ற தொடர்ச்சியான போட்டி நிலையில், மிகவேகமாக யதார்த்த சிந்தனைகளின் அடிப்படையில் நகர்ந்து வருகின்றன. இதனால் அதிகாரங்களை கையில் எடுப்பது முக்கியமான தந்திரமாக இருக்க வேண்டும்.
அத்துடன் இனிவரும் காலங்களில் ஒருமித்த கருத்துடைய வாக்காளர்களை பல்வேறு கட்சிகளிலும் இருந்து தெரிவு செய்ய வேண்டிய நிலையில் தமிழ் மக்கள் உள்ளனர் என்பது மட்டும் தெரிகிறது.
முடிவுரை
தெற்காசியாவின் சமூக ,புவியியல், அரசியல் பொருளாதாரத்தில் இந்தியா மிகவும் பெரிய நாடு. இந்தியாவில் இடம் பெறும் மாற்றங்கள் யாவும் அதன் உபபிராந்திய நாடுகளில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தி வருகிறது.
இதில் அரசியல் சட்ட தீர்மானங்களின் மாற்றம் கொண்டு வருதல் பெரும்பான்மை ஜனநாய ஆளும் உரிமையை பயன்படுத்தி, தேசிய இனங்களை சிதைத்தல், பாரம்பரிய நிலத்தை கைப்பற்றுதல் போன்ற விடயங்களில் ஏனைய அனைத்து தெற்காசிய நாடுகளைவிட சிறிலங்காவில் உள்ள சமூக அரசியல் நிலை இதனை விரைவாக பிரதி செய்து விடக் கூடிய சூழலை கொண்டுள்ளது.
சிறிலங்காவில் பெரும்பான்மை ஜனநாயகம் ஒரு தேர்தலினால் தான் உருவாக வேண்டும் என்பதல்ல, மேற்குறிப்பிட்ட விடயங்களுக்காக எந்த சமயத்திலும் ஏகமனதான தீர்மானம் இயற்றப்படலாம்.
ஆனால், அரசியல் சூழல் சாதகமாக எழும் பொழுது, இவை இலகுவாக நிறைவேற்றப்படுவது கடந்த கால அரசியல் அனுபவங்களில் இருந்து கற்று கொண்டவைகளாகும்
சர்வதேச அரங்கில் சிறிலங்கா தன்னை பாதுகாத்து கொள்வதற்கான சந்தர்ப்பம் காஷ்மீர் அரசியல் அதிர்வலைகளால் ஏற்படுவதற்கு வாய்ப்புகள் உள்ளது.
சிறிலங்கா அரசு என்பது ஒரு பெரிய இயந்திரம். அதற்குள் எழும் சிறு பொறிமுறை சிக்கல்களை, உரிமை கோரி கையாளுபவர்களே அரசியல்வாதிகள். இதிலே தமிழ் அரசியல்வாதிகள் அந்தப் பொறிமுறை சிக்கல்களில் ஒன்றாக இருக்கின்றனரே அல்லாமல், கையாள்பவர்களாக இன்னமும் மாறவில்லை என்பது தான் இங்கே வருத்தம் தருகிறது.
-லண்டனில் இருந்து லோகன் பரமசாமி
இலங்கைத்தீவின் தேசிய இனச் சிக்கலை தெற்காசியப் பார்வையுடன் நோக்கும்; இனவிய தேசியவாதப்(ethno nationalism) பார்வையை நிராகரிக்கும் இக்கட்டுரை வரவேற்கத்தக்கது, வழர்த்தெடுக்கப்படவேண்டியது. ,ஆனால், முகங்கொடுக்கும் , உடனடியாக முகங்கொடுக்கப்போகும் நிலமைகள் மட்டுமே முன் வைத்துள்ளமை ஒரு போதமையே. தீர்வுகளுக்கான அரசியல் பாதை எது அல்லது என்ன என்பதையிட்டு கட்டுரை மேலெழுந்தவாரியாகக் கூட எதுவுமே சொல்லாதது குறையாகவே உள்ளது. எதிர்பார்க்கிறோம். பார்வைகள் சரியாக இருந்தால் முடிவுகள் சரியாகவே வரும். முடிவுகளைப் பற்றியும் சிந்தியுங்கள் தோழர் லோகன்.