மேலும்

கூட்டமைப்பின் பின்னடைவு

TNA-manifasto-2018 (2)பெப்ரவரி 10 அன்று நடந்து முடிந்த உள்ளூராட்சித் தேர்தல் பெறுபேறானது தேசிய அரசாங்கத்தின் நிலை என்ன என்பது தொடர்பாக  முழு நாட்டிற்கும் குழப்பத்தை ஏற்படுத்திய அதேவேளையில், வடக்கிலுள்ள தமிழ் அரசியல் வட்டாரங்களும் இத்தேர்தல் பெறுபேறு தொடர்பாக ஆழமாகச் சிந்திக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.

இத்தேர்தலில் போட்டியிட்ட தென்னிலங்கையின் முக்கிய இரு கட்சிகளும் மட்டுமல்லாது வடக்கிலுள்ள தமிழ்த் தேசியக் கூட்டமைப்பும் எதிர்பாராத அளவிற்கு பின்னடைவைச் சந்தித்துள்ளது. இலங்கை தமிழ் அரசுக் கட்சியின் கீழ் வீட்டுச் சின்னத்தில் போட்டியிட்ட தமிழ்த் தேசியக் கூட்டமைப்பானது வடமாகாணத்திலுள்ள 56 உள்ளூராட்சி சபைகளில் 40 சபைகளில் வெற்றி பெற்றுள்ளது.

ஆனால், யாழ்ப்பாணம் – பருத்தித்துறை நகர சபை உட்பட பல்வேறு முக்கிய உள்ளூராட்சி சபைகளில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பானது தோல்வியடைந்துள்ளது. அத்துடன் சில உள்ளூராட்சி சபைகளில் கூட்டமைப்பு வெற்றி பெற்ற போதிலும் உள்ளூராட்சி அரசாங்கத்தை உருவாக்குவதற்குத் தேவையான பெரும்பான்மைப் பலத்தை பெற்றிருக்கவில்லை.

நடந்து முடிந்த உள்ளூராட்சித் தேர்தலில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு பின்னடைவைச் சந்தித்துள்ளது என்பதை அதன் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் ஏற்றுக்கொண்டுள்ளார். சில உள்ளூராட்சி சபைகளில் அகில இலங்கை தமிழ் காங்கிரஸ் அதிக ஆசனங்களைப் பெற்றுள்ளதானது, இதுவரை காலமும் வடமாகாணத்தில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு பெற்றிருந்த செல்வாக்கு அச்சுறுத்தலைச் சந்தித்துள்ளது என்பதை நோக்க முடியும்.

போர் முடிவுற்ற பின்னர், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பானது தமிழ் மக்களின் ஏக பிரதிநிதியாகக் கருதப்படுகிறது. நீண்ட காலமாக, இக்கூட்டமைப்பானது அதிக ஆசனங்களைத் தக்கவைத்திருக்கும் சிறுபான்மைக் கட்சியாகக் காணப்படுகிறது.

30 ஆண்டுகளாக, தேசிய அரசியலானது இனப்பிரச்சினை மற்றும் உள்நாட்டு யுத்தம் போன்றவற்றில் அதிக கவனத்தைக் குவித்திருந்தது. தமிழ் அரசியல் சக்திகள், தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு ஆதரவான மற்றும் புலிகளுக்கு எதிரான என இரு பெரும் பிரிவுகளாகப் பிரிந்தன.

தமிழர் தரப்பிடமிருந்து சமரசங்களை எட்டுவதற்கான ஒவ்வொரு நகர்வுகளிலும் தமிழீழ விடுதலைப் புலிகள் தலையிட்டனர். இதனால் புலிகள் அமைப்பே தமிழ் மக்கள் தொடர்பான தீர்மானத்தை எட்டுவதில் அதிகாரத்தைக் கொண்டிருந்தனர். மக்களின் கவனமும் கூட தேசிய பிரச்சினைக்கான தீர்வையே மையப்படுத்தியது. இனப் பிரச்சினை தொடர்பாகவும் அரசியல் தொடர்பாகவும் தமிழ் அரசியல்வாதிகள் கொண்டிருந்த நிலைப்பாட்டை அடிப்படையாகக் கொண்டே தமிழ் மக்கள் தமக்கான தலைவர்களைத் தெரிவு செய்தனர்.

TNA-ralley (9)

தேசிய பிரச்சினையை மட்டுமே அடிப்படையாகக் கொண்டே தமிழ் மக்கள் தமது வாக்குகளைப் பதிவு செய்தனர். தமிழ் மக்கள் தேர்தல்களில் வாக்களிக்கும் போது தமக்கான நாளாந்த வாழ்வை மற்றும் அக்காலத்திற்கான தமது தேவைகளையோ கருத்திற் கொள்ளவில்லை. போருக்குப் பின்னர் இந்த மக்களின் தேவைகளும் விருப்பங்களும் மாற்றமுற்றன.

போர் முடிவடைந்தாலும் கூட இந்த யுத்தம் பாரிய அழிவை ஏற்படுத்தியிருந்தது.  வடக்கில் வாழ்ந்த தமிழ் மக்கள் இறுதிக்கட்ட யுத்தத்தால் நேரடியாகவும் மறைமுகமாகவும் பாதிக்கப்பட்டுள்ளனர். கிளிநொச்சி மற்றும் முல்லைத்தீவு பிரதேசங்களில் வாழ்ந்த மக்கள் இடம்பெயர்ந்து பல மாதங்களாக மன்னார் மற்றும் வவுனியாவில் அமைக்கப்பட்டிருந்த தற்காலிக முகாம்களில் வாழ்ந்தனர்.

அவர்கள் தமது உடைமைகளை தமது சொந்த இடங்களில் விட்டு விட்டு தமது உயிர்களைப் பாதுகாப்பதற்காக பாதுகாப்பான இடங்களை நோக்கி ஓடவேண்டிய நிலையேற்பட்டது. இறுதிக்கட்ட யுத்தத்தில் பலர் காணாமற் போனார்கள். தமது அன்புக்குரியவர்கள் இன்றும் உயிருடன் வாழ்வதாக காணாமற் போனவர்களின் உறவுகள் நம்புவதுடன் அவர்களைத் தொடர்ந்தும் தேடி வருகின்றனர்.

தற்காலிக முகாங்களில் வாழ்ந்த இடம்பெயர்ந்த தமிழ் மக்கள் சில மாதங்களின் பின்னர் தமது சொந்த இடங்களுக்குத் திரும்பிச் சென்ற போதிலும் கூட, இவர்கள் பழைய வாழ்வை வாழமுடியவில்லை.  பல குடும்பங்கள் யுத்தத்தால் சிதறுண்டுள்ளனர். பல பெண்கள் தமது குடும்பங்களைத் தலைமை தாங்க வேண்டிய நிலையேற்பட்டுள்ளது. குறிப்பாக தமது கணவன்மார் போரில் படுகொலை செய்யப்பட்ட மற்றும் காணாமற் போன மற்றும் ஊனமுற்றவர்களின் மனைவிமார்கள் தமது குடும்பத்தைப் பராமரிக்க வேண்டிய பொறுப்பைக் கொண்டுள்ளனர்.

வேறு விதமாகக் கூறினால், போர் முடிவடைவதற்கு முன்னர் அரசியற் தீர்வுகள் தொடர்பாக கவனம் செலுத்திய மக்கள், போர் முடிவடைந்த பின்னர் தற்போது தமது அடிப்படைத் தேவைகள் தீர்க்கப்பட வேண்டும் என்பதை வலியுறுத்தி வருகின்றனர்.

நாளைக்கு எதை உண்பது எனவும், தமது பிள்ளைகளுக்கான புத்தகங்கள் மற்றும் உபகரணங்களை எவ்வாறு வாங்குவது என்பதிலும் படுக்கையில் கிடக்கும் தமது அன்புக்குரியவர்களுக்குத் தேவையான மருந்தை எவ்வாறு வாங்குவது என்பது தொடர்பாகவும் தமிழ் மக்கள் கவலை கொள்கின்றனர்.

போரின் பல்வேறு கட்டங்களிலும் காணாமற்போன தமது உறவுகளை பலர் இன்னமும் தேடிக்கொண்டிருக்கின்றனர். இந்தப் பிரச்சினைகள் தொடர்பாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பானது சிறிலங்கா அரசாங்கத்துடன் பேச்சுக்களில் ஈடுபடுகின்ற அதேவேளையில், மக்களின் தேவைகள் தொடர்பாக அதிக கவனம் செலுத்துவதை விட அரசியல் சீர்திருத்தம் தொடர்பாக அரசாங்கம் கூடிய அக்கறை செலுத்துவதாக வடக்கிலுள்ள மக்கள் கருதுகின்றனர்.

மறுபுறத்தே, வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் மற்றும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் ஆர்.சம்பந்தன் ஆகியோருக்கு இடையில் நிலவும் பனிப்போரும் தமிழ் மக்கள் மத்தியில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பிற்கு எதிரான உணர்வலைகளை ஏற்படுத்துவதில் செல்வாக்குச் செலுத்துகிறது.

முதலமைச்சர் விக்னேஸ்வரனின் ஆசிர்வாதத்துடன் தமிழ் மக்கள் பேரவை உருவாக்கப்பட்டது தொடர்பில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு அதிருப்தியடைந்தது. இதனால் இவ்விரு தரப்பிற்கும் இடையில் விரிசல் ஏற்படத் தொடங்கியது.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பில் முன்னர் அங்கம் வகித்த முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரான கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தலைமையிலான அகில இலங்கை தமிழ் காங்கிரசிற்கு, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தமது அடிப்படைத் தேவைகளை நிறைவேற்றாமை தொடர்பில் அதிருப்தியடைந்த வடக்கில் வாழும் இளைஞர்களின் ஆதரவு கிடைக்கப் பெற்றுள்ளது.

2015ல் இடம்பெற்ற தேர்தலில் தமிழ் மக்கள் தமது எதிர்ப்பை கூட்டமைப்பின் மீது காண்பிக்காவிட்டாலும் கூட, அதற்குப் பின்னரான கடந்த இரண்டரை ஆண்டுகளில் தமிழ் மக்கள், அகில இலங்கை தமிழ் காங்கிரஸ் போன்ற கட்சிகளுக்கு தமது ஆதரவை வழங்கி வருகின்றனர்.

ஆவா போன்ற குழுக்களின் எழுச்சி வடமாகாணத்தில் பாரியதொரு பிரச்சினையாக உள்ளது. குறிப்பாக யாழ் குடாநாட்டில் ஆவா குழுவினர் தமது குற்றச் செயல்களை பெருமளவில் மேற்கொண்டு வருகின்றனர். இந்தக் குழுக்கள் அரசியல் ரீதியாக தூண்டப்படாவிட்டாலும் கூட, இவர்கள் காவற்துறையினர் மீது தாக்குதலை மேற்கொள்வதுடன், மக்களை அச்சுறுத்துவதுடன் திருட்டுச் சம்பவங்களிலும் ஈடுபடுகின்றனர்.

மேலும், தமிழ் இளைஞர்கள் பலரும் போதைப் பொருட்கள் மற்றும் மது போன்றவற்றைப் பாவிப்பதன் காரணமாக சமூகப் பிரச்சினைகளும் ஏற்படுகின்றன. இவ்வாறான பிரச்சினைகள் தொடர்பாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தீவிர கவனம் செலுத்தாமையே தற்போது இவ்வாறான குற்றச் செயல்கள் கைமீறிப் போனமைக்கான பிரதான காரணமாக உள்ளதாக வடமாகாண சபையின் எதிர்க்கட்சித் தலைவர் சின்னத்துரை தவராஜா தெரிவித்தார்.

சிறிலங்கா அரசாங்கம் தொடர்பில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு மென்போக்கை கடைப்பிடிப்பதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது. எனினும், சில முக்கிய பிரச்சினைகளைத் தீர்ப்பதில் அரசாங்கம் காலம் தாழ்த்துகின்ற போதிலும், தம்மால் முன்வைக்கப்பட்ட வேறு பல கோரிக்கைகளை அரசாங்கம் ஏற்றுக்கொண்டதாக கூட்டமைப்பு சுட்டிக்காட்டியுள்ளது.

சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன, பாதிக்கப்பட்ட குடும்பங்களை நேரடியாகச் சென்று பார்வையிட்டதுடன் அவர்களின் பிரச்சினைகளையும் கேட்டறிந்துள்ளார். மேலும், இராணுவத்தால் ஆக்கிரமிக்கப்பட்ட மக்களுக்குச் சொந்தமான சில ஏக்கர் நிலப்பரப்பானது கடந்த இரண்டரை ஆண்டுகளில் சிறிலங்கா அரசாங்கத்தால் மீண்டும் நில உரிமையாளர்களிடம் கையளிக்கப்பட்டுள்ளது.

தமிழ் மக்களின் உடனடித் தேவைகளை நிறைவேற்றுதல் மற்றும் இறுதிக் கட்டத்தில் இடம்பெற்ற யுத்தத்தில் மேற்கொள்ளப்பட்ட பல்வேறு மீறல்கள் தொடர்பில் பொறுப்புக்கூறல் போன்ற முக்கிய பிரச்சினைகளைத் தீர்ப்பதில் சிறிலங்கா அரசாங்கம் அக்கறை காண்பிக்கவில்லை என்கின்ற குற்றச்சாட்டை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு ஏற்றுக்கொண்டுள்ளது.

எனினும், இவ்வாறான விடயங்களை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு மிக வேகமாகக் கருத்திற் கொள்வதுடன் இதற்கேற்ப தனது நிலைப்பாட்டை மாற்றியமைப்பதற்கான நடவடிக்கைகளை விரைந்து முன்னெடுக்க வேண்டும்.

ஆங்கிலத்தில் –  Arthur Wamanan
வழிமூலம்        – Ceylon today
மொழியாக்கம் – நித்தியபாரதி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *