மேலும்

அனைத்துலக சட்டப்பொறிமுறைக்குள் சிறிலங்காவை முற்படுத்துமாறு வடமாகாணசபையில் தீர்மானம்

npcசிறிலங்கா ஒப்புக்கொண்டு, ஏற்றுக்கொண்ட ஐ.நா மனித உரிமைகள் பேரவைத் தீர்மானத்தை நடைமுறைப்படுத்தாத நிலையில், சிறிலங்கா அரசை ஐ.நா. தலைமையிலான அனைத்துலக சட்டப் பொறிமுறைக்குள் முற்படுத்தப்பட வேண்டும் என்று கோரும் தீர்மானம்  வடக்கு மாகாண சபையில் நேற்று நிறைவேற்றப்பட்டது.

நேற்று நடந்த  சபையின் அமர்வில், வடக்கு மாகாண சபை உறுப்பினர் சிவாஜிலிங்கம் கொண்டு வந்த பிரேரணையை, எதிர்க்கட்சித் தலைவர் தவராசா வழிமொழிந்தார்.

இதையடுத்து ஒருமனதாக நிறைவேற்றப்பட்ட இந்த தீர்மானத்தின் பிரதிகள் ஐ.நா. மனித உரிமைகள் பேரவைக்கு அனுப்பப்படவுள்ளன.

இந்த தீர்மானத்தில் கூறப்பட்டுள்ளதாவது-

2015ஆம் ஆண்டு செப்ரெம்பரில் நடந்த ஐ.நா. மனித உரிமைகள் பேரவை அமர்வில், சிறிலங்காவில் நல்லிணக்கம், பொறுப்புக்கூறுதல், மனித உரிமைகள் முதலியவற்றை ஊக்கப்படுத்தல் என்ற தலைப்பிலான தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. அதற்கு சிறிலங்கா அரசும் இணை அனுசரணை வழங்கியது.

மனித உரிமைகள் மற்றும் அனைத்துலக மனித நேயச் சட்ட மீறல்கள்  தொடர்பான குற்றச்சாட்டுக்களை விசாரிப்பதற்கென அனைத்துலக நீதிபதிகள், சட்டவாளர்கள், வழக்குத் தொடுநர்கள், விசாரணையாளர்கள் அடங்கலான பக்கச் சார்பற்ற விசாரணைப் பொறிமுறையொன்றை ஏற்படுத்துவதற்கான கடப்பாட்டு நிலைக்குள் சிறிலங்கா தன்னை உட்படுத்தி கொண்டது.

ஆனால் அந்தத் தீர்மானத்தை நடைமுறைப்படுத்துவது தொடர்பாக எந்த ஒரு அர்த்தமுள்ள நடவடிக்கையும் சிறிலங்கா அரசு எடுக்கத் தவறி விட்டது.

சிறிலங்கா அதிபர், பிரதமர் மற்றும் அமைச்சர்கள் இந்தத் தீர்மானத்தை முழுமையாக நடைமுறைப்படுத்தப் போவதில்லை என்று தெளிவாகவும் ஆணித்தரமாகவும் வெளிப்படுத்தி உள்ளனர்.

ஒரு சமத்துவமான அரசியல் தீர்வை கண்டு கொள்வதற்கான விசுவாசமான நடவடிக்கையை மேற்கொள்வதிலிருந்து அரசு தவறியுள்ளது.

சிங்கள அரசினுடைய ஒடுக்கு முறை மனப்போக்கை எடுத்துக்காட்டும் விதத்திலே, தமிழ் மக்கள் உள்ளிட்ட பௌத்தர்கள் அல்லாத மக்கள் அனைவரும் பௌத்த மதத்தினுடைய முதன்மை நிலையை கட்டாயம் ஏற்றுக்கொள்ள வேண்டும் என்று இப்போதும் வலியுறுத்துவதையும் காணக்கூடியதாக உள்ளது.

சிறிலங்கா தானே ஏற்றுக்கொண்ட கடப்பாடுகளை நடைமுறைப்படுத்த மற்றும் ஐ.நா. மனித உரிமைகள் பேரவைத் தீர்மானத்தை நடைமுறைப்படுத்த இயலாமல் அல்லது விரும்பாமல் இருப்பதால், இதனை ஐ.நா.வின் தலைமையிலான ஒரு அனைத்துலக சட்டநெறிப் பொறிமுறைக்குக்  முற்படுத்துமாறு ஐ.நா மனித உரிமைகள் பேரவையின் உறுப்பு நாடுகளை இந்தச் சபை கேட்டுக்கொள்கிறது.

உண்மை நீதி மற்றும் சமத்துவமான அரசியல் தீர்வு இல்லாமல் சிறிலங்காவிலே நல்லிணக்கமோ அல்லது நிரந்தரமான சமாதானமோ சாத்தியமில்லை என்று இந்தச் சபை நம்புகின்றது.

2015 ஆம் ஆண்டு செப்ரெம்பர் மாதம் சிறிலங்கா மீதான விசாரணை அறிக்கையில் பரிந்துரைக்கப்பட்டிருப்பது போல் ரோம் சட்டத்தை அங்கீகரிக்க சிறிலங்காவை வற்புறுத்தும்படி ஐ.நா.வையும் அனைத்துலகச் சமூகத்தையும் சபை கோருகிறது.

தமிழ் மக்கள் சிறிலங்காவில் இணைந்த வடக்கு – கிழக்குப் பிரதேசங்களில் தமது மரபு வழி தாயகத்தை கொண்டிருக்கும் ஒரு மக்கள் இனம் என்பதையும் அவர்கள் சுய நிர்ணய உரிமைகள் கொண்டவர்கள் என்பதையும் கண்டுணர்ந்திருக்கும் இந்தச் சபையானது, ஒரு அரசியல் தீர்வுக்காக இணக்க நடுவராக செயற்படும் படி அனைத்துலக சமூகத்தை- அதிலும் குறிப்பாக, அமெரிக்கா, ஐரோப்பிய ஒன்றியம் மற்றும் இந்தியாவை கோருகின்றோம். என்று கூறப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *