மேலும்

மறக்கப்பட்ட இலங்கைத் தமிழ் அகதிகள்

Sri-Lankan-Tamil-refugeesஅண்மைய மாதங்களில் ஊடகங்களில் இந்தியாவில் தஞ்சம் புகுந்துள்ள ரொஹிங்யா அகதிகள் தொடர்பான செய்திகள் முதன்மை இடத்தைப் பிடித்துள்ளன. ஆனால் இந்தியாவில் கிட்டத்தட்ட 35 ஆண்டுகளாக அகதி வாழ்வு வாழும் ஈழத்தமிழ் மக்கள் தொடர்பாக ஊடகங்கள் முக்கியத்துவம் காண்பிக்கவில்லை.

பரிதாபகரமான வாழ்விடங்கள், சுதந்திரமாக நடமாடுவதற்கு விதிக்கப்பட்டுள்ள தடைகள், வாழ்வாதாரத்தைக் கட்டியெழுப்புவதற்கான வாய்ப்புக்கள் குறைவாக உள்ளமை போன்றன இந்தியாவின் தமிழ்நாட்டில் 1983 தொடக்கம் வாழும் ஒரு இலட்சம் வரையான ஈழத்தமிழ் மக்கள் சந்திக்கும் பிரச்சினைகளாகும்.

இவை தவிர, சிறிலங்காவின் மத்திய மலைநாட்டை பூர்வீகமாகக் கொண்ட மக்களுக்கு குடியுரிமை வழங்கப்படாமை பாரியதொரு பிரச்சினையாகக் காணப்படுகின்றது.

தமிழ்நாட்டில் தஞ்சம் புகுந்து வாழும் ஈழத்தமிழ் அகதிகள் சமூக மற்றும் உளவியல் பிரச்சினைகளுக்கு முகங்கொடுப்பதால் இவர்களில் பலர் தற்கொலை செய்துள்ளதுடன், பலர் பாடசாலைக் கல்வியைத் தொடரமுடியாத நிலையிலும் இன்னும் பலர் சிறுவயதுத் திருமணத்தில் ஈடுபடுவதாகவும் அறிக்கைகள் சுட்டிக்காட்டுகின்றன.

நடுத்தர வர்க்கத்தைச் சேர்ந்த அகதிகள் பலர் தமது பிள்ளைகளின் எதிர்காலத்தை நினைத்து கவலையடைவதாகவும் தமிழ்நாட்டு அகதி முகாம்களில் வாழும் ஈழத்தமிழ் அகதிகளில் 40 சதவீதமானவர்கள் 18 வயதிற்குக் குறைவானவர்களாக உள்ளதாகவும் அறிக்கைகள் உறுதிப்படுத்துகின்றன.

இவர்களில் 28,500 பேர் வரை நாடற்றவர்கள் எனும் நிலையில் வாழ்கின்றனர். ஈழத்தமிழ் அகதிகள் சிறிலங்காவிற்குத் திரும்பும் நடவடிக்கையை இலகுபடுத்துவதற்கான சட்டத் திருத்தத்தை சிறிலங்கா அரசாங்கமானது 2003 மற்றும் 2009ல் மேற்கொண்டது.

இதேபோன்று இரு நாட்டு தமிழ் அரசியற் கட்சிகள் கூட ஈழத்தமிழ் அகதிகள் அவர்களது சொந்த நாடான சிறிலங்காவிற்குத் திரும்பிச் செல்ல வேண்டும் என்பதில் விருப்பம் காண்பிக்கின்றன. ஏனெனில் இதன் மூலம் சிறிலங்காவின் வடக்கு மாகாணத்திற்கான தமிழ் நாடாளுமன்ற உறுப்பினர்களின் எண்ணிக்கை மேலும் பலப்படும் என தமிழ் அரசியற் கட்சிகள் கருதுகின்றன.

சிறிலங்காவில் உள்நாட்டு யுத்தம் முடிவடைந்த பின்னரும் கூட தமது சொந்த நாட்டிற்குத் திரும்பிச் செல்லும் ஈழத்தமிழ் அகதிகளின் எண்ணிக்கை மிகக் குறைவாகவே உள்ளது. கடந்த எட்டரை ஆண்டுகளில் 10 சதவீதமான ஈழத்தமிழ் மக்களே தமிழ்நாட்டு அகதி முகாம்களிலிருந்து சிறிலங்காவிற்குத் திரும்பிச் சென்றுள்ளனர்.

இவர்கள் சொந்த நாட்டிற்குத் திரும்பிச் செல்வதற்கான நுழைவிசைவுகளை இலவசமாக வழங்குவதற்கும், இவர்கள் இந்தியாவில் அனுமதியின்றித் தங்கியிருந்ததற்கான குற்றப்பணம் அறவிடப்படமாட்டாது என 2016 ஜனவரியில் இந்திய அதிகாரிகளால் தீர்மானம் எடுக்கப்பட்டது.

ஆயினும் தமிழ்நாட்டு அகதி முகாம்களில் தங்கியுள்ள ஈழத்தமிழ் மக்கள் சிறிலங்காவிற்குத் திரும்பிச் செல்வதில் விருப்பம் காண்பிக்கவில்லை. இவர்கள் தமது சொந்த நாட்டிற்குத் திரும்பிச் செல்வதற்குத் தயக்கம் காண்பிப்பதற்குப் பல்வேறு காரணங்கள் உள்ளன.

குறிப்பாக, இந்த மக்களின் வாழ்வாதாரமாகும். அதாவது தமிழ்நாட்டின் 107 முகாம்களில் வாழும் 62,000 வரையான ஈழத்தமிழ் அகதிகள் இந்திய மத்திய அரசாங்கம் மற்றும் மாநில அரசாங்கத்திடமிருந்து பல்வேறு நிவாரணங்களைப் பெறுகின்றனர்.

மேலும் கடந்த சில ஆண்டுகளாக ஈழத்தமிழ் இளைஞர்கள் மற்றும் யுவதிகளை தொழில் துறைகளில் குறிப்பாக பொறியியல் துறையில் இணைத்து பணியாற்றுவதற்கான நடவடிக்கையை தமிழ்நாட்டு அரசாங்கம் மேற்கொண்டு வருகிறது. இதன்மூலம் தமிழ்நாட்டு அகதி முகாம்களில் வாழும் 36,800 வரையான இளைஞர், யுவதிகள் தொழில் வாய்ப்பைப் பெறத் தகுதி பெற்றுள்ளனர்.

தமது வாழிடங்கள் மற்றும் தொழில்களின் தரங்கள் குறைவாக இருப்பினும் கூட, சில அகதி முகாம்களில் வாழும் மக்கள் தமது வாழ்வாதாரத்தை முன்னேற்றி வருகின்றனர். தவிர, ஈழத்தமிழ் அகதிகளின் புதிய தலைமுறையினர் தமிழ்நாட்டிலேயே பிறந்து வளர்ந்துள்ளதால் அவர்களைப் பொறுத்தளவில் சிறிலங்கா என்பது அவர்களுக்கு அந்நிய நாடாகவே உள்ளது.

தாங்கள் மீண்டும் சிறிலங்காவிற்குத் திரும்பிச் சென்றால், தமிழ்நாட்டில் தற்போது பெறும் நிவாரண உதவிகள் போன்ற நலன்களை சிறிலங்காவில் தங்களால் பெறமுடியாது என ஈழத்தமிழ் அகதிகள் கருதுகின்றனர். குறிப்பாக 2015ல் சிறிலங்காவிற்குத் திரும்பிச் சென்றவர்களுக்கு நிவாரண உதவிகள் மற்றும் ஏனைய நலன்புரித் திட்டங்கள் வழங்கப்படவில்லை என்பதாகும்.

மலைநாட்டைச் சேர்ந்த ஈழத்தமிழ் அகதிகளுக்கு சிறிலங்காவில் சொந்த நிலம் இல்லை. இவர்கள் சிறிலங்காவிற்குத் திரும்பிச் செல்ல வேண்டுமாயின் இவர்களுக்கென சிறிய நிலப்பரப்பு சொந்தமாக வழங்கப்பட வேண்டாம். இல்லாவிட்டால் இவர்கள் தமது நாட்டிற்குத் திரும்பிச் செல்ல விரும்பமாட்டார்கள். மலையகத் தோட்டத் தொழிலாளர்கள் தற்பொது எதிர்நோக்கும் பிரச்சினைகளும் இங்கு கவனத்திற் கொள்ளப்பட வேண்டும்.

தற்போது சிறிலங்கா மற்றும் இந்தியா ஆகிய இரு நாடுகளைப் பொறுத்தளவில் அகதிகள் நாடு திரும்புதல் என்பது முன்னுரிமைப்படுத்தப்பட வேண்டிய விடயமாகக் காணப்படவில்லை. ஆனால் தமிழ்நாட்டில் பெரும் எண்ணிக்கையான தமிழ் அகதிகள் தொடர்ந்தும் தங்கியிருக்கும் செலவைப் பொறுப்பதற்கு தமிழ்நாட்டு அரசாங்கத்தால் இயலாத காரியமாகும்.

ஆகவே இவ்விரு நாடுகளும் இணைந்து இந்த மக்களின் பிரச்சினையை விரைவாகத் தீர்ப்பதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும். அவ்வாறு தீர்வு எட்டப்படுமிடத்து இந்தியாவைப் பொறுத்தளவில் நீண்ட ஆண்டுகளாகத் தொடரும் பிரச்சினை ஒன்று தீர்க்கப்படும்.

அதேவேளை சிறிலங்காவைப் பொறுத்தளவில் ஈழத்தமிழ் அகதிகளின் பிரச்சினை தீர்க்கப்படுமிடத்து அது இனநல்லிணக்கத்திற்கு வழிவகுக்கும்.

இந்த அடிப்படையில் நோக்குமிடத்து தமிழ்நாட்டில் கடந்த ஆண்டு ஏற்பட்ட அரசியல் மாற்றங்கள் சிறிலங்காவுடன் பேச்சுக்களை மீண்டும் தொடர்வதற்கான வாய்ப்பை வழங்கியுள்ளது.

ஈழத்தமிழ் அகதிகளை சிறிலங்காவிற்குத் திருப்பி அனுப்புதல் தொடர்பாக இவ்விரு நாட்டு அரசாங்கங்களுடன் விரைவில் கலந்துரையாடித் தீர்வை எட்ட வேண்டும். இதற்கான முழுமையான தீர்வுத் திட்டம் ஒன்று தயார்ப்படுத்தப்பட வேண்டும்.

இக்கலந்துரையாடலில் ஈழத்தமிழ் அகதிகள் சார்பாக அவர்களது பிரதிநிதிகளும் மற்றும் தமிழ்நாட்டு அரசாங்கப் பிரதிநிதிகள், சிறிலங்காவின் வடமாகாண சபைப் பிரதிநிதிகள் இதில் கலந்து தீர்வைக் காண வேண்டும்.

இந்தியாவில் தொடர்ந்தும் தங்கவிரும்பும் ஈழத்தமிழ் மக்களுக்கு குடியுரிமையை வழங்குவது தொடர்பாக இந்தியா கருத்திலெடுத்துச் செயற்பட வேண்டும். அதாவது பாகிஸ்தான் மற்றும் ஆப்கான் அகதிகள் தொடர்பில் இந்தியாவால் முன்னெடுக்கப்பட்ட தீர்வை ஈழத்தமிழ் அகதிகள் தொடர்பிலும் பிரயோகிக்க வேண்டும்.

பிரச்சினைகள் சுமூகமாகத் தீர்க்கப்பட்ட பின்னர் தமிழ்நாட்டு அகதிமுகாம்களை மூடுவதற்கான நடவடிக்கையை அதிகாரிகள் முன்னெடுக்க முடியும்.

இதன்மூலம் சிறிலங்காவின் உள்நாட்டுப் போர் இடம்பெற்ற காலப்பகுதியை விட அதிக காலமாக இழுபறி நிலையிலுள்ள ஈழத்தமிழ் அகதிகளின் பிரச்சினை முடிவிற்கு வருவது நிச்சயமானதாகும்.

வழிமூலம்    – The Hindu
ஆங்கிலத்தில் – T. Ramakrishnan
மொழியாக்கம் – நித்தியபாரதி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *