மேலும்

அனைத்துலக கண்டனங்களுக்கு சிறிலங்கா அரசியல்வாதிகள் பதிலடி

சிறிலங்கா இராணுவத் தளபதியாக லெப்.ஜெனரல் சவேந்திர சில்வா நியமிக்கப்பட்டுள்ளதற்கு, அமெரிக்கா, ஐரோப்பிய ஒன்றியம், ஐ.நா மற்றும் அனைத்துலக மனித உரிமை அமைப்புகள் கவலை வெளியிட்டுள்ள நிலையில், சிறிலங்கா அரசியல்வாதிகள் பலரும், அதற்கு கடும் எதிர்ப்பை வெளியிட்டுள்ளனர்.

உள்நாட்டு நியமனங்களில் வெளித்தரப்பின் தலையீடுகள் ஏற்றுக்கொள்ள முடியாதது என,  சிறிலங்கா வெளிவிவகார அமைச்சு நேற்று அறிக்கை ஒன்றை வெளியிட்டிருந்தது.

இந்தநிலையில், அமெரிக்கா மற்றும் மேற்குலகத்துக்கு பதிலடி கொடுக்கும் வகையில், சிறிலங்கா அரசியல் பிரமுகர்கள் வெளியிட்டுள்ள கருத்துக்களின் தொகுப்பு –

நாடாளுமன்ற உறுப்பினர் விஜேதாச ராஜபக்ச –

சிறிலங்காவின் பாதுகாப்பிலும் இறைமையிலும் தலையிட அமெரிக்க தூதுவருக்கு எந்த அதிகாரமும் இல்லை.

இராணுவத் தளபதி நியமனத்தில் அமெரிக்க தூதுவரின் கருத்தை கண்டித்து சிறிலங்கா அதிபரும் பிரதமரும் உடனடியாக தமது நிலைப்பாட்டை நாட்டு மக்களுக்கு முன்வைக்க வேண்டும்.

அம்பாந்தோட்டை துறைமுகத்தை தன்வசப்படுத்த சீன தூதுவர் எவ்வாறு  எம் மீது அழுத்தம் பிரயோகித்து,  எமது நாட்டை அடிபணிய வைத்தாரோ, அதே பாணியில் அமெரிக்காவும் எம்மை அடிபணிய வைக்க நினைக்கின்றது,

றியர் அட்மிரல் சரத் வீரசேகர – (கூட்டு எதிரணி)

சிறிலங்கா இராணுவத் தளபதியாக லெப்.ஜெனரல் சவேந்திர சில்வா நியமிக்கப்பட்டுள்ளமையானது மிகுந்த கவலையளிக்கிறது.  சவேந்திர சில்வாவிற்கு எதிரான மனித உரிமை மீறல் குற்றச்சாட்டுக்கள் நம்பகத்தன்மை வாய்ந்தவை என்ற நிலையில், அவரது நியமனம் சிறிலங்கா மீதான அனைத்துலக நன்மதிப்பையும் பொறுப்புக்கூறலை ஊக்குவிப்பதற்கான சிறிலங்காவின் உறுதிப்பாடுகளையும் வலுவற்றதாக்குகிறது என்று அமெரிக்கா கூறியிருக்கிறது.

சவேந்திர சில்வாவிற்கு எதிரான குற்றச்சாட்டுக்கள் எவையும் இன்னமும் நிரூபிக்கப்படாத நிலையிலேயே அவருடைய நியமனம் தொடர்பில் இத்தகைய கருத்துக்கள் கூறப்படுகின்றன.

சிறிலங்கா இராணுவம் தொடர்பில் இவ்வாறான கருத்துக்களை வெளியிடுவதில் இருந்து அமெரிக்கத் தூதரகம் விலகியிருக்க வேண்டும் .

நாடாளுமன்ற உறுப்பினர் தயாசிறி ஜயசேகர – (சிறிலங்கா சுதந்திரக் கட்சி)

சிறிலங்கா இராணுவத் தளபதியாக லெப்.ஜெனரல் சவேந்திர சில்வா நியமிக்கப்பட்டுள்ளமைக்கு அனைத்துலகம் அதிருப்தி தெரிவித்துள்ளதை ஏற்றுக்கொள்ள முடியாது.

எமது நாட்டு உள்ளக விவகாரங்களில் தலையிடுவதற்கு அனைத்துலகத்துக்கு எவ்வித தார்மீக உரிமையும் கிடையாது.

நிறைவேற்று அதிகாரத்திற்கேற்ப, இராணுவ தளபதியை நியமிப்பதற்கான அதிகாரம் சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேனவுக்கு உள்ளது.

இராணுவத் தளபதியை மாத்திரமின்றி, அனைத்து அரச நியமனங்களிலும் சிறிலங்கா அதிபருக்கு அதிகாரம் உள்ளது.

அவர், தனக்குள்ள அதிகாரத்தைப் பயன்படுத்தி லெப்.ஜெனரல் சவேந்திர சில்வாவை இராணுவத் தளபதியாக நியமித்ததில் எந்த தவறும் கிடையாது.

லெப்.ஜெனரல் சவேந்திர சில்வாவுக்கு எதிராக கொலை, காணாமல் ஆக்கப்பட்டமை உள்ளிட்ட போர்க்குற்றங்கள் இருப்பதாகக் கூறப்படுகிறது. அவருக்கு எதிராக போர்க்குற்றங்கள் இருந்தால், அவை தொடர்பில் முறையான விசாரணை நடத்தப்படுவதோடு, அதற்கான நடவடிக்கைகளையும் முன்னெடுக்கலாம்.

 நாடாளுமன்ற உறுப்பினர் விமல் வீரவன்ச – (தேசிய சுதந்திர முன்னணி)

இராஜதந்திர பணிகளுக்கான எல்லைகளை மீறி,  சிறிலங்காவின் உள்ளக விவகாரங்களில் அமெரிக்கா தலையிடுகிறது.

இராணுவத் தளபதியாக லெப்.ஜெனரல் சவேந்திர சில்வா  சிறிலங்கா அதிபரால் நியமிக்கப்பட்டுள்ளார்.  இந்த நியமனம், சிறிலங்காவின் உள்நாட்டு விவகாரம்.

இது தொடர்பில் அமெரிக்க தூதுவர் அலய்னா ரெப்லிட்ஸ் தெரிவித்துள்ள கருத்து வன்மையாக கண்டிக்கத்தக்கது.

அமெரிக்க தூதுவர் தனது இராஜதந்திர பணியின் எல்லைகளை மீறி சிறிலங்காவின் உள்ளக விவகாரங்களில் அநாகரிகமான முறையில் தலையிட்டுள்ளார்.

அமெரிக்காவின் அடிமை அரசு ஒன்றுக்கு கட்டளைகளை  பிறப்பிப்பது போன்று சிறிலங்கா இராணுவ தளபதி நியமனத்தில், அவர் தெரிவித்த கருத்தானது ஏற்றுக்கொள்ளக் கூடியதல்ல.

2015 இல், ஐ.நா மனித உரிமைகள் பேரவையில் சிறிலங்கா இராணுவம் மற்றும் தலைவர்களுக்கு எதிராக, போர்க்குற்றச்சாட்டுக்களை முன்வைத்து அறிக்கை சமர்ப்பித்தனர்.

இந்த குற்றச்சாட்டுக்களுக்கு பதிலளிக்க சிறிலங்கா அரசாங்கத்துக்கோ நட்பு நாடுகளுக்கோ அமெரிக்கா சந்தர்ப்பம் வழங்கியிருக்கவில்லை.

தேவையற்ற அழுத்தங்களை கொடுக்கும் வகையிலேயே அமெரிக்கா செயற்பட்டது.

இயற்கை நீதிகளுக்கு அப்பால் சென்று,  சிறிலங்கா விவகாரங்களில் அமெரிக்கா செயற்படுகின்றது. இராணுவத் தளபதி  நியமனம் தொடர்பில் பேச அமெரிக்காவுக்கு எந்ததார்மீக உரிமையும் கிடையாது.

 அமைச்சர் சம்பிக்க ரணவக்க – (ஜாதிக ஹெல உறுமய)

இராணுவத் தளபதியை நியமிக்கும் அதிகாரம் முப்படைகளின் தளபதியான சிறிலங்கா அதிபருக்கு உள்ளது. அதுகுறித்து யாரும் கருத்துக்கூற முடியாது.

லெப். ஜெனரல் சவேந்திர சில்வாவின் நியமனம் தொடர்பாக, அமெரிக்கா வெளியிட்டுள்ள கருத்து தொடர்பாக கூறுவதாயின், ஒன்றை நினைவு படுத்த விரும்புகின்றேன்.

ஆபிரகாம் லிங்கன் அமெரிக்க அதிபராக இருந்த போது, உள்நாட்டு போர் வெடித்து, அமெரிக்கா இரண்டாகப் பிளவுபடும் நிலை ஏற்பட்டது.

அப்போது ஆபிரகாம் லிங்கனின்,  வட படையணிக்குத் தலைமை தாங்கிச் சென்று, ஜெனரல் யுலிசிஸ்  எஸ். கிரான்ட் தெற்குப் படையைத் தோற்கடித்து, அமெரிக்காவை ஒன்றுபடுத்தினார். அப்போது ஜெனரல்  யுலிசிஸ் கிரான்ட் மீதும் போர்க்குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்பட்டன.

அன்று ஜெனரல் கிரான்ட் அந்தப் போரில்  வெற்றியடைந்திருக்காவிட்டால் இன்றைய பலம் பொருந்திய  அமெரிக்கா இருந்திருக்காது.

அதுபோலவே, லெப்.ஜெனரல் சவேந்திர சில்வாவும் தனது தாய், தந்தையைக் காப்பாற்றுவதற்காக போருக்குச் செல்லவில்லை. நாட்டுக்காகவே சென்றார்.

குற்றங்கள் ஏதேனும் இருப்பின் அதனை முறைப்படி விசாரணை செய்வதற்கு நீதித்துறை உண்டு.  நாட்டின் நீதித்துறை சுயாதீனமாகச் செயற்படுவதைக் கடந்த காலங்களில் நிரூபித்திருக்கின்றோம்.

எனவே, அமெரிக்காவுக்கு, ஜெனரல் யுலிசிஸ்.எஸ்.கிரான்ட் எவ்வாறு முக்கியமோ, அதேபோன்று எமக்கு சவேந்திர சில்வா முக்கியம் என்பதை அனைவரும் உணர்ந்து கொள்ள வேண்டும்.

சி.பி.ரத்நாயக்க – (பொதுஜன பெரமுன)

சிறிலங்கா தலைவர்கள்  நாட்டு மக்களினது தேவையின் அடிப்படையில் அதிகாரிகளை நியமிக்கும்போது, அமெரிக்கா, கனடா உள்ளிட்ட பிற நாடுகளின் தெரிவுகளை அவர்கள் கவனத்தில் கொள்ள முடியாது.

சிறிலங்காஇராணுவத் தளபதியாக நியமிக்கப்பட்டுள்ள லெப்.ஜெனரல் சவேந்திர சில்வா, நாட்டை நாசப்படுத்திய 30 ஆண்டு கால போருக்கு முற்றுப்புள்ளி வைக்க, மகத்தான பங்களிப்பை வழங்கினார்.

எங்களுக்கு ஒரு புதிய இராணுவத் தளபதி கிடைத்தது, புலம்பெயர் தமிழர்கள், சுமந்திரன் மற்றும் அமெரிக்காவுக்கு வருத்தத்தை ஏற்படுத்தியுள்ளது.

சவேந்திர சில்வா போன்ற ஒரு போர்வீரனை சிறிலங்கா இராணுவத் தளபதியாக நியமிக்கும்போது, அமெரிக்கா ஏன் வேதனைப்பட வேண்டும்?

சிறிலங்காவை சீர்குலைக்கும் ‘ரிமோட் கொன்ட்ரோல் மேற்குலகின் கைகளில் உள்ளது, எமது மக்கள் அதை நன்கு அறிவார்கள்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *