மேலும்

நாடு மீண்டும் வன்முறைக்குத் திரும்பும் அபாயம் – பிரித்தானிய அமைச்சரிடம் சம்பந்தன்

சிறிலங்காவுக்குப் பயணம் மேற்கொண்டுள்ள ஆசிய பசுபிக் பகுதிகளுக்கான, பிரித்தானியாவின் வெளிவிவகார இணை அமைச்சர் மார்க் பீல்ட் நேற்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தனைச் சந்தித்துப் பேச்சு நடத்தியுள்ளார்.

கொழும்பில் உள்ள வெஸ்ட்மினிஸ்டர் இல்லத்தில் இந்தச் சந்திப்பு இடம்பெற்றது.

இந்தச் சந்திப்பின் போது, ஐ.நா மனித உரிமைகள் பேரவையில் இரண்டு ஆண்டு கால அவகாசத்தைப் பெற்ற சிறிலங்கா அரசாங்கம், அந்த தீர்மானத்தை நடைமுறைப்படுத்துவதில் அக்கறையின்றி மிகவும் மெதுவாக செயற்படுவதாக இரா.சம்பந்தன் சுட்டிக்காட்டியுள்ளார்.

“போர் முடிந்து 9 ஆண்டுகளாகியும் பொதுமக்களின் காணிகள், ஆயுதப்படைகளால் விடுவிக்கப்படாமல் இருக்கின்றன.

பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்ட அரசியல் கைதிகள் இன்னமும் விடுவிக்கப்படாமல் உள்ளனர்.

பயங்கரவாத தடைச்சட்டத்தை நீக்குவதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டுள்ள போதும் அது இன்னமும் நடைமுறையில் இருக்கிறது.

காணாமல் போனோருக்கான பணியகம் நீண்ட இழுபறிகளுக்குப் பின்னர் உருவாக்கப்பட்டுள்ளது. அது விரைவாகச் செயற்பட வேண்டியது அவசியம்.

உண்மையைக் கண்டறியும் பொறிமுறை இன்னமும் உருவாக்கப்படவில்லை. யாரும் எதையும் மறைக்க முடியாது. உண்மைகள் கண்டறியப்பட வேண்டும் என்பது எமது நிலைப்பாடு. நீதியை நிலைநாட்டுவதற்கு உண்மை கண்டறியும் பொறிமுறை உருவாக்கப்படுவது முக்கியம்.

அரசியலமைப்பு மாற்ற முயற்சிகள் வேகமாக முன்னெடுக்கப்பட வேண்டும். நாங்கள் ஒன்றுபட்ட, பிளவுபடாத நாட்டுக்குள், நியாயமான தீர்வை ஏற்றுக் கொள்ள விரும்புகிறோம்.அதனை எமது மக்கள் தேர்தல்களிலும் வெளிப்படுத்தியுள்ளனர்.

நாங்கள் இந்த நாட்டில் சம உரிமைகளைப் பெற்றவர்களாக, சுயமரியாதையுடன், கௌரவமாக வாழ விரும்புகிறோம். மக்களின் ஜனநாயக ரீதியான தீர்ப்பு இது. இதனை மதிக்க வேண்டும்.

எமது இளம் சமூகத்தினர் மீண்டும் வன்முறைக்குத் திரும்புவதை நாங்கள் விரும்பவில்லை. ஆயுத மோதல்களால் எமது இளைஞர்கள் பலவற்றை இழந்திருக்கிறார்கள், தொடர்ந்தும் அவ்வாறான நிலை ஏற்படுவதை நாங்கள் விரும்பவில்லை,

இந்த வாய்ப்பு தவற விடப்படுமானால், யார் ஆட்சியில் இருந்தாலும், நாடு மீண்டும் பின்நோக்கிச் செல்வது நிச்சயம்.

எனவே எல்லாக் கட்சிகளும், ஒன்றிணைந்து,  நீண்டகாலப் பிரச்சினைக்கு நிலையான தீர்வை, காண முன்வர வேண்டும். புதிய அரசியலமைப்பு உருவாக்குவதில் தோல்வி காணப்பட்டால், நாடு மீண்டும் ஒருமுறை வன்முறைக்கு இட்டுச் செல்லப்படும் அபாயம் உள்ளது.

ஐ.நா மனித உரிமைகள் பேரவையில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்துக்கு இணை அனுசரணை வழங்கியுள்ள சிறிலங்கா, அதனை நடைமுறைப்படுத்துவதற்கு கடமைப்பட்டுள்ளது.ஜெனிவா தீர்மானம் நடைமுறைப்படுத்தப்பட வேண்டும்.

தனது மக்களுக்கு நீதியை வழங்குவதில் இருந்து சிறிலங்கா அரசாங்கம் நழுவ முடியாது. இந்த தீர்மானம் எந்த மாற்றமும் இன்றி, முழுமையாக நடைமுறைப்படுத்தப்பட வேண்டும் என்பதே எமது நிலைப்பாடு. அரசாங்கம் தனது வாக்குறுதிகளை சொந்த வாக்குறுதிகளை நிறைவேற்றுவது அதன் கடமை,” என்றும் இரா.சம்பந்தன் தெரிவித்துள்ளார்.

இதற்கிடையே, நிலையான அமைதியையும், உறுதித்தன்மையையும் மக்கள் அனுபவிப்பதற்கு சிறிலங்கா அரசாங்கம் இன்னும் அதிகம் பணியாற்ற வேண்டும் என்றும், பிரித்தானிய இணை வெளிவிவகார அமைச்சர் மார்க் பீல்ட் தமது கீச்சக குறிப்பில் தெரிவித்துள்ளார்.

இதன்முன்பாக இருக்கும் சவால்கள் தொடர்பாக, இரா.சம்பந்தனுடன் நடத்திய சந்திப்பு ஆக்கபூர்வமானதாக இருந்தது என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *