மகிந்தவின் புதல்வர்களின் பயணப் பொதியைக் காவிய சிறிலங்கா தூதுவரை திருப்பி அழைக்க அழுத்தம்
மகிந்த ராஜபக்சவின் இரண்டு புதல்வர்களையும், கட்டார் விமான நிலையத்தில் வரவேற்று அவர்களின், பயணப் பொதிகளைக் காவிச் சென்ற, கட்டார் நாட்டுக்கான சிறிலங்கா தூதுவர் ஏஎஸ்பி லியனகேயை திருப்பி அழைக்குமாறு சிறிலங்கா அதிபருக்கு அழுத்தங்கள் கொடுக்கப்பட்டுள்ளன.
நேற்று முன்தினம் கட்டார் விமான நிலையத்தைச் சென்றடைந்த மகிந்த ராஜபக்சவின் புதல்வர்களான யோசித ராஜபக்ச மற்றும், றோகித ராஜபக்ச ஆகியோரை, கட்டாருக்கான சிறிலங்கா தூதுவர் ஏஎஸ்பி லியனகே வரவேற்று, அவர்களின் பயணப் பொதிகளைக் காவிக் கொண்டு சென்றார்.
இது தொடர்பான ஒளிப்படங்கள் வெளியானதை அடுத்து, அரசியல் வட்டாரங்களில் பெரும் அதிர்வலைகள் ஏற்பட்டுள்ளன.
சில அமைச்சர்கள், கட்டாருக்கான தூதுவரின் இந்தப் படங்களை, சிறிலங்கா அதிபரின் கவனத்துக்குக் கொண்டு சென்றுள்ளனர்.
யோசித ராஜபக்ச, யோசித ராஜபக்ச ஆகியோரின் பயணப் பொதிகளை காவியதன் மூலம், ஒட்டுமொத்த அரசாங்கத்தையும் ஏஎஸ்பி லியனகே அவமானத்துக்கு உள்ளாக்கி விட்டார் என்றும் அவர்கள் அதிருப்தி வெளியிட்டுள்ளனர்.
அத்துடன், அவரை திருப்பி அழைக்குமாறும் அழுத்தங்களைக் கொடுத்துள்ளனர்.