மேலும்

சீனாவின் உதவியை பெறுவது சிறந்த மூலோபாய முடிவு – சிறிலங்கா வெளிவிவகார அமைச்சர்

இந்தியாவை புறக்கணித்து விட்டு சீனாவுடன் நெருங்கிய உறவுகளை பேணமாட்டோம் என்று, சிறிலங்காவின் வெளிவிவகார அமைச்சராக நியமிக்கப்பட்டுள்ள, சரத் அமுனுகம தெரிவித்துள்ளார்.

அனைத்துலக ஊடகம் ஒன்றுக்கு அளித்துள்ள செவ்வியில் அவர்,

”சீனாவை நோக்கி சிறிலங்கா நகராது.  சிறிலங்காவைப் பொறுத்தவரை இரு மிகப்பெரும் நண்பர்களை கொண்டிருப்பதை சாதகமான விடயமாக கருதுகின்றது.

சிறிலங்கா ஒரு பக்கம் சாய்வதில் பலனில்லை. இந்தியாவுடன் நட்பாக உள்ளோம் என்பதற்காக சீனாவுடன் சிறந்த உறவைப் பேணவில்லை என கருத முடியாது.

சீனாவின் நிதியுதவியுடனான  திட்டங்கள் வேகமாக முன்னெடுக்கப்பட்டன. சீனாவின் நிதியுதவியுடன் முன்னெடுக்கப்படும் அபிவிருத்தி திட்டங்களில் விதிமுறைகள்  மிகவும் சாதகமானவையாக இருந்தன. அதிகாரத்துவ நடைமுறைகள் குறைக்கப்பட்டுள்ளன.

ஏனைய நாடுகளின் உதவியுடன் திட்டமொன்றை நடைமுறைப்படுத்துவதை விட, சீனாவின் உதவியுடன் மிக வேகமாக திட்டங்களை நடைமுறைப்படுத்தக் கூடியதாக இருந்தது.

சீனாவிடமிருந்து கடன்களை பெறுவதில் பிரச்சினைகள் குறைபாடுகள் உள்ள போதிலும், ஒட்டுமொத்தத்தில் சீனாவிடமிருந்து உதவியை பெறுவது சிறந்த மூலோபாய முடிவு என்று நான் கருதுகின்றேன்” எனவும், அவர் தெரிவித்துள்ளார்.

பயணத் தடை நியாயமற்றது

சிலநாடுகள் சிறிலங்காவுக்கு பயணம் மேற்கொள்வதற்கு பயண எச்சரிக்கை அறிவிப்புகளை வெளியிட்டுள்ளது நியாயமற்றது என, சிறிலங்கா வெளிவிவகார அமைச்சர் சரத் அமுனுகம கூறியுள்ளார்.

அண்மைய அரசியல் மாற்றங்களுக்குப் பின்னர், எந்த வன்முறைச் சம்பவமோ, குழப்பமோ நாட்டில் இடம்பெறவில்லை. சுற்றுலாத் துறைக்கு எந்த இடையூறும் ஏற்படவில்லை.எனினும், சில நாடுகள் தமது நாட்டுக் குடிமக்களுக்கு பயண எச்சரிக்கைகளை வெளியிட்டிருப்பது நியாமற்றது என்று கூறினார்.

பயண எச்சரிக்கைகள் தொடர்பாக, சுற்றுலாத் துறையினர் மற்றும் விமான சேவை நிறுவன அதிகாரிகளுடன் நடத்திய கலந்துரையாடலிலேயே அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.

குழப்பத்தில் சிறிலங்கா

சிறிலங்காவின் சற்றுலாத்துறை இந்த எச்சரிக்கைகளால் நெருக்கடிகளை சந்திக்கும் வாய்ப்புகள் இருப்பதா தகவல்கள் தெரிவிக்கின்றன.

ரஷ்யாவின் ஏரோபுளொட், சுவிற்சர்லாந்தின் சுவிஸ் எயர் போன்ற நிறுவனங்கள் கொழும்புக்கான விமான சேவைகளை ஆரம்பிக்கும் தருணத்தில் இந்த பயண எச்சரிக்கைகளால் சிறிலங்காவுக்கு பின்னடைவுகள் ஏற்பட்டுள்ளதாக கருதப்படுகிறது

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *