வடக்கு மாகாணசபை உறுப்பினர் ரவிகரன் சிறிலங்கா காவல்துறையினரால் கைது
வடக்கு மாகாணசபை உறுப்பினர் துரைராஜா ரவிகரன், முல்லைத்தீவில் இன்று சிறிலங்கா காவல்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
முல்லைத்தீவு – வட்டுவாகலில் சிறிலங்கா கடற்படையினரின் ‘கோத்தாபய’ தளத்துக்கு, தமிழ் மக்களின் காணிகளைச் சுவீகரிக்க மேற்கொள்ளப்பட்ட முயற்சிக்கு எதிராக பொதுமக்களுடன் இணைந்து ரவிகரன், சிவாஜிலிங்கம் உள்ளிட்ட மாகாணசபை உறுப்பினர்கள் போராட்டம் நடத்தியிருந்தனர்.
இந்தப் போராட்டத்தில் ஈடுபட்டவர்களில் மாகாணசபை உறுப்பினர்கள் ரவிகரன், சிவாஜிலிங்கம் உள்ளிட்ட சிலர் மீது சிறிலங்கா காவல்துறையினர் வழக்குகளைப் பதிவு செய்திருந்தனர்.
இந்த நிலையில் இன்று காலை 8.30 மணியளவில் முல்லைத்தீவு காவல் நிலையத்துக்கு விசாரணைக்காக அழைக்கப்பட்ட மாகாணசபை உறுப்பினர் ரவிகரன், சிறிலங்கா காவல்துறையினரால் கைது செய்யப்பட்டார்.
இதையடுத்து அவர் முல்லைத்தீவு மாவட்ட நீதிவான் நீதிமன்றில் அவர் முன்னிலைப்படுத்தப்பட்டுள்ளார்.
பிந்திய செய்தி
கைது செய்யப்பட்ட வட மாகாணசபை உறுப்பினரை இரண்டு பேரின் தலா 2 இலட்ச ரூபா பிணையில் செல்ல முல்லைத்தீவு மாவட்ட நீதிவான் அனுமதியளித்துள்ளார்.