இழப்பீடுகளுக்கான பணியகத்தை அமைக்கும் சட்டம் – நாடாளுமன்றத்தில் நிறைவேறியது
இழப்பீடுகளுக்கான பணியகத்தை அமைக்கும் சட்டம் நேற்று, சிறிலங்கா நாடாளுமன்றத்தில் 16 மேலதிக பெரும்பான்மை வாக்குகளால் நிறைவேற்றப்பட்டது.
பாதிக்கப்பட்ட நபர்களுக்கு இழப்பீடுகளை வழங்கும் வகையில், நிலைமாறு கால நீதிப் பொறிமுறையின் ஒரு கட்டமாக இந்தப் பணியகம் உருவாக்கப்படவுள்ளது.
போர்க்காலத்தில் காணாமல் ஆக்கப்பட்டவர்கள், கொல்லப்பட்டவர்கள், காயமடைந்தவர்கள், மற்றும் பல்வேறு வழிகளில் பாதிக்கப்பட்டவர்களுக்கு இழப்பீடுகளை பெற்றுக் கொடுக்கும் வகையில் இந்தப் பணியகத்தை அமைக்கத் திட்டமிடப்பட்டுள்ளது.
இந்தச் சட்டமூலம் மீதான விவாதம் நேற்று சிறிலங்கா நாடாளுமன்றத்தில் இடம்பெற்றது. இதன்போது, கூட்டு எதிரணியினர் கடும் எதிர்ப்பை வெளியிட்டனர்.
எனினும், தொடர்ந்து நடத்தப்பட்ட வாக்கெடுப்பில், இழப்பீடுகளுக்கான பணியக சட்டமூலத்துக்கு ஆதரவாக, 59 வாக்குகள் அளிக்கப்பட்டன. எதிராக 43 வாக்குகள் அளிக்கப்பட்டன. இதன் மூலம் 16 மேலதிக வாக்குகளால் இந்தச் சட்டம் நிறைவேற்றப்பட்டது.
ஐதேக, சிறிலங்கா சுதந்திரக் கட்சி உறுப்பினர்களுடன் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் உறுப்பினர்களும் இதற்கு ஆதரவாக வாக்களித்தனர்.
கூட்டு எதிரணியின் உறுப்பினர்களும், சிறிலங்கா சுதந்திரக் கட்சியின் 15 பேர் அணியினரும், இந்தச் சட்டமூலத்துக்கு எதிராக வாக்களித்தனர்.ஜேவிபி உறுப்பினர்கள் வாக்களிப்பில் பங்கேற்கவில்லை.
இந்த சட்டமூலம் விவாதத்துக்கு எடுத்துக் கொள்ளப்பட்ட போது, பாதிக்கப்பட்ட நபர்கள் என்ற சொல்லுக்கான விளக்கத்தில், உச்ச நீதிமன்றத்தின் அறிவுறுத்தலுக்கமைய வெளிவிவகார அமைச்சர் திருத்தம் ஒன்றை முன்வைத்தார்.
அதன்படி பாதிக்கப்பட்ட நபர்கள் என்பது, “மனித உரிமைகள் அல்லது மனிதாபிமானச் சட்ட மீறல்களால் பாதிக்கப்பட்டவர்கள் அவர்களின் உறவினர்கள் மற்றும் காணாமல் போனவர்கள்” என்று வரையறை செய்யப்பட்டுள்ளது.