மேலும்

தமிழ் கைதிகள் மீதான பாலியல் தாக்குதல்களுக்கு சிறிலங்கா படைத்தளபதிகள் உத்தரவிட்டனரா?

sri-lanka-armyசிறிலங்கா பாதுகாப்புப் படையினரால் பாலியல் ரீதியான வன்முறைகள் மற்றும் சித்திரவதைகளுக்கு உட்பட்ட 50 தமிழர்கள் தொடர்பான நேர்காணல் அறிக்கை ஒன்றை கடந்த வாரம் அசோசியேட்டட் பிரஸ் வெளியிட்டிருந்தது.

இவர்கள் சிறிலங்கா பாதுகாப்புப் படையினரால் கூட்டுப் பாலியல் வன்புணர்வுக்கு உட்படுத்தப்பட்டமை, பாலியல் ரீதியான தாக்குதல்களுக்கு உட்படுத்தப்பட்டமை மற்றும் முட்கம்பிகளால் தாக்கப்பட்டமை உட்பட பல்வேறு மீறல்களால் உடல் மற்றும் உளரீதியாகப் பாதிக்கப்பட்டுள்ளதை மருத்துவ அறிக்கைகள் மற்றும் உளவியல் வல்லுனர்களின் மதிப்பீடுகளின் மூலம் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

கடந்த வாரம் இடம்பெற்ற ஐ.நா மனித உரிமைகள் பேரவையின் பூகோள கால மீளாய்வில் சிறிலங்கா கலந்து கொண்ட வேளையில், அசோசியேட்டட் பிரஸ் சிறிலங்கா பாதுகாப்புப் படையினரால் மேற்கொள்ளப்பட்ட பாலியல் மீறல் மற்றும் சித்திரவதைகளை உறுதிப்படுத்தி அறிக்கை வெளியிட்டதானது சிறிலங்காவிற்கு அசௌகரியத்தை ஏற்படுத்தியது.

சித்திரவதைகள் தொடர்பாக தமது நாடானது ‘பூச்சிய சகிப்புத்தன்மைக் கொள்கையைக்’ கடைப்பிடிப்பதாக ஐ.நா மனித உரிமைகள் பேரவையிடம் சிறிலங்காப் பிரதிநிதிகள் உறுதியளித்துள்ள நிலையில், தற்போது வெளியிடப்பட்டுள்ள அசோசியேட்டட் பிரஸ்  அறிக்கையானது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

‘இவ்வாறான வக்கிரம் மிக்க வன்முறைச் சம்பவங்களைத் தான் ஒருபோதும் பார்த்திருக்கவில்லை. இது எனக்கு மிகவும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது’ என மனித உரிமை விசாரணையாளர் ஒருவர் தெரிவித்துள்ளார்.

சிறிலங்காப் படையினரைப் பொறுத்தளவில் இது அசாதாரண சம்பவமல்ல. இவ்வாறான பல்வேறு சம்பவங்களை சிறிலங்காப் படையினர் ஏற்கனவே மேற்கொண்டுள்ளனர்.

2016ல், சிறைகளில் தடுத்து வைக்கப்பட்ட போது தாம் பாலியல் வன்புணர்வுக்கும், பாலியல் சித்திரவதைகளுக்கும் உட்படுத்தப்பட்டதாகவும் பிரித்தானியாவைத் தளமாகக் கொண்டியங்கும் ‘சித்திரவதையிலிருந்து விடுபடல்’ (Freedom From Torture) அமைப்பால் 2016ல் மேற்கொள்ளப்பட்ட நேர்காணலில் கலந்து கொண்டவர்களில் 71 சதவீதமான தமிழர்கள் உறுதிப்படுத்தியிருந்தனர்.

தமிழர்கள் தமது கலாசாரம் காரணமாக இவ்வாறான சித்திரவதைகளை வெளியில் தெரிவிப்பதற்கு தயக்கம் காண்பிக்கின்றனர். பாதிக்கப்பட்ட அனைத்து தமிழ் மக்களும் தாம் சந்தித்த மீறல்களை வெளிப்படுத்தினார் இந்த எண்ணிக்கை மிகவும் அதிகமாக இருக்கும் என ‘சித்திரவதையிலிருந்து விடுபடல்’ அமைப்பு தனது அறிக்கையில் தெரிவித்திருந்தது.

சிறிலங்காவில் இடம்பெற்ற உள்நாட்டு யுத்தமானது முடிவிற்குக் கொண்டு வரப்பட்டு எட்டு ஆண்டுகள் கடந்து விட்டன. அத்துடன் இங்கு இடம்பெற்ற அதிகாரத்துவ ஆட்சி இரண்டு ஆண்டுகளுக்கு முன்னர் முடிவிற்கு வந்தது. இந்நிலையில் தற்போதும் இவ்வாறன சித்திரவதைகள் மற்றும் மீறல்கள் சிறிலங்காவில் தொடர்வது மிகவும் அதிர்ச்சியை ஏற்படுத்துகின்றது.

சிறிலங்காவில் மீண்டும் ஜனநாயக ஆட்சி ஏற்பட்டு விட்டதாக அனைத்துலக சமூகம் பாராட்டி வரும் இந்த வேளையில் அங்கு தொடரும் மீறல்களை உறுதிப்படுத்தி வெளியிடப்பட்டுள்ள அறிக்கையானது அனைத்துலக சமூகத்திற்கு அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.

சிறிலங்காவில் வாழும் சிறுபான்மைத் தமிழ் மக்கள் தொடர்ந்தும் சிறிலங்கா அரசால் பாலியல் வன்புணர்வு மற்றும் சித்திரவதைகளுக்கு உட்படுத்தப்படுவது அங்கு நல்லிணக்கம் ஏற்படுத்துவதற்கு தடையாகவே உள்ளது.

போர் முடிவிற்கு வரும் போது இவ்வாறான வன்முறைகள் தொடரப்பட்டால் மீண்டும் சிறிலங்காவில் ஆயுதக் குழுக்கள் தமது ஆயுதங்களைத் தூக்கும் நிலை ஏற்படலாம். இதனால் வேறு நாடுகளில் புலம்பெயர்ந்து வாழ்வோர் தமது நாட்டிற்குத் திரும்பிச் செல்வதற்கு இடையூறு ஏற்படும். அத்துடன் சிறிலங்காவில் குற்றச்செயல்கள் மேலும் அதிகரிக்கும்.

சிறிலங்கா அரசாங்கமானது போர் இடம்பெற்ற வலயங்களில் புலிகள் அமைப்பு மீண்டும் உருவாவதைத் தடுப்பதற்காக மிகப் பலமான இராணுவ மயமாக்கலை ஏற்படுத்தியுள்ளது. தமிழ் மக்கள் வாழும் மாவட்டங்களில் இருவருக்கு ஒரு இராணுவ வீரர் என்ற விகிதத்தில் சிறிலங்கா இராணுவத்தினர் கடமையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

இவ்வாறான பலத்த இராணுவ மயமாக்கலுக்கு உட்பட்டுள்ள தமிழ் மக்கள் தொடர்ந்தும் சிறிலங்காப் படையினரால் கண்காணிக்கப்படுவதுடன் துன்புறுத்தல்களுக்கும் ஆளாகின்றனர்.

புலிகள் அமைப்புடன் தொடர்புபட்டவர்கள் என்ற குற்றச்சாட்டின் பேரில் பலர் இன்றும் வெள்ளை வான்களில் கடத்தப்பட்டும் சித்திரவதைகளுக்கும் உள்ளாக்கப்படுகின்றனர்.

போர்க்காலத்திலும் சிறிலங்காவில் பாலியல் வன்புணர்வுச் சம்பவங்கள் இடம்பெற்றன. ஆனால் ஒப்பீட்டளவில் இந்தச் சம்பவங்கள் குறைவாகவே இடம்பெற்றன. ஏனெனில் போரில் பங்குபற்றிய ஒரு தரப்பினரான சிறிலங்காப் பாதுகாப்புப் படையினர் மட்டுமே இவ்வாறான பாலியல் வன்புணர்வு மீறல்களை மேற்கொண்டனர்.

மற்றைய தரப்பினரான தமிழீழ விடுதலைப் புலிகள் பாலியல் வன்புணர்வுகளில் ஈடுபடவில்லை. இவர்கள் இந்த மீறலுக்கு எதிராக மிகக் கடுமையான கோட்பாடு ஒன்றை உருவாக்கியிருந்தனர்.

சிறிலங்காப் படையினர் சோதனைச் சாவடிகளில் தமிழ் மக்களை சோதனை செய்யும் போது பாலியல் துன்புறுத்தல்களில் ஈடுபட்டனர். இதேபோன்று போரின் இறுதிக்கட்டத்தில் சரணடைந்த புலிகள் அமைப்பின் பெண் உறுப்பினர்களை மிகக் கொடுமையாக பாலியல் வன்புணர்வுகளில் ஈடுபடுத்திய காணொலிகள் ஏற்கனவே வெளியிடப்பட்டுள்ளன.

இதுமட்டுமல்லாது தமிழ் மக்கள் இடம்பெயர்ந்து வாழ்ந்த இடைத்தங்கல் முகாம்களிலும் சிறிலங்கா இராணுவத்தினர் பாலியல் வன்புணர்வுச் சம்பவங்களை மேற்கொண்டனர்.

வெளிநாட்டில் அமைதி காக்கும் பணிக்காகச் சென்ற சிறிலங்காப் படையினர் அங்கும் பல்வேறு பாலியல் சம்பவங்களில் ஈடுபட்டமை உறுதிப்படுத்தப்பட்டுள்ளன. குறிப்பாக ஹெய்ட்டியில் ஐ.நா அமைதி காக்கும் பணியில் ஈடுபட்ட சிறிலங்கா இராணுவப் படையினர் சிறுவர்களை பாலியல் வன்புணர்வுச் சம்பவத்திற்கு உட்படுத்தினர்.

சிறிலங்காவின் சிறைகளில் தடுத்து வைக்கப்படும் ஐந்து தமிழர்களில் ஒருவர் சிறிலங்காப் படைகளால் பாலியல் வன்புணர்வுக்கு உட்படுத்தப்படுவது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

இவ்வாறான பல்வேறு மீறல் சம்பவங்களில் சிறிலங்காப் பாதுகாப்புப் படையினர் ஈடுபடுகின்ற போதிலும் போர் முடிவுற்ற பின்னர் இடம்பெற்ற ஒரேயொரு பாலியல் வன்புணர்வுச் சம்பவத்திற்காகவும் போர்க் காலத்தில் இடம்பெற்ற இரண்டு சம்பவங்களுக்காகவும் மட்டுமே குற்றவாளிகள் தண்டிக்கப்பட்டுள்ளனர்.

ஹெய்ற்றியில் இடம்பெற்ற சிறுவர் பாலியல் மீறல் குற்றச்சாட்டுத் தொடர்பில் இதுவரை எந்தவொரு சிறிலங்கா இராணுவ வீரனும் தண்டிக்கப்படவில்லை.

சிறிலங்கா இராணுவ வீரர்கள் இவ்வாறான மீறல் சம்பவங்களில் ஈடுபடுவதற்கு பொறுப்பாகவிருக்கும் உயர்மட்ட இராணுவ அதிகாரிகள் தண்டிக்கப்படும் போது மாத்திரமே இவ்வாறான திட்டமிட்ட குற்றங்களைக் கட்டுப்படுத்த முடியும்.

சிறிலங்காவானது அனைத்துலக சமூகத்திற்கு தனது நாட்டில் மனித உரிமைகளை மேம்படுத்துவதாகவும் மீறல்கள் தொடர்பாக பொறுப்புக்கூறுவதாகவும் வாக்குறுதிகளை வழங்கியுள்ளது. ஆனால் இன்னமும் இந்த வாக்குறுதிகள் செயற்படுத்தப்படவில்லை.

போர்க் காலத்தில் இடம்பெற்ற குற்றங்களில் ஈடுபட்டவர்களைத் தண்டிப்பதாக சிறிலங்கா வாக்குறுதி வழங்கிய போதிலும் தனது படையினர் ஒருபோதும் நீதியின் முன் நிறுத்தப்படமாட்டார்கள் என சிறிலங்கா அரசாங்கம் தொடர்ந்தும் உறுதிப்பாட்டை அளித்து வருகிறது.

வெளியிடப்படவுள்ள பூகோள கால மீளாய்வு அறிக்கையில் சிறிலங்காவில் இடம்பெறும் மனித உரிமை மீறல்கள் விபரமாகப் பதிவுசெய்யப்படும்.  அனைத்துலக சமூகமானது தொடர்ந்தும் சிறிலங்காவை விசுவாசமிக்க நல்லதொரு நாடு போன்று நடாத்துவதுடன் இதனுடன் முன்னுரிமை வர்த்தக ஏற்பாடுகள் மற்றும் ஆழமான இராணுவ உடன்படிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.

இவ்வாறான செயற்பாடுகள் நாட்டில் நல்ல மாற்றத்தை ஏற்படுத்தும் என அனைத்துலக சமூகம் கருதினாலும் கூட, சிறிலங்காவில் தொடர்ந்தும் தமிழ் மக்கள் பாலியல் மீறல்கள் மற்றும் சித்திரவதைகளுக்கு உட்படுத்தப்படுவது கருத்திற் கொள்ளப்பட வேண்டும்.

ஆங்கிலத்தில் – Kate Cronin-Furman*
வழிமூலம்    – Washington post
மொழியாக்கம் – நித்தியபாரதி

*Kate Cronin– Furman is a postdoctoral research fellow in the International Security Program at the Harvard Kennedy School’s Belfer Center for Science and International Affairs. 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *