மேலும்

மாலைதீவும் சிறிலங்காவும்

maldivesமாலைதீவு அரசியலில் ஏற்பட்டிருக்கும் மாற்றம் இந்து சமுத்திரப் பிராந்திய புவிசார் அரசியலில் தாக்கத்தை ஏற்படுத்தி உள்ளது. இந்தத் தாக்கம் சிறிலங்காவில் ஆட்சியைக் கைப்பற்றும் என ஆய்வாளர்களால் குறிப்பிடப்படும் சிங்கள பௌத்த பேரினவாதத்தை எச்சரிக்கைக்கு உள்ளாக்குகிறது.

நியுயோர்க் ரைம்ஸ் பத்திரிகையால் எதேச்சாதிகார தலைவர் என்று வர்ணிக்கப்படுள்ள மாலைதீவு தலைவர் அப்துல்லா யமீன் அவர்கள் ஆட்சியில், நிர்வாக முறைகேடுகள் இடம்பெறுவதாகவும் மனிதஉரிமைக்கு எதிரான குற்றச்செயல்கள் அரசாங்கத் தரப்பால் நடத்தப்படுவதாக மேலைத்தேய  ஊடகங்களும் மனித உரிமை நிறுவனங்களும் முறைப்பாடுகளைச் செய்து வருகின்றன.

யமீன் அவர்களின் அரசியல் வரவு இந்து சமுத்திரப் பிராந்தியத்தில் புதிய தளம்பல் நிலையை உருவாக்கியுள்ளது. இந்திய அரசியலில், 2015இல் இருந்து இந்து மேலாதிக்கவாதபாரதீய ஜனதா கட்சி ஆட்சியைக் கைப்பற்றியது.

சுண்ணத்து இஸ்லாமிய மதவாத கலாச்சாரத்தை தன்னகத்தே கொண்ட  மாலைதீவு அரசியலில்  ஏற்பட்ட மாற்றத்தை சாதகமாகப் பயன்படுத்திய சீனத் தலைமை மாலைதீவுக்கு பொருளாதார உதவிகள் செய்வதற்கு முன்வந்தது.

ஜனநாயகத்திற்கும் பொருளாதார முன்னேற்றத்திற்கும் இடையிலான தெரிவில் தனது நாட்டு மக்களுக்கு கூடுதலான நன்மை பயக்கக் கூடிய வகையில் பொருளாதார முன்னேற்றத்தை தாம் தெரிவு செய்ததாக நியாயம் தெரிவிக்கும் புதிய தலைவர் யமீன் அவர்கள், கூடுதலான சீன சார்பு கொள்கையைக் கடைப்பிடிப்பதாக மாலைதீவு எதிர்கட்சியினர் தெரிவிக்கின்றனர்.

சிறிலங்கா எவ்வாறு சீனக் கடன்பளுவை அதிகரித்து அம்பாந்தோட்டைத் துறைமுகப் பகுதியில் 90 சதவீதத்தை சீனாவுக்குத் தாரைவார்த்துக் கொடுத்ததோ, அதேபோல, திருப்பி அடைக்க முடியாத சீன கடன்பொறிக்குள் மாலைதீவு  கொண்டு செல்லப்படுவதுடன் மாலைதீவு தீவுக்கூட்டத்தில் சுமார் 16 தீவுகளை சீனாவுக்கு திருப்பிச் செலுத்த முடியாத கடனுக்காக கொடுத்து விட்டதாக ரொய்ட்டர்ஸ் செய்தி நிறுவனத்துக்கு மாலைதீவு ஜனநாயக கட்சி தலைவர் மொகமட் நசீட் குற்றம்சாட்டி உள்ளார்.

நாட்டின் மேல்நீதிமன்றம் அரசியல் கைதிகளை விடுவிக்க அண்மையில் உத்தரவிட்டது. இந்த விடுதலை தனது ஆட்சியைக் குழப்புவதற்கெதிரான சதிதிட்டம் என்றும், ஆட்சிக் கவிழ்ப்பு முயற்சி என்றும் தேசிய தொலைகாட்சியில் தோன்றிய ஆட்சித்தலைவர் யமீன் நாட்டில் அவசரகால நிலையைப் பிறப்பித்தார்.

இது யுத்தபிரகடனமோ, தொற்றுநோய்களுக்கு எதிரான நடவடிக்கையோ அல்லது இயற்கை அழிவுக்கு எதிரான நடவடிக்கையோ அல்ல, இது அவை எல்லாவற்றிலும் மேலானது என்று ஆட்சி தலைவர் பிரகடனம்செய்தார்.

maldives

தலைநகர் மாலே இல் இராணுவம் குவிக்கப்பட்டு நீதிபதிகள் கைது செய்யப்பட்டனர், கடந்த ஐந்து வருடங்களாக சிறையில் அடைக்கப்பட்டிருந்த எதிர்க்கட்சித் தலைவர்களும் நாட்டின் தலைவரின் நேரடிக் கட்டுப்பாட்டின்  கீழ் கொண்டு வரப்பட்டனர்.

அதேவேளை சிறிலங்காவில் புகலிடம் தேடியிருக்கும் பிரதான எதிர்கட்சியான மாலைதீவு ஜனநாயக கட்சி தலைவரும் முன்னைநாள் ஜனாதிபதியுமான நசீட் அவர்கள்  மாலைதீவு பிரச்சினையில் ஜனநாயகத்தை நிலை நிறுத்தும் வகையில் இந்தியா தலையீடு செய்யவேண்டும் என்று கேட்டுக் கொண்டார்.

இந்த நிலையில் பிராந்திய வல்லரசுகளான சீன, இந்திய நாடுகளுக்கு இடையில் முறுகல் நிலை ஏற்படும் வாய்ப்பு உருவாகி உள்ளது.

நசீட் அவர்கள் மாலைதீவின் அரசியல் நிலைமையில்  இந்தியா தலையீடு செய்யவேண்டும் என்று கோரிக்கை விடுத்தமையானது,- இந்திய பார்வையில் – 1988 ஆம் ஆண்டு சிறிலங்கா ஆயுதக்குழு ஒன்று மாலைதீவைக் கைப்பற்றும் நடவடிக்கையில் ஈடுபட்ட போது, இந்தியா “கற்றாளை நடவடிக்கை” என்ற பெயரில்ஆடிய நாடகத்தை பல இந்திய ஆய்வாளர்களுக்கும் நினைவுபடுத்தியது.

அதேபோல சிறிலங்காவில் இந்தியப் படைகள் தமிழ் மக்களை காப்பாற்றும் நடவடிக்கை என்ற பெயரில் உணவுப்பொதிகளை போட்ட சந்தர்ப்பமும் தொடர்ந்து  இந்திய இராணுவம் தரையிறக்கப்பட்ட சம்பவங்களும் இந்திய ஆய்வாளர்களின்  மீள் பார்வைக்கு வந்துள்ளது்

இவை இரண்டும் தேச இறையாண்மையை மீறும் செயலாகவே பார்க்கப்படுகிறது. இந்த இறையாண்மையை மீறும் செயற்பாடு இந்திய வரலாற்றில் ஏற்கனவே இடம்பெற்று இருப்பதால், மாலைதீவு அரசாங்கம் சீன உதவியைக் கோரும் நிலை ஏற்படக் கூடிய சந்தர்ப்பம் ஏற்பட்டுள்ளதாக கருதப்படுகிறது .

சீனாவின் அரச கட்டுப்பாட்டில் இயங்கும் பத்திரிகையான குளோபல் ரைம்ஸ், மாலைதீவில் இடம்பெற்று வரும் அரசியல் மாற்றம், சர்வதேச நியதிகளுக்கு  ஏற்ப உள்நாட்டு விவகாரமாக பார்க்கப்பட  வேண்டும் என்று அறிக்கை விட்டிருப்பதுடன், மாலைதீவு பிரச்சினைகளுடன் நேரடியாக விளையாடுவதை இந்தியா தவிர்த்து கொள்ள வேண்டும் என்றும் கருத்து வெளியிட்டுள்ளது.

பொருளாதார ஏகாதிபத்திய கொள்கையினூடாக  சிறிய நாடுகளில் தனது பொருளாதார செல்வாக்கை செலுத்தி சீனா தெற்காசியப்  பிராந்திய பிடியை இறுக்கி வருவதாக இந்திய  ஊடகங்கள், குற்றம்சாட்டி உள்ளன.

சிறிலங்காவைப் போல மாலைதீவுகளும் சீனாவின் ஒரு  பாதை ஒரு சூழல் திட்ட முயற்சிகளுக்கு  ஏற்ற  ஒரு கேந்திர முக்கியத்துவம் வாய்ந்த புவியியல் நிலையத்தைக் கொண்டுள்ளது. தனது எதிர்கால பொருளாதாரத் தேவையை நோக்கமாக கொண்டு மாலைதீவை தனது முழுக்கட்டுப்பாட்டினுள் வைத்திருப்பதன் மூலம் இந்து சமுத்திர பிராந்தியத்தில் ஒரு நிரந்தர நிலையை எடுத்து கொள்ள சீனா முயற்சிக்கிறது.

மாலைதீவில் ஏற்பட்டிருக்கும்கொந்தளிப்பு அரசியலுக்கும் சிறிலங்காவில் இடம்பெற்ற உள்ளுராட்சி சபைத் தேர்தல்களுக்குப் பின்பு ஏற்பட்டுள்ள அரசியல்  நிலைக்கும்  இடையில்  மிக நெருங்கிய தொடர்புகள் உள்ளன.

மாலைதீவின் மதவாதத்துக்கும் சிறிலங்காவின் பேரினவாதத்துக்கும் இடையில் உள்ள ஒற்றுமை- வேற்றுமைகள் குறித்து தொடர்ந்து அடுத்தவாரம் பார்க்கலாம்.

– லண்டனில் இருந்து ‘புதினப்பலகை’க்காக லோகன் பரமசாமி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *