மேலும்

அம்பாந்தோட்டையில் சீனத் தளம் அமையாது – அமெரிக்காவுக்கு விளக்கியது சிறிலங்கா

அம்பாந்தோட்டை துறைமுகத்தில் வெளிநாட்டு இராணுவத் தலையீடுகளுக்கு இடமளிக்கப்படாது என்று அமெரிக்க இராஜாங்கத் திணைக்களத்துக்கு, சிறிலங்கா அரசாங்கம் விளக்கமளித்துள்ளதாக, ஏஎவ்பி செய்தி வெளியிட்டுள்ளது.

இந்தியப் பெருங்கடல் தீவு நாட்டில், பீஜிங்கினால் குத்தகைக்குப் பெறப்பட்ட,  கேந்திர முக்கியத்துவம் வாய்ந்த துறைமுகம் விரைவில் சீனாவின் முன்னரங்க இராணுவத் தளமாகக் கூடும் என்று அண்மையில் அமெரிக்காவின் துணை அதிபர் மைக் பென்ஸ் கூறியிருந்தார்.

இதனை சிறிலங்கா அரசாங்கம் நிராகரித்துள்ளதாக ஏஎவ்பி செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது.

அம்பாந்தோட்டையில், வெளிநாட்டு இராணுவத் தலையீடுகள் இருக்காது என்றும், இது குறித்து அமெரிக்க இராஜாங்கத் திணைக்களத்துக்கு விளக்கமளிக்கப்பட்டுள்ளதாகவும், சிறிலங்கா பிரதமரின் பணியகம் தெரிவித்துள்ளது,

எமது கடற்படையின் தென்பகுதி தலைமையகம், அம்பாந்தோட்டைக்கு நகர்த்தப்பட்டு,  துறைமுகத்தின் பாதுகாப்பு அதன் கீழ் கொண்டு வரப்படும் என்று, சிறிலங்கா பிரதமர் ரணில் விக்கிரமசிங்க லண்டனில் தெரிவித்த கருத்தையும் அவரது பணியகம் சுட்டிக்காட்டியுள்ளது.

மகிந்த ராஜபக்ச ஆட்சிக்காலத்தில் சீனாவிடம் பெற்ற கடன் மூலம் கட்டப்பட்ட அம்பாந்தோட்டை விமான நிலையத்தின் முகாமைத்துவத்தை இந்தியாவிடம் ஒப்படைப்பதற்கான வணிக உடன்பாட்டை செய்து கொள்ள எதிர்பார்த்திருப்பதாகவும் சிறிலங்கா பிரதமர் கூறியுள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *