இடைக்கால அரசு – இன்று இரண்டாவது கட்ட ஆலோசனை
மகிந்த ராஜபக்ச தலைமையிலான கூட்டு எதிரணிக்கும், கூட்டு அரசாங்கத்தில் இருந்து விலகிய சிறிலங்கா சுதந்திரக் கட்சியின் 15 பேர் அணிக்கும் இடையில், இன்று உயர்மட்டச் சந்திப்பு ஒன்று இடம்பெறவுள்ளது.
மகிந்த ராஜபக்சவின் இல்லத்தில் இந்தக் கூட்டம் இடம்பெறவுள்ளதாகவும்,நேற்று முன்தினம் மாலை கூட்டு எதிரணியின் உறுப்பினர்களுடன் நடத்தப்பட்ட கலந்துரையாடலின் தொடர்ச்சியாகவே இந்தச் சந்திப்பு நடக்கவுள்ளதாகவும், நாடாளுமன்ற உறுப்பினர் ஷெகான் சேமசிங்க தெரிவித்துள்ளார்.
நேற்றுமுன்தினம் நடந்த கூட்டத்தில் பங்கேற்காத கூட்டு எதிரணியின் உறுப்பினர்களுடன், மேலதிக கலந்துரையாடல்களை நடத்த பேராசிரியர் ஜி.எல்.பீரிசின் இல்லத்தில் சந்திப்பு ஒன்று நடத்தப்படவுள்ளதாகவும் அவர் கூறினார்.
”செவ்வாயன்று நடந்த கூட்டத்தில், கூட்டு எதிரணியில் உள்ள சிறிலங்கா சுதந்திரக் கட்சியின் 44 உறுப்பினர்கள் பங்கேற்றனர். இதில் கூட்டு எதிரணியின் தலைவர்களான, தினேஸ் குணவர்த்தன, உதய கம்மன்பில, விமல் வீரவன்ச, உள்ளிட்டவர்கள் பங்கேற்கவில்லை.
இடைக்கால அரசாங்கத்தை அமைப்பது பற்றிய விவகாரம் சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேனவின் தரப்பில் இருந்தே முன்னெடுக்கப்பட வேண்டும். ஆனால் இதுவரையில் எமக்கு அத்தகைய தகவல் வழங்கப்படவோ, வேண்டுகோள் விடுக்கப்படவோ இல்லை.
அவ்வாறான கோரிக்கை விடுக்கப்பட்டால், கூட்டு எதிரணி அதுபற்றிப் பரிசீலிக்கத் தயாராக இருக்கிறது” என்றும் ஷெகான் சேமசிங்க தெரிவித்துள்ளார்.