மேலும்

யாழ்.குடாநாட்டு வெள்ளத்துக்கு தவறான வடிகாலமைப்பு முறையே காரணம் – பிரதீப் கொடிப்பிலி

jaffna-flood (1)அண்மைய மழையின் போது, யாழ். குடாநாட்டில் பல இடங்களில் வெள்ளப் பாதிப்பு ஏற்பட்டமைக்கு, கடல்நீரேரியின் நீர்மட்டம் அதிகரித்தமை காரணம் அல்ல என்று சிறிலங்கா அனர்த்த முகாமைத்துவ நிலையத்தின் பிரதிப் பணிப்பாளர் பிரதீப் கொடிப்பிலி தெரிவித்துள்ளார்.

அண்மையில் குடாநாட்டில் பெய்த தொடர்மழையினால், பல இடங்களில் வெள்ளப் பாதிப்பு ஏற்பட்டது. இந்த நிலையில், யாழ். குடாநாட்டின் புவியியல் அமைப்பில் மாற்றங்கள் ஏற்பட்டுள்ளதாகவும், இன்னும் சில ஆண்டுகளில் குடாநாடு நீரில் மூழ்கி விடும் என்றும், ஊடகங்களில் செய்திகள் வெளியாகிக் கொண்டிருக்கின்றன.

புவியியல் நிபுணர்கள் என்ற மாத்திரம் அடையாளப்படுத்திக் கொண்டவர்களால், குடாநாட்டின் புவியியல் சூழல் குறித்து ம்க்கள் மத்தியில் பீதியை ஏற்படுத்தும் தகவல்கள் வெளியிடப்பட்டு வருகின்றன.

இந்த நிலையில், அண்மைய  மழையின் போது, யாழ். குடாநாட்டில் வெள்ளம் ஏற்பட்டமைக்கு, வடிகாலமைப்புகளில் ஏற்பட்ட அடைப்பே காரணம் என்று அனர்த்த முகாமைத்துவ நிலையத்தின் பிரதிப் பணிப்பாளரும் ஊடகப் பேச்சாளருமான பிரதீப் கொடிபிலி தெரிவித்துள்ளார்.

கொழும்பு ஆங்கில வாரஇதழ் ஒன்றுக்கு இதுபற்றி அவர் கருத்து வெளியிடுகையில், “மழைநீர் அந்தப் பகுதியில் தடைப்பட்டமையே வெள்ள நிலைமைக்கு முக்கிய காரணம்.  அண்மைய மழையினால், கடல்நீரேரியின் நீர்மட்டமோ, அந்தப் பகுதி குளங்களின் நீர்மட்டமோ அதிகரிக்கவில்லை.” என்று தெரிவித்துள்ளார்.

அதேவேளை, அனர்த்த முகாமைத்துவ நிலையத்தின் யாழ்ப்பாண செயலக உதவிப் பணிப்பாளர், எஸ்.ரவி, இது தொடர்பாக கருத்து வெளியிடுகையில்,

“நல்லூர், கோப்பாய், சண்டிலிப்பாய் மற்றும் பருத்தித்துறை பிரதேச செயலர் பிரிவுகளில் சில பகுதிகளிலும், யாழ். நகரில் கரையோரப் பகுதிகளிலும் இன்னமும் வெள்ளப் பாதிப்பு உள்ளது. தாழ்வான பகுதிகளில் வாழும் மக்கள் இன்னமும் பாதிக்கப்பட்டுள்ளனர்.

யாழ்ப்பாணத்தில் 100 மி.மீ இற்கும் அதிகமான மழை வீழ்ச்சி பதிவாகியுள்ளது.

வெள்ளம் ஏற்பட்டமைக்கு இந்தப் பிரதேசத்தில் உள்ள தவறான வழிகாலமைப்பு முறையாகும். வடிகால்களில் குப்பைகளை பொதுமக்கள் வீசியதால், அவை அடைப்பை ஏற்படுத்தியுள்ளன. எதிர்காலத்தில் இதுபோன்ற நிலை ஏற்படாமல் தடுப்பதற்குரிய விழிப்புணர்வு நடவடிக்கை மேற்கொள்ளப்பட வேண்டும்.” என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *