தியத்தலாவ குண்டுவெடிப்பை சாதாரணமாக எடுத்துக் கொள்ளக்கூடாது – மேஜர் ஜெனரல் கமல் குணரத்ன
தியத்தலாவ- கஹகொல்லவில் அண்மையில் சிறிலங்கா படையினர் உள்ளிட்ட 19 பேர் காயமடைந்த பேருந்துக் குண்டு வெடிப்புச் சம்பவத்தை அரசாங்கம் சாதாரணமாக எடுத்துக் கொள்ளக் கூடாது என்று ஓய்வுபெற்ற மேஜர் ஜெனரல் கமல் குணரத்ன தெரிவித்துள்ளார்.
கொழும்பில் நேற்று நடத்திய செய்தியாளர் சந்திப்பில் கருத்து வெளியிடட அவர்,
“ஒரு கைக்குண்டு வெடிப்பின் மூலம் நிச்சயமாக எந்தச் சூழ்நிலையிலும், தீ பரவாது. எனவே, இந்த வெடிப்புக்குக் காரணமான சூழல் தொடர்பாக அரசாங்க மற்றும் இராணுவ அதிகாரிகள் விரிவாக ஆய்வு செய்ய வேண்டும்.
படை அதிகாரி ஒருவர் கைக்குண்டை வீட்டுக்குக் கொண்டு சென்ற போது தற்செயலாக நிகழ்ந்த வெடிப்பு என்ற முடிவுக்கு பொதுமக்கள் வந்தது ஏமாற்றத்தை அளிக்கிறது.
அரசியல் உறுதியற்ற நிலை தொடரும் சூழலில், நாட்டைக் குழப்பத்துக்குள்ளாக்கும் வகையில் பல்வேறு தந்திரோபாயங்கள் கையாளப்படக் கூடும்.
கைக்குண்டு வெடிப்புக்குப் பின்னர் தீ பரவியது என்றால், அந்த பேருந்து பெற்றோலில் இயக்கப்பட்டிருக்க வேண்டும்.” என்றும் அவர் கூறியுள்ளார்.